துளிர்விடும் பருவம்

“ஹ்ம்ம்… சரிம்மா”

“இன்னொரு நாள் என் கையில சிக்குவ, அப்போ பாத்துகிறேன்” மனதில் நினைத்தவாறு காலை கடன்களை முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

சாப்பிட டைன்னிங்க் டேபிள் வரும்போது, தட்டில் இட்லியும் சட்னியும் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தாள் மீனாட்சி.

“சாப்பிடுறியானு கொஞ்சமாச்சும் பாசமா கேக்குறாளா ? தடிச்சி” மனதில் திட்டிக்கொண்டு இருக்கும்போதே அவனுக்கும் அம்மா இட்லியை பரிமாறியதும் சாப்பிட்டு முடித்தான்.

பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தான்.

“ஹே… மாது குட்டி குட் மோர்னிங்டா”

பக்கத்து வீட்டில் இருக்கும் மஞ்சுளாவின் குரல் கேட்டதும் வண்டியை அவள் அருகில் சென்று மாதவன் நிறுத்தினான்.

அவள் பற்கள் தெரிய சந்தோஷமாக சிரித்தாள்.

தந்தையுடன் வேலை பார்க்கும் நண்பரின் மகள்தான் இந்த மஞ்சுளா. அவள் வீட்டிற்கு ஒரே பெண்,
அவர்கள் இருப்பது ரயில்வே குவார்ட்டர்ஸ் என்பதால், சிறு வயது முதல் மாதவனின் வீட்டிற்கு பக்கத்திலேயே மஞ்சுளாவின் குடும்பமும் இருந்து வருகிறது.

“குட்மோர்னிங் மஞ்சுக்கா காலேஜ் கிளம்பியாச்சா ?”

“ஹ்ம்ம்… ரெடிடா, அவ வந்ததும் போகணும்”

மீனாட்சியும் மஞ்சுளாவும் உயிர் தோழிகள் இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே படிக்கின்றனர்.