மதன மோக ரூப சுந்தரி – 5 15

“ஆஆஆஆஆ..!!!!”

ஓடியவர்கள் திடீரென அலறியவாறு அப்படியே ப்ரேக் அடித்து நின்றார்கள்..!! அவர்கள் ஓடியதிசையில் எதிர்ப்புறம்.. ‘சர்ர்ர்ரரக்க்க்’ என்று குறுக்காக வந்துநின்றது அந்த உருவம்..!! பலமாக வீசிய காற்றில் படபடக்கிற சிவப்பு அங்கி.. முகத்தை மறைத்திட்ட முடிக்கற்றைகளில் சொட்டுகிற மழைநீர்..!!

மூன்று பெண்களும் ஒருநொடி கூட தாமதிக்கவில்லை.. பக்கவாட்டில் திரும்பி விர்ரென்று வேகமெடுத்து ஓடினர்.. அந்த உருவம் தங்களை பின்தொடர்கிறதா என்று திரும்பிப் பார்க்கக்கூட மூவருக்கும் அச்சம்..!! உயிர்பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்..!!

இந்தப்பாதை சற்றே சீரற்ற பாதை.. மரங்களின் கிளைகள் பாதையின் குறுக்காக நீண்டிருந்தன.. விரிந்திருந்த முட்புதர்கள் அவர்களது புஜங்களை கீறின.. இறைந்து கிடந்த கற்கள் அவர்களது பாதத்தை பதம் பார்த்தன..!! உடம்பில் உண்டான வேதனையை பொருட்படுத்தாமல்.. உயிரை காப்பாற்றிக் கொள்கிற பதைபதைப்புடன்.. அடர்ந்த காட்டுக்குள் கிலியடித்துப்போய் ஓடிக்கொண்டிருந்தனர்..!! அகன்ற அடிப்புறம் கொண்ட மரம் ஒன்றிற்கு பின்புறமாக.. அண்டிக்கொண்டனர் மூவரும்..!!

நுரையீரல் வெளியே வந்துவிடுவது போல மூச்சிரைத்தது அவர்களுக்கு.. இருதயம் ‘திடுக்.. திடுக்..’ என்று அடித்துக் கொண்டதில், மார்புகள் ‘சர்ர்.. சர்ர்..’ என மேலும் கீழும் ஏறியிறங்கின.. அட்ரினலின் அதீதமாக சுரந்து, நாடிநரம்பெல்லாம் தாறுமாறாய் ஓடியது.. குளிராலும் குறிஞ்சி பயத்தாலும், உடம்பின் ஒவ்வொரு செல்லும் வெடவெடத்து நடுங்கியது..!! மூச்சு விடுகிற சப்தம்கூட வெளியே வரக்கூடாதென.. வாயை இரு கைகளாலும் இறுகப் பொத்திக்கொண்டு.. மூன்று பெண்களும் மரத்துக்கு பின்புறமாக பம்மியிருந்தனர்..!!

அரை நிமிடம்.. பிறகு வாசுகி மட்டும் சற்றே தைரியம் பெற்று.. தனது தலையை மெல்ல வெளியே நீட்டி.. தாங்கள் ஓடிவந்த பாதையை பார்த்தாள்.. பார்த்ததுமே பக்கென்று இருந்தது அவளுக்கு..!! அந்த உருவம் அவர்களுக்கு பக்கத்திலேதான் இன்னொரு மரத்துக்கு அருகே நின்று கொண்டிருந்தது.. ‘ச்சோ’வென்று கொட்டுகிற மழையில் நனைந்தவாறு.. வேறொரு திசையை வெறித்தவாறு..!! விரிந்த விழிகளுடன் அந்த உருவத்தையே மிரட்சியாக பார்த்தாள் வாசுகி..!!

அந்த உருவம் இப்போது மெல்ல இந்தப்பக்கமாக திரும்ப.. வாசுகி படக்கென தலையை உள்ளிழுத்துக் கொண்டாள்..!! சுறுசுறுப்பாக யோசித்தாள்.. அவசரமாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.. ‘தஸ்.. புஸ்..’என்று மூச்சிரைப்புடன், கிசுகிசுப்பான குரலில் தோழிகளிடம் சொன்னாள்..!!

“சொ..சொல்றதை கவனமா கேளுங்கடி.. மூணு பேரும் ஒன்னா இருந்து, அவகிட்ட மொத்தமா மாட்டிக்க வேணாம்.. ஆ..ஆளுக்கொரு பக்கமா ஓடலாம்.. ஒருத்தியை பலிகுடுத்து மிச்ச ரெண்டுபேர் தப்பிச்சுக்கலாம்.. எ..என்ன சொல்றிங்க..??”

“ம்ம்.. ச..சரிடி..!!”

பயத்துடனும், பதைபதைப்புடனும் ஒப்புக்கொண்டனர் மற்ற இருவரும்..!! அழுகை வந்தது அவர்களுக்கு.. வாயைப் பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுதனர்..!! பீதி நிரம்பிய அவர்களது கண்கள்.. பொலபொலவென கண்ணீரை உகுத்தன..!!

இப்போது சிவப்பு அங்கி போர்த்திய அந்த உருவம்.. அவர்கள் அண்டியிருக்கிற மரத்தைநோக்கி மெல்ல நகர்ந்தது.. மரத்துக்கு அந்தப்பக்கம் அவர்களுடைய சன்னமான பேச்சுக்குரல் இங்கேயே கேட்டது..!! கொஞ்சம் கொஞ்சமாய் நிதானமாக நகர்ந்து.. மரத்திற்கு மிகஅருகே நெருங்கிவிட்டது அந்த உருவம்.. இரண்டு மூன்று அடி இடைவெளிதான்..!!

அப்போதுதான் அது நடந்தது.. மரத்துக்கு பின்புறம் இருந்து சரக்கென வெளிப்பட்டனர் மூன்று பெண்களும்.. வெளிப்பட்ட வேகத்தில் வெவ்வேறு திசையில் சர்ரென ஓட்டமெடுத்தனர்..!! அங்கிருந்து கிளம்பிய மூன்று சாலைகளில்.. ஆளுக்கொரு சாலையென சிட்டாக பறந்தோடினர்..!!

அந்த உருவம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை..!! சற்றே திகைத்துப்போய்.. வெடுக்வெடுக்கென மூன்று திசைகளையும் மாறிமாறி திரும்பிப் பார்த்தது..!! அப்போதுதான்..

“ஆஆஆஆஆஆ..!!!” என்று தென்றலின் அலறல்.

தறிகெட்டு ஓடிய தென்றல் தரையில் விழுந்து கிடந்தாள்.. மேற்கிளம்பிய ஒரு மரத்தின் வேர், அவளது பாதத்தை இடறி விட்டிருந்தது.. தடுமாறிப்போய் கால்கள் ரெண்டும் பின்னிக்கொள்ள கீழே விழுந்து உருண்டிருந்தாள்..!!

“ஆஆஆஆஆஆ..!!!” கொட்டுகிற மழையில் காலை பிடித்துக்கொண்டு கத்தினாள்.

மூன்று திசைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த அந்த உருவம், இப்போது சற்றே நிதானித்தது.. தென்றல் விழுந்து கிடந்த திசையை மட்டும் கூர்மையாக வெறித்தது.. அந்த திசையில் மெல்ல நகர்ந்தது..!!