கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

மாமாவும் எங்கிட்ட ரொம்ப அன்பா பேசினாருடீ. இன்னும் ஒரே மாசத்துல எங்க கல்யாணத்தை முடிச்சிடணும்ன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க. சுகா… இதெல்லாத்துக்கும் முக்கியமான காரணம் நீதான்டீ. அனு தன் மனதில் பொங்கும் மகிழ்ச்சியை அவளிடம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வரை சொல்லி சொல்லி நெகிழ்ந்து கொண்டிருந்தாள்.

சுந்தரியும், சம்பத்தின் கல்யாண விஷயத்தை மட்டுமல்லாமல், சென்னையில் குமாரசுவாமியின் கம்பெனியில் ஹெச். ஆர். டிவிஷனில் அவன் சேர்ந்துவிட முடிவெடுத்திருப்பதை பற்றியும் சுகன்யாவிடம் ஒரு வாரத்திற்கு முன் சொல்லியிருந்தாள்.

வேணிக்கு இது எத்தனையாவது மாசம்? எட்டாயிருக்கணுமே? அவகிட்டவும் மனசு விட்டு பேசி ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடிச்சி. இப்ப பேசலாமா? இப்ப மணி பத்தாயிடுச்சே? சங்கரும் அவளும் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தாலும் இருக்கலாம். இப்ப அவளை எதுக்காக கூப்பிட்டு தொந்தரவு பண்ணணும்? நாளைக்கு ஈவினிங் அவகிட்ட கண்டிப்பா பேசிடலாம்.

கண்களை மூடி படுத்திருந்தவள் சட்டென புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்து வானத்தை நிமிர்ந்து பார்த்தாள் சுகன்யா. இத்தனை குளுமையான நிலவொளியிலும் ஏன் என் மனசு இப்படி எட்டு திசையிலும் தேவையே இல்லாம ஓடிகிட்டு இருக்கு? ஏன் எனக்கு வேண்டியவங்களையெல்லாம் திரும்ப திரும்ப நினைச்சுப் பாக்குது?

ஏன்டீ சுகன்யா… உனக்கு வேண்டியவங்க எல்லாரையும் நீ இன்னைக்கு நினைச்சிட்டியா? மனம் அவள் நெற்றிப்பொட்டில் பட்டென அடித்தது.

யெஸ். சுகன்யா தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

பொய் சொல்லாதடி..!. எங்கிருந்தோ ஒரு குரல் அவள் காதில் கேட்டது. தன் தலையை விருட்டென ஆட்டிக்கொண்டாள் சுகன்யா.

பயிற்சி முடிந்தபின், தில்லியிலேயே பணி புரிய தனக்கு விருப்பமென சுகன்யா எழுதிக்கொடுத்த விண்ணப்பம், ஒரே நாளில் அங்கீகரிக்கப்பட்டு, அவளுக்கு ட்ரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டிலேயே சேர உத்திரவு கொடுக்கப்பட்டதோடு அல்லாமல், அதே வளாகத்துக்குள்ளாகவே அவளுக்கு தங்குவதற்காக அரசாங்க க்வார்ட்டர்ஸும் ஒதுக்கப்பட்டுவிட்டது.

சுகன்யா எடுத்த இந்த முடிவு தெரிந்ததும், குமாரசுவாமி தன் மனதுக்குள் சிறிது ஆடித்தான் போனார். நடராஜனிடம் இதைச்சொல்லி வருத்தப்படவும் செய்தார். சிவதாணுவும், சுந்தரியும் தங்களால் ஆனமட்டும் அவள் மனதை மாற்ற முயற்சி செய்து கடைசியில் தங்கள் முயற்சியில் தோற்றுப்போனார்கள்.

தாத்தா…! இப்பத்தான் நான் எல்லாத்தையும் மறந்துட்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிச்சிருக்கேன்! தில்லியிலே நான் நிரந்தரமாகவா இருக்கப்போறேன்? ஆஃப்டர் ஆல், மிஞ்சி மிஞ்சிப்போனா இன்னும் ஒரு வருஷம்தான் இங்கே நான் இருக்கமுடியும்? அதுக்கு அப்புறம் என்னை தமிழ்நாட்டுக்கு மாத்திடுவாங்க. ஒண்ணு நான் பாண்டிசேரியில வொர்க் பண்ண வேண்டியிருக்கும்; இல்லேன்னா சென்னை ஆஃபீசுக்கே வந்திடுவேன். நான் என்ன இன்னும் சின்னப்பொண்ணா? என்னைப்பத்தி ரொம்பக் கவலைப்படாதீங்க தாத்தா!

பாட்டியும், நீங்களும், ஃப்ளைட்ல, ரெண்டு மணி நேரத்துல தில்லிக்கு வந்துடலாம். ஒரு மாசம் என்னைப் பாக்கறதுக்கு நீங்க வாங்க. அடுத்த மாசம் உங்களையெல்லாம் பாக்கறதுக்கு நான் ஓட்டமா ஓடி வந்துடறேன். இல்லையா; நீங்க என் கூடவே இருக்கலாம். எனக்குன்னு இங்கே தனி வீடு கிடைச்சிருக்கு. சுகன்யா மிகவும் பிடிவாதமாக தான் எடுத்த முடிவில் நிலையாக நின்றாள்.