மதன மோக ரூப சுந்தரி – 5 15

மேகலா தனது வாயில் ஒரு சிகரெட்டை பொருத்திக் கொண்டாள்.. தீக்குச்சி உரசி வாசுகிக்கு பற்றவைத்துவிட்டு, தனது சிகரெட்டுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டாள்..!! தென்றல் ஒரு கையால் மூக்கை இறுகப் பொத்திக்கொள்ள.. வாசுகியும், மேகலாவும் சிகரெட் புகைக்க ஆரம்பித்தார்கள்.. ஆரம்பித்ததுமே, ஆர்வக்கோளாறில் அதிக அளவு புகையை சர்ரென உள்ளிழுத்து..

“லொக்.. லொக்.. லொக்..!!” என கண்களில் நீர் வருமளவிற்கு இருமினார்கள்.

“எ..என்னடி இது.. நல்லாவே இல்ல..!!” முகத்தை அஷ்டகோணலாக்கியவாறு சொன்னாள் மேகலா.

“ஆரம்பத்துல அப்படித்தாண்டி இருக்கும்.. குடிக்க குடிக்க நல்லாருக்கும்..!!” ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அவளை என்கரேஜ் செய்தாள் வாசுகி.

“ஏய்.. சீக்கிரம் குடிச்சு முடிங்கடி.. இருட்ட ஆரம்பிச்சிடுச்சு.. மழை வேற வர்ற மாதிரி இருக்குது..!!”

இயல்பாக சொல்லிக்கொண்டே வானத்தை பார்த்த தென்றல்.. எதேச்சையாக பார்வையை வேறுபக்கம் சுழற்றியபோதுதான்.. அந்த உருவம் அவளது கண்களில் பட்டது..!! அங்கிருந்து சற்றே தூரமாக.. அடர்ந்த காட்டு மரங்களுக்கு இடையே.. அசைவேதுமில்லாமல் தனியே நின்றிருந்த.. அந்த சிவப்பு அங்கி போர்த்திய உருவம்..!! இவர்கள் மூவரையுமே வெறித்துப் பார்ப்பது போன்றொரு தோற்றம்..!!

அந்த உருவத்தை பார்த்ததும் தென்றலுக்கு அப்படியே முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது.. பயரத்தம் பாய்ந்ததில் அவளது இருதயம் தறிகெட்டு துடிக்க..

“ஆஆஆஆஆஆஆஆ..!!!” என்று பெரிதாக அலறினாள். அலறியவேகத்தில் தடுமாறி விழப்போனவளை வாசுகி தாங்கிப்பிடித்துக் கொண்டாள்.

“ஏய்ய்ய்.. என்னடி ஆச்சு..??”

“கு..குறிஞ்சி.. குறிஞ்சிடி..!!” தென்றல் திணறலாக சொன்னாள். அவளது முகத்தில் கொப்பளித்த அந்த அதீத மிரட்சி, மற்ற இரு பெண்களுக்குமே உடனடியாய் ஒரு பதற்றத்தை கிளப்பியிருந்தது.

“எ..எங்க..??”

“அ..அதோ.. அங்..”

சொல்லவந்ததை முடிக்காமலே நிறுத்தினாள் தென்றல்.. அவள் கைநீட்டிய திசையில் இப்போது அந்த உருவத்தை காணவில்லை.. காட்டுமரங்கள்தான் காற்றுக்கு மெலிதாக தலையசைத்துக் கொண்டிருந்தன..!! பயந்துபோய் திரும்பிப்பார்த்த தோழிகள் இருவரும் குழம்பிப்போனார்கள்..!!

“எ..எங்கடி.. யாரையும் காணோம்..??”

“அ..அங்க.. அங்கதான்டி நின்னுட்டு இருந்தா.. அதோ.. அந்த மரத்துக்கு பக்கத்துல..!!”

“வெ..வெளையாடாத தென்றல்..!!”

“அடச்சீ.. வெளையாடலடி.. நெஜமாத்தான் சொல்றேன்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேன்..!! உடம்பு பூரா செவப்பு அங்கிய போத்திக்கிட்டு.. ஒத்தையா அங்க நின்னுட்டு இருந்தா.. நம்மளயே உத்த்த்து பாத்துக்கிட்டு இருந்தா.. அப்டியே கொலை நடுங்கிப்போச்சு எனக்கு..!!” படபடவென சொன்னாள் தென்றல்.

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. ‘டமார்ர்ர்’ என்று விண்ணில் ஒரு இடிமுழக்கம்.. ஊசிச்சிதறல்களாய் சிலுசிலுவென மழைத்தூறல்..!! மூன்று பெண்களின் முகத்திலுமே இப்போது ஒரு கிலி பரவுவதை காணமுடிந்தது.. மூன்று பேருடைய நெஞ்சுமே பக்பக்கென அடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.. தென்றலிடம் மட்டும் சற்று அதிகப்படியாகவே அந்த படபடப்பு..!!

சிகரட்டை பிடித்திருந்த விரல்கள் நடுநடுங்க, மேகலா இப்போது சொன்னாள்..!!

“கெ..கெளம்பிறலாம்டி..!!”

வாசுகியும், மேகலாவும் கையிலிருந்த சிகரெட்டை படக்கென விசிறியெறிந்தனர்.. மூவரும் மலைச்சரிவில் விருட்டென ஏறி, நடக்கிற பாதையை அடைந்தனர்.. அகழி இருக்கிற திசையை நோக்கி அவசர அவசரமாக நடந்தனர்..!! சில்லென்று சிதறிய மழைத்தூறலை மீறி, நெற்றியில் வியர்வை அரும்பியது அவர்களுக்கு.. உடலுக்குள் ஜிவ்வென்று ஒரு பய சிலிர்ப்பு..!! அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி.. எல்லா திசைகளையும் ஒரு பயப்பார்வை பார்த்துக்கொண்டே விரைந்தனர்..!!

“ப..பயமா இருக்குடி வாசுகி..!!” உடைந்துபோன குரலில் சொன்னாள் மேகலா.

“அடச்சீ.. ஒன்னும் இல்லடி..!!” அவளுக்கு தைரியமூட்டினாள் வாசுகி.

திடீரென்று.. அவர்களுக்கு வெகுஅருகில்.. ‘ஸரஸரஸர’வென காய்ந்த சருகுகள் மிதிபடுகிற சப்தம் கேட்டது..!! அந்த சப்தத்தை கேட்டதும்.. அப்படியே ‘ஹக்க்க்க்’ என்று நெஞ்சடைத்துப்போய், மூன்று பெண்களும் அசையாமல் உறைந்து நின்றனர்..!! பயத்தில் விரிந்த விழிகளும், மிரட்சி அப்பிய முகமும், ஏறியிறங்குகிற மார்புப்பந்துகளுமாக.. சப்தம் வந்த திசையை மெல்ல திரும்பிப் பார்த்தனர்..!!

“ஸர்ர்ர்ர்ர்ர்ரக்க்க்க்க்க்…!!!” – யாரோ ஒரு மரத்தின் மறைவில் இருந்து இன்னொரு மரத்தின் மறைவுக்கு ஓடினார்கள்.

“ஆஆஆஆஆ..!!” வாயில் கைவைத்து அலறினாள் தென்றல்.

“யா..யாரு.. யாரது..???” சற்று துணிச்சலாக கத்தினாள் வாசுகி.

அதேநொடியில்.. வானத்தில் ‘திடும் திடும்’ என அடுத்தடுத்து இடியோசை.. ‘பளிச் பளிச்’ என மின்னல் வெளிச்சம்..!! மேகங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொள்ள, ‘ச்ச்சோ’வென்று மழைகொட்ட ஆரம்பித்தது.. நின்றிருந்த பெண்களை சடசடவென நனைத்தன மழைத்துளிகள்..!!

“எ..எனக்கு ரொம்ப பயமா இருக்குடி.. போ..போயிறலாம்டி..!! இ..இங்க நிக்கிற ஒவ்வொரு..”

வாய்க்குழறலாக பேசிய மேகலா, சொல்லவந்ததை முழுதாக முடிக்காமல் அப்படியே நிறுத்தினாள்.. அவளது பார்வை இப்போது ஓரிடத்தில் நிலைகுத்திப் போயிருந்தது.. ஓவென்று திறந்திருந்தன அவளது உதடுகள்.. அவளது முகத்திலும், கண்களிலும் அப்பட்டமாய் அப்படி ஒரு பீதி..!!

“எ..என்னடி..??”

வாசுகியின் கேள்விக்கு மேகலாவிடமிருந்து பதில் இல்லை.. வாயும் நெஞ்சும் அடைத்துப்போனது மாதிரி விக்கித்து நின்றிருந்தாள்..!!

இப்போது தென்றலும், வாசுகியும்.. மேகலாவின் பார்வை சென்ற திசைபக்கமாக.. மெல்ல மெல்ல தங்களது முகத்தை திருப்பினர்..!! அங்கே.. அவர்களுக்கு மிக மிக நெருக்கமாக.. ஒழுங்கின்றி வளர்ந்திருந்த ஒருபுதருக்கு பின்புறமாக.. கொட்டுகிற மழையில் சொட்டச்சொட்ட நனைந்தவாறு.. அந்த உருவம்..!! உடல்முழுதையும் போர்த்திய சிவப்பு அங்கி.. முகம்முழுதும் வழிகிற கருங்கூந்தல்..!!

“க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்..!!” என்று அந்த உருவத்திடம் இருந்து வருகிற சப்தம்.

“ஆஆஆஆஆஆஆஆஆஆஆ..!!!!!!!!!!!!!!!”

அவ்வளவுதான்..!! அலறியடித்துக் கொண்டு ஓடினர் இளம்பெண்கள் மூவரும்..!! மாலைநேரத்து மங்கலான வெளிச்சம்.. மழைபெய்து வழுக்குகிற மலைப்பாதை.. ஆங்காங்கே குறுக்கிடுகிற காட்டுமரங்கள்.. உச்சியிலிருந்து சடசடவென ஊற்றுகின்ற மழைநீர்..!! கண்மண் தெரியாமல்.. கால்கள் சென்ற திசையில்.. உடம்பெல்லாம் வெடவெடக்க.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள்..!!

அவர்கள் அணிந்திருந்த காலணிகள் எல்லாம் எங்கே நழுவியதென்று தெரியவில்லை.. ஈரமான கோரைப்புற்களில் வெற்றுக் கால்களை பதித்து வேகமாக ஓடினர்..!! சரியான திசையில்தான் ஓடுகிறோமா என்பதைக்கூட அவர்கள் அறியவில்லை.. கண்ணில்பட்ட திசையில், எதிர்ப்பட்ட மரங்களுக்கு இடையில் புகுந்து ஓடிக்கொண்டே இருந்தார்கள்..!! மழையில் நனைந்து உடலோடு ஒட்டிய உடையுடனும்.. மார்புக் கூட்டுக்குள் பதறித் துடிக்கிற இருதயத்துடனும்..!!