மதன மோக ரூப சுந்தரி – 5 15

ஆதிரா கிச்சனை விட்டு கிளம்பினாள்..!! ஹாலின் இன்னொரு மூலைக்கு சென்று.. ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.. பனியில் நனைந்துபோய் நின்றிருந்தது அவர்களது கார்..!! தொலைவாக எங்கும் செல்லவில்லை என்று தோன்றியது.. அருகில் எங்காவது உலாவ சென்றிருப்பார் என்று நினைத்துக் கொண்டாள்..!!

மீண்டும் மாடிப்படியேறி தங்கள் அறைக்கு வந்தாள்.. வந்ததுமே தனது செல்ஃபோனை கையில் எடுத்தாள்.. சிபியின் நம்பருக்கு கால் செய்தாள்..!! அடுத்த முனையில் ரிங் சென்றது.. அதே நேரம்..

“க்க்க்க்ர்ர்ர்ர்ர்.. க்க்க்க்ர்ர்ர்ர்ர்..!!”

என்று அறைக்குள் ஒரு சப்தம்.. தலையணைக்கு அருகில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது சிபியின் செல்ஃபோன்..!!

‘ப்ச்.. ஃபோனைக்கூட இங்கய போட்டுட்டு எங்க போனாரு..??’ ஆதிரா மனதுக்குள்ளேயே அவ்வாறு சலித்துக்கொண்டபோதுதான்..

“டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!” அவளுக்கு மிக நெருக்கமாக அந்த சப்தம் கேட்டது.

அது என்ன சப்தம் என்று ஆதிராவுக்கு புரியவில்லை..!! முகத்தில் ஒருவித குழப்பரேகைகள் பரவ.. எங்கிருந்து அந்த சப்தம் வருகிறதென்று அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தாள்..!! ஒரு சிலவினாடிகள்.. ஆதிராவால் அறைக்குள் எந்த வித்தியாசத்தையும் உணரமுடியவில்லை..!!

“டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!”

எதுவும் புரியாமல் அப்படியும் இப்படியுமாய் தலையை அசைத்துக்கொண்டிருந்தவளின் கவனத்தை.. எதேச்சையாகத்தான் அந்தப்பொருள் கவர்ந்தது..!! நேற்றிரவு சிபி மூடிப்படுத்த போர்வை இப்போது நீள்வாக்கில் சுருண்டிருக்க.. அதற்குள்ளிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருந்தது அந்தப்புத்தக்கம்..!! புத்தகத்தின் அட்டையில் அதன் தலைப்பு பளிச்சென்று மின்னியது..!!

“கண்ணாமூச்சி ரே ரே..!!”

‘இதை அலமாரிலதான வச்சேன்.. இங்க எப்படி வந்துச்சு..??’ – குழப்பமாக நெற்றியை பிசைந்தாள் ஆதிரா.

“டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!”

அந்த சப்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க.. அப்படியும் இப்படியுமாய் திரும்பிய ஆதிராவின் பார்வை, இப்போது சட்டென ஓரிடத்தில் நிலைத்தது.. அப்படியே கவனத்தை குவித்து அந்தஇடத்தை உற்றுப் பார்த்தாள்..!! சுருண்டிருந்த சிபியின் போர்வைக்குள் ஒரு சிறியஅசைவு தெரிந்தது.. உள்ளிருந்து ஏதோ ஒன்று துடிப்பது போல..!! அதனுள் இருந்துதான் சப்தம் வருகிறதென்று தெளிவாக புரிந்தது..!!

“டப்.. டப்டப்.. டப்.. டப்டப்..!!!”

உடலுக்குள் ஏதோ ஒருவித சிலிர்ப்பு பரவ ஆரம்பிக்க.. ஆதிரா தனது கையை மெதுவாக நீட்டினாள்.. அந்தப் போர்வையை மெல்ல நெகிழ்த்தினாள்..!! உள்ளிருந்து படக்கென வெளிப்பட்டது அந்த பட்டாம்பூச்சி.. அழகான தனது சிவப்பு சிறகுகளை பட்பட்டென அசைத்து, அந்த அறைக்குள்ளேயே சுற்றிச்சுற்றி பறக்க ஆரம்பித்தது..!! பறக்கிற அந்த பட்டாம்பூச்சியை பார்க்க பார்க்க.. ஆதிராவின் மனதுக்குள் ஒரு இனம்புரியாத பதற்றம் கிளம்பியது..!!

“அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!”

முன்பொருமுறை கன்னத்தில் குழிவிழ கணவன் சொன்னது இப்போது நினைவுக்கு வரவும்.. கண்களில் திகில் கொப்பளிக்க அந்த பட்டாம்பூச்சியையே வெறித்துப் பார்த்தாள் ஆதிரா..!!

174

அத்தியாயம் 22

சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!! அகழி வந்து ஆதிராவுக்கு கிடைத்த உச்சபட்ச அதிர்ச்சி இதுதான் எனலாம்.. தங்கையை தேடவந்து கணவனை தொலைப்போம் என்று கனவிலும் அவள் எண்ணியிருக்கவில்லை..!!

கணவனின் அணைப்பு தந்த கதகதப்புச்சூடு, அவளைவிட்டு இன்னும் நீங்கியிருக்காத நிலையிலே.. காற்றில் சூடமாய் அவன் கரைந்து போயிருந்ததை, அவளால் எப்படி தாங்கிக்கொள்ள இயலும்..?? முதல்நாள் நேர்ந்த பயங்கரத்தின் பதைபதைப்பு, அவளைவிட்டு இன்னும் அகன்றிருக்காத நிலையிலே.. அடுத்தநாளே இன்னொரு பேரதிர்ச்சியை வாங்கிக்கொள்ள, அவளது இதயத்தில்தான் எத்தனை வலுவிருக்கும்..??

அதுவும்.. இன்றுகாலை அகழியைவிட்டு கிளம்பிவிட்டால்.. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் இறுதிப்புள்ளி வைத்துவிடலாம் என்று அவள் நிம்மதியுற்றிருந்த வேளையில்.. இடியாக இப்படியொரு நிகழ்வு அவளது இதயத்தை இரக்கமில்லாமல் தாக்கினால்..?? அப்படியே உடைந்து.. அணுஅணுவாய் உதிர்ந்து.. சில்லுசில்லாய் சிதறிப்போனாள் என்றுதான் சொல்லவேண்டும்..!!

முதல்நாள்தான் அந்த சிவப்பு அங்கி உருவம் மணிமாறனை தூக்கி சென்றதை கண்கூடாக பார்த்திருக்கிறாள்.. முன்பொருமுறை நீருக்கடியிலும், ஜன்னலுக்கு வெளியிலும் பார்த்த அந்த உருவத்தை, அப்போது மனபிரம்மை என்று ஒதுக்கியிருந்தாலும், இப்போது அவையெல்லாம் அப்பட்டமான நிஜம் என்கிற நம்பிக்கை அவளுக்கு வந்திருந்தது..!!

எல்லாவற்றையும் நினைக்க நினைக்க.. அவளது இருதயத்தை ஒரு இனம்புரியாத பயம் வந்து கவ்விக்கொண்டிருந்தது.. அந்த உருவம் தன்னிடம் எதையோ எதிர்பார்க்கிறது, தன்னை சீண்டிப்பார்க்கிறது என்று தோன்றியது.. அவளது புத்திக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு அமானுஷ்யத்தின் இரும்புப்பிடியை அவளால் தெளிவாக உணரமுடிந்தது..!!

பட்டாம்பூச்சி பறப்பதை பார்த்து மிரண்டு போனவள், பதறியடித்து படிக்கட்டு இறங்கி கீழேவந்தாள்.. பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த வனக்கொடியிடம், பதைபதைப்புடன் அந்தச்செய்தியை சொன்னாள்..!! ஆரம்பத்தில் வனக்கொடிக்கு அந்த விஷயத்தின் தீவிரம் சட்டென்று உறைக்கவில்லை..!!

“ஐயோ.. அழாத ஆதிராம்மா.. நீ பயப்படுற மாதிரி ஒன்னும் இருக்காது..!! தம்பி பக்கத்துலதான் எங்கயாது போயிருக்கும்.. இப்ப வந்துரும் பாரேன்..!!” என்று ஆதிராவை சமாதானப்படுத்தவே முயன்றாள்.

“இ..இல்லம்மா.. இல்ல.. அவர் வரமாட்டாரு.. அ..அவருக்கு ஏதோ ஆய்டுச்சு.. எ..என்னால நல்லா ஃபீல் பண்ணமுடியுது.. அவருக்கு என்னவோ ஆய்ருச்சும்மா..!!”

ஆதிராவின் கண்களில் அதற்குள்ளாகவே தாரைதாரையாய் கண்ணீர்..!! அந்த புத்தகமும் பட்டாம்பூச்சியும் அவளை வெகுவாக திகிலடையச் செய்திருந்தன.. அதனால்தான் அவளுடைய இந்த நம்பிக்கையில்லா பேச்சு..!! கணவனுக்கு ஏதோ ஆபத்து என்று அவளது காதல்மனது உணர்ந்துகொண்டது.. உள்ளத்தில் உறைந்திருந்த ஒருவித பதட்டம், அவளது உதடுகள் சிந்திய வார்த்தைகளிலும் நிறைந்திருந்தது..!!

“சொ..சொல்றதை கேளு ஆதிராம்மா.. தம்பிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. நீயா எதையாவது நெனச்சு பொலம்பாத..!! இ..இரு.. நான் இந்த கதிர்ப்பயல உடனே வரசொல்றேன்..!!”

வனக்கொடி சொல்லிவிட்டு டெலிஃபோன் நோக்கி ஓடினாள்.. ஆதிரா அப்படியே சோபாவில் சரிந்து அழ ஆரம்பித்தாள்..!!

ஐந்தே நிமிடங்களில் ஆதிராவின் வீட்டுக்கு பரபரப்புடன் வந்து சேர்ந்தான் கதிர்..!! வீட்டை பார்த்துக்கொள்ள தென்றலை பணித்துவிட்டு.. மற்ற மூவரும் காரில்ஏறி சிபியைத்தேடி கிளம்பினார்கள்..!! எப்போதையும் விட அதிவேகத்திலேயே காரை விரட்டினான் கதிர்.. அழுதுகொண்டே வந்த ஆதிராவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல்படுத்த முயன்றாள் வனக்கொடி..!!

ஒருமணிநேரம்.. ஒருஇடம் விடாமல் ஒட்டுமொத்த அகழியையையும் சலித்து முடித்திருந்தனர் மூவரும்.. சிபி சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் அனைத்திலும் சல்லடை போட்டுத் தேடியிருந்தனர்..!! எங்குசென்று தேடினாலும் அவர்களுக்கு திரும்பத்திரும்ப கிடைத்தது என்னவோ.. ஏமாற்றம் ஒன்றுதான்..!! கோயில் வளாகம்.. கல் மண்டபம்.. மார்க்கெட் வீதிகள்.. டெலிஃபோன் பூத்.. தேயிலை எஸ்டேட்.. ஆற்றங்கரை புல்வெளி.. அவனுக்கு பழக்கமான சில நண்பர்களின் இல்லங்கள்..!!

சிபி காணாமல் போயிருந்தான்.. எங்கு சென்றான் என்கிற சுவடே தெரியாமல் எப்படியோ தொலைந்து போயிருந்தான்..!!

ஒவ்வொரு இடத்திலும் கணவனின் முகம்தேடி ஏமாந்துபோகும் ஆதிரா..

“நா..நான்தான் சொன்னேன்ல.. அவரு இங்க இல்ல.. அவருக்கு ஏதோ ஆய்ருச்சு..!!” என்று கண்ணீருடன் புலம்ப ஆரம்பித்து..

அடுத்து என்ன செய்வது என்று கதிரும் வனக்கொடியும், குழப்பமும் திகைப்புமாய் தவிக்கும்போது..

“வந்திருக்கக்கூடாது.. இந்த ஊருக்கு நான் வந்திருக்கவே கூடாது..!! தப்பு பண்ணிட்டேன்.. அவரு சொல்லச்சொல்ல கேட்காம பெரிய தப்பு பண்ணிட்டேன்..!! அவதான்.. அந்த குறிஞ்சிதான்.. எனக்கு தெரியும்..!!” என்கிற ரீதியில் பதைபதைப்புடன் பிதற்றி..

வேறுவழி எதுவும் தோன்றாமல், மூவரும் காரிலேறி வீட்டுக்கு திரும்புகையில்..

“ஐயோ.. கடவுளே.. என்னை ஏன் இப்படி சோதிக்கிற.. நான் என்ன பாவம் பண்ணினேன்..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!!!” என்று தலையில் பட்பட்டென அடித்துக்கொண்டு ‘ஓ’வென பெருங்குரலில் அழுதாள்.

வீடு திரும்பியதுமே..

“அப்பாஆஆஆ..!!! அவரை காணோம்ப்பா..!!!”

என அலறியடித்துக்கொண்டு தனது தந்தைக்கு ஃபோன் செய்தாள்.. கண்ணீரும் கம்பலையுமாய் கணவன் காணாமல் போன செய்தியை அவருக்கு உரைத்தாள்..!! மகள் சொன்னதைக்கேட்டு, தணிகைநம்பியும் அப்படியே நிலைகுலைந்து போனார்.. ‘என்ன நடக்கிறது அங்கே’ என்பதுபோல, திகைத்துப்போய் சிறிதுநேரம் செயலற்று அமர்ந்துவிட்டார்..!! முதல்நாள்தான் மகள் மீதான தாக்குதல்.. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே இன்று மருமகன் மர்மமாக தொலைந்து போயிருக்கிறான்.. ஒன்றும் புரியவில்லை அவருக்கு..!! ஒருவழியாய் புத்தியை இழுத்துப் பிடித்து..

“இ..இங்க பாரும்மா ஆதிரா.. அ..அப்பா சொல்றதை கேளும்மா… நீ.. நீ ஒன்னும் கவலைப்படாத.. சிபிக்கு எதுவும் ஆகிருக்காது.. அவன் கண்டிப்பா திரும்ப கெடைச்சுடுவான்.. சரியா..?? அப்பா உடனே கெளம்பி அங்க வர்றேன்மா ஆதிரா.. அதுவரை திரவியத்தை பக்கத்துல வச்சுக்க..!! தைரியமா இரும்மா.. தைரியமா இரு.. சிபிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. அழாத..!!” என்று ஓரளவு அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்..!!

தொழில் விவகாரங்களில் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும்.. இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில், தோழனின் உதவியைத்தான் முதலில் நாடினார் தணிகை நம்பி..!! மகளிடம் பேசிமுடித்த அடுத்த நொடியே.. திரவியத்தைத்தான் தொலைபேசியில் அழைத்தார்..!! இன்று காலை நடந்த இந்த புது விவகாரத்தை நண்பனிடம் உரைத்து.. தான் அகழி வரும்வரைக்கும் மகளுக்கு துணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்..!!

அதன்பிறகு.. ஒரு அரைமணி நேரத்துக்குள்ளாகவே.. ஆதிராவின் வீட்டுக்கு போலீஸ் ஜீப்பில் வந்து இறங்கினார் திரவியம்.. அவருடன் கூடவே வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் வில்லாளன்..!! திரவியத்துக்கு குறிஞ்சி மீதான நம்பிக்கையும், பயமும் நிறையவே இருந்தாலும்.. கேள்விப்பட்ட சில தகவல்களை வைத்து, குறிஞ்சிதான் சிபியை கொண்டு சென்றிருக்கவேண்டும் என்று அவருக்கு தோன்றினாலும்.. முறைப்படியான காவல்த்துறை விசாரணையும் முக்கியம் என்று கருதியதாலேயே வில்லாளனை அழைத்து வந்திருந்தார்..!! குறிஞ்சியைத் தாண்டி வேறேதும் சாத்தியக்கூறுகள் இருந்தால்.. அவற்றை தப்பவிட்டுவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வுதான் அதற்கு காரணம்..!!

“அங்கிள்..!!!!” அழுதபடி ஓடிவந்த ஆதிராவை,

“ஒன்னும் இல்லம்மா.. ஒன்னும் இல்ல.. அழாத.. சிபிக்கு ஒன்னும் ஆயிருக்காது.. சீக்கிரமே திரும்ப வந்துடுவான்..!!” என்று ஆறுதலாக அணைத்துக் கொண்டார் திரவியம்.

நடந்த விஷயங்களை வனக்கொடியிடமே விசாரித்து தெரிந்து கொண்டார்..!! கண்களில் ஒருவித மருட்சியுடன் வனக்கொடி சொல்ல சொல்ல.. கவலையாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் திரவியம், கவனமாக அவற்றுக்கு காது கொடுத்திருந்தார் வில்லாளன்..!!

விள்ளாளனிடம் நேற்றிருந்த முறைப்பும் விறைப்பும் இப்போது இல்லை.. இரவெல்லாம் தூக்கமில்லாமல் சோர்ந்து போயிருந்த அவரது கண்களோடு, அவருடைய முகத்திலும் பலவித குழப்பரேகைகளை காணமுடிந்தது..!! மேலதிகாரிகளின் அழுத்தம் ஒருபுறம் இருக்க.. அவரைச்சுற்றி நடக்கிற சம்பவங்களை பார்த்து, குறிஞ்சி பற்றிய தனது நம்பிக்கையின்மையை மறுபரீசிலனை செய்கிற நிலைமையில்தான் அவர் இருந்தார்.. மனதளவிலும் சற்றே தளர்ந்து போயிருந்தார்..!!

– தொடரும்