கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 54 19

“நான் ரூமுக்கு போறேன்டீ சுகன்யா… நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க…” காரை நெருங்கியதும் அனு சற்றே தயங்கி நின்றாள்.

“வொய்… அனு?எங்க கூட வர்றதுக்கு உனக்கென்ன தயக்கம்? ஏதோ என்னை முன்னே பின்ன தெரியாதவன் மாதிரி ஏன் நினைக்கிறே?”

“அப்படீல்லாம் இல்லே சம்பத்…”

“என் பர்த்டேன்னைக்கு, எங்க கூட லஞ்ச் சாப்பிட உனக்கு இஷ்டமில்லையா? இல்லே; என்னையே உனக்குப் பிடிக்கலையா?” சம்பத் பேசியபின் சட்டெனத் தன் நாக்கை கடித்துக் கொண்டான். ஏதோ நினைவில் சட்டென அவளுடைய இடது கையைப் பிடித்தான்.

உன்னைப் பிடிக்காமலாடா, உன் பொறந்து நாளுக்கு கோவிலுக்குப் போய், உன் பேர்ல அர்ச்சனை பண்ண நினைச்சேன்? என் காதல் வேண்டாம்ன்னு என் மனசை நீ நொறுக்கிட்டுப் போயிருக்கலாம்.

ஆனா நான் இன்னும் உன்னை மறக்கவும் முடியாமே, என் மனசுலேருந்து உன்னை தூக்கி எறியவும் முடியாமே ஒரு பைத்தியக்காரியா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என் மனசுல இருக்கறது உனக்கு புரியாதுடா. அனு தன் மனதுக்குள் புழுங்கினாள்.

“அத்தான்.. அனு இன்னைக்கு, அவ மனசுக்கு ரொம்ப நெருக்கமான யார் பேருக்கோ கோவில்லே அர்ச்சனை பண்றதா இருந்தா. அவ மனசுக்கு நெருங்கியவங்க யாருங்கறதை நான் யதேச்சையா கண்டுபுடிச்சிட்டேன்.” அவர்கள் இருவரும் ஒன்றாக உட்காரட்டும் என்ற எண்ணத்தில் சுகன்யா காரின் முன் கதவை திறந்து உட்கார்ந்து கொண்டாள். அனுவும் சம்பத்தும் பின் சீட்டில் அமர்ந்தனர்.

“சுகன்யா… பிளீஸ்… கொஞ்ச நேரம் சும்மாருடி…” அனு தன் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். காரில் உட்கார்ந்த பின்னும் சம்பத், அனுவின் கரத்தை தன் பிடியிலிருந்து விடவில்லை.

“அனு… பீ சீர்ஃபுல்…” சம்பத் ஆதரவாக அவளை நோக்கி புன்னகைத்தான்.சம்பத்தின் கரத்திலிருந்து தன் கையை மெல்ல விடுவித்துக்கொண்டாள் அனு.

“அத்தான்… அனு சொல்ற மாதிரி நான் சும்மாயிருக்கப் போறது இல்லே. நீங்க என்ன காரணத்துக்காக அனுவோட அன்பை, காதலை வேணாம்ன்னு சொன்னீங்களோ… இப்ப அதைப்பத்தி நான் ஆராய்ச்சி பண்ண விரும்பலே. அதனால எந்த பிரயோசனமும் இல்லே. ஒரு விதத்துல அது ஏற்கனவே முடிஞ்சு போன விஷயம்.”

“சுகன்யா… இப்ப இதைப்பத்தி நாம பேசியே தீரணுமா?” சம்பத் தன் முகத்தை, கைக்குட்டையால் துடைத்துக் கொண்டிருந்தவன், ஓரக்கண்ணால் அனுவைப் பார்த்தான். சுகன்யாவின் மனதிலிருப்பது என்னவென்று அவனுக்கு புரிந்துவிட்டது.

அனு யாரையுமே பார்க்காமல் கார் கண்ணாடியின் வழியே சாலையை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள்.சுகன்யா அடுத்ததாக என்னப்பேசுவாள் என்பது அவளுக்கும் புரிந்துவிட்டது.

“அத்தான்.. சுத்தி வளைச்சுப்பேச எனக்கு விருப்பமில்லே. உங்களுக்கும் அது பிடிக்காது. நாமெல்லாம் குழந்தைகளும் இல்லே. இந்த வயசுல ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்க்கையிலே உண்மையா இருக்கறதுதான் முக்கியம். அதுதான் புத்திசாலித்தனம்.”

“அனு என்னோட ஃப்ரெண்ட்.. அனுவும் நீங்களும் ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸா இருந்திருக்கீங்க. உங்களுக்கு அவளைப்பத்தி, அவ குணத்தைப்பத்தி, தெரிஞ்ச மாதிரி எனக்கும் அவளைப்பத்தி ஓரளவுக்குத் தெரியும்.”

“இந்த நிமிஷத்துல, உங்க மேல அனு வெச்சிருக்கற ஆசை, காதல், நேசம், இதைப்பத்தியெல்லாம் எனக்கு நல்லாத் தெரியும்.” ஆனா உங்களுக்குத் தெரியாது.நீங்க அதை தெரிஞ்சுக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்.”