துளிர்விடும் பருவம் 124

அவனை பார்த்தாலே எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள்.

மேலும் கல்லூரி சேர்மன் சுந்தரத்தின் ஒரே வாரிசு. அதனால் மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்களும் அவனது கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்.

தவறு செய்பவர்களை மட்டுமே அவன் தண்டிப்பதால், அவனது தந்தையும் எதையும் பெரிதாக கண்டுக்கொள்ளமாட்டார்.

அதற்காக ராஜேஷை பெரிய மகான் என்றெல்லாம் கூறிவிட முடியாது.

பள்ளியில் படிக்கும்போதே, உடன் படிக்கும் பெண்களிடம் நிறையவே சில்மிஷம் செய்திருக்கிறான்.

அவனது தந்தையின் காதிற்கு அந்த விஷயம் எட்டியதும் பெல்டால் ராஜேஷின் முதுகில் விளாசி நன்றாக தோளை உறித்தெடுத்திருக்கிறார்.

அதிலிருந்து பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்து வருகிறான்.

கல்லூரியில் படிக்கும் சில பெண்களும் இவன் தரும் தண்டனைகளை பார்த்து அஞ்சி நடுங்குவதால் தோழிகளாககூட பழக விரும்பாமல் தள்ளியே நின்றுக்கொண்டு இருந்தனர்.

இவனும் அதையெல்லாம் பெரிதாக எண்ணாமல், தன்னுடைய பலத்தை நினைத்து பெருமை கொள்வான்.

வார இறுதி நாட்களில், நட்சத்திர விடுதிகளில் சென்று டிஸ்கோ, சரக்கு, தம்மு என நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடிப்பான்.

இப்படி சென்ற இவனது வாழ்கை சில மாதங்களுக்கு முன்பு மீனாட்சியால் திசை மாறியது.

ஒரு முறை கல்லூரி வளாகத்தில் மீனாட்சியும் மஞ்சுவும் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அங்கு பயிலும் வேறு ஒரு டிபார்ட்மெண்டை சேர்ந்த மாணவன் போல் இருந்த ஒருவன் அவர்களது அருகில் வந்தான்.

“ராஜேஷ் கொடுக்க சொன்னாரு” மீனாட்சியின் கையில் ஒரு காகிதத்தை திணித்துவிட்டு கண்ணிமைப்பதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டான்.

“போச்சுடா உனக்கு லவ் லெட்டர் கொடுத்த லிஸ்ட்ல இவனும் சேர்ந்துட்டானா ?” மஞ்சு சிரித்தாள்.