மதன மோக ரூப சுந்தரி – 5 15

“ஹஹா.. ஆமாம்க்கா.. ஸேரி மட்டும் இல்ல.. இந்த ஜிமிக்கி, கொலுசு கூட அண்ணன் வாங்கிட்டு வந்ததுதான்..!!” தென்றல் காலை உயர்த்தி கொலுசை காட்டினாள்.

“ஹ்ம்ம்.. எல்லாமே நல்லாருக்குது தென்றல்..!!”

“ம்ம்ம்ம்ம்ம்…!! சரிக்கா.. நான் கோயிலுக்கு கெளம்பனும்.. வேலையை சீக்கிரம் முடிச்சுட்டு கெளம்புறேன்..!!”

பணிவுடன் சொன்ன தென்றல் புடவையை உயர்த்தி இடுப்பில் செருகிக் கொண்டாள்.. பக்கவாட்டில் இருந்த நீருள்ள பக்கெட்டை ஒரு கையில் தூக்கிக் கொண்டாள்.. இன்னொரு கையில் துடைப்பமும், அழுக்கு துணியும்.. ஆதிராவை கடந்து அறைக்குள் நுழைந்தாள்..!! இன்று அவளிடம் காணப்பட்ட அழகுத்தோற்றத்துக்கும், அவள் கைகளில் இருந்த அழுக்கு சமாச்சாரங்களுக்கும் சுத்தமாக ஒத்துப் போகவில்லை..!! ஆதிரா என்ன நினைத்தாளோ..

“தென்றல்..!!” என்று திடீரென அழைத்தாள்.

“என்னக்கா..??” உள்ளே சென்றிருந்த தென்றல் திரும்பி பார்த்தாள்.

“ரூம் அப்புறம் கிளீன் பண்ணிக்கலாம்.. நீ கோயிலுக்கு கெளம்பு..!!”

“பரவால்லக்கா.. கிளீன் பண்ணிட்டே..”

“சொல்றேன்ல.. இன்னும் ரெண்டு நாளைக்கு எந்த வேலையும் பாக்க வேணாம்..!! திருவிழாவை நல்லா என்ஜாய் பண்ணு.. போ..!!”

“இல்லக்கா.. சிபி அண்ணனுக்கு ரூம் க்ளீனா இருந்தாத்தான்..”

“ப்ச்.. அவர்ட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ கெளம்பு..!!”

“ம்ம்.. சரிக்கா..!!”

ஆதிரா சொன்னதைக்கேட்டு மனதுக்குள் சந்தோஷப்பட்டாலும்.. அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமலே தென்றல் அங்கிருந்து கிளம்பினாள்..!! ஆதிராவை கடந்து செல்லும்போது மட்டும்.. ‘தேங்க்ஸ்க்கா’ என்று மெலிதாக முனுமுனுத்தாள்..!!

அவள் சென்ற அரைமணி நேரத்திற்கெல்லாம் ஆதிராவும் சிபியும் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.. அதன்மேலும் ஒரு பத்து நிமிடங்களில், ஊரின் இன்னொரு மூலையில் இருக்கிற கோயிலை அடைந்தார்கள்..!!

அவர்கள் சென்ற நேரத்தில் அம்மனை நீராட்டுவதற்காக ஆற்றிற்கு எடுத்து சென்றிருந்தனர்.. அதனால் கோயிலில் மக்கள் நெருக்கடி சற்று குறைவாகவே இருந்தது..!! எனினும்.. கோயிலுக்கு முன்புறமாக கணிசமான அளவு பெண்கள் கூட்டத்தினை காணமுடிந்தது.. அம்மனுக்கு பொங்கல் வைக்கிற வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அகழி கிராமத்து பெண்கள்..!! அக்னிச்சட்டி தூக்குதல், ஆயிரங்கண்பானை எடுத்தல், கரும்புத் தொட்டில், தலைமுடி காணிக்கை போன்று நேர்த்திக்கடன் செலுத்துபவர்களின் கூட்டம் இன்னொரு பக்கம்..!!

ஆதிராவும் சிபியும் காரில் இருந்து இறங்கி கோயிலின் முகப்புக்கு நடந்தனர்..!! நடந்து செல்கிற வழியில்.. கொட்டி வைத்த மணலில்.. எதிரெதிர் அமர்ந்து விளையாடுகிற இரண்டு சிறுமிகளை ஆதிரா பார்க்க நேர்ந்தது.. உடனே பட்டென ஒரு பழைய நினைவில் மூழ்கிப்போனாள்..!! தானும், தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இதே இடத்தில் இருவரும் ஆடிய இதே விளையாட்டு..!!