துளிர்விடும் பருவம் 127

“வேணாம்டி ஏதாச்சும் வம்பாகிடும்”

“என்ன ஆனாலும் சரி, அவனோட முகத்திரை இன்னையோட கிழிய போகுது”

மஞ்சு சொன்னதை கேட்காமல், மிக வேகமாக நடந்து சென்று ராஜேஷ் இருக்கும் இடத்தை மீனாட்சி அடைந்தாள்.

அங்கே ராஜேஷ் காரில் சாய்ந்தபடி, அவனது நண்பன் ரகுவுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தான்.

அவன் அருகில் சென்றதும் “டேய் ராஜேஷ்” கல்லூரியே அதிரும் அளவுக்கு மீனாட்சி கத்தினாள்.

அதை பார்த்து ராஜேஷ் கொஞ்சம் அதிர்ந்துவிட்டான்.

மஞ்சு ஒன்றுமே விளங்காமல் தலை தெறிக்க மீனாட்சி இருக்கும் இடத்திற்கு விரைந்தாள்.

அதற்குள் மானவர்களின் கூட்டம் ராஜேஷையும் மீனாட்சியையும் வட்டமடித்து நின்றுக்கொண்டு வேடிக்கை பார்த்தது.

“என்ன மீனாட்சி, எதுவும் பிரச்சனையா ?” ராஜேஷ் விசாரித்தான்.

“ பிரச்சனையே உன்னாலதான்டா”

“என்னாலய புரியலயே”

“புரியாத மாதிரி நடிக்காத, இது என்னடா ?” மீனாட்சி அந்த கடிதத்தை காண்பித்து அவனிடம் கேட்டாள்.

“இதுவா பேப்பர்” அவனது கிண்டலானா பேச்சை கேட்டு மீனாட்சி உஷ்ணமடைந்தாள்.

“அசிங்கம் பண்ணிட்டு, நக்கலா பேசுறியாடா பொறுக்கி நாயே” சொல்லிக்கொண்டே மீனாட்சி வலது கையை எடுத்து ராஜேஷின் கன்னத்தில் சப்பென்று ஒரு அறைவிட்டாள்.

ராஜேஷ் பொறி கலங்கி போய்விட்டான்.

மாணவர்கள் அனைவரும் மீனாட்சியின் செயலை பார்த்து அரண்டு போனார்கள்.

மஞ்சுவுக்கோ மயங்கி விழும் நிலை, என்ன செய்வது என புரியாமல் தடுமாறினாள்.

இத்தனை நாட்களாக, கல்லூரியையே அடக்கி கைக்குள் வைத்திருந்த தன்னை ஒரு பெண் அனைவரின் முன்னிலையிலும் அடித்து அசிங்கப்படுத்திவிட்டாளே என்கிற கோபம் ராஜேஷிற்கு வந்தது.

இந்த லெட்டருக்கும் ராஜேஷுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிற விஷயம் தெரியாமல், தைரியமாக மீனாட்சி அவனை பார்த்து முறைத்துக்கொண்டு அங்கேயே நின்றாள்.

மஞ்சுளாவுடன் கடலை போடுபவர்களில் ஒருவன்தான் ராஜேஷின் நண்பன் ரகு. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன். பார்ப்பதற்கு சராசரி உடலுடன், கொஞ்சம் கலையாகவும் இருப்பான்.

ராஜேஷ் எது சொன்னாலும் எதிர் கேள்வி கேட்காமல் எதையும் செய்யும் நல்ல நண்பன்.