மதன மோக ரூப சுந்தரி – 4 62

ஆதிராவுக்கு பக்கவாட்டில்.. சற்று தூரத்தில்.. சிவப்பு அங்கி அணிந்த குறிஞ்சி.. இவளுக்கு இணையாக மலைச்சரிவில் இறங்கிக் கொண்டிருந்தாள்..!! மரங்களுக்கிடையே அவ்வப்போது மறைந்து மறைந்து.. பிறகு மீண்டும் ‘சரக் சரக்’கென மின்னலாக தோன்றி..!! முகம் மறைக்கிற கூந்தல் மயிர்களின் வழியே.. ஒற்றைக்கண்ணால் இவளை வெறித்துப் பார்த்தபடி.. இவளுடனே மலைப்பாதையில் சேர்ந்து நடந்தாள்..!!

ஆதிராவின் செவிக்கருகே ‘விஷ்ஷ்ஷ்க்க்.. விஷ்ஷ்ஷ்க்க்..’ என்று சப்தம்.. அவளது நாசிக்கருகே வினோதமான மகிழம்பூ வாசனை..!! இமைகள் தானாக செருக ஆரம்பிக்க, தலையை உதறிக் கொண்டாள்..!!

செல்கிற வழியில் செடி நட்டுக்கொண்டிருந்த மணிமாறன்.. இவள் அருகில் சென்றதும் தலையை நிமிர்த்தி சொன்னார்..!!

“ஐஞ்சு வருஷம் ஆச்சும்மா..!! போலீஸால இதுவரை ஒன்னும் புடுங்க முடியல..!!”

மரமொன்றுக்கு பின்னிருந்து.. மயிர்மண்டிய முகத்துடன் வெளிப்பட்ட மாந்திரிகவாதி.. இடுங்கிப்போன பார்வையுடன் இவளை கேட்டார்..!!

“உன் தங்கச்சி அந்த தகட்டை எடுத்ததுக்கு அப்புறந்தான் திரும்ப அந்த மாதிரி மர்மமான சம்பவங்கள் நடக்குது.. இதுக்கு என்ன விளக்கம் சொல்லப்போற ஆதிராக்கொழந்தை..??”

திடீரென ஆதிராவின் கால்களுக்கு அருகே அந்தக்காட்சி..!! தரையில் கிடந்து உருண்டவாறே.. தாரைதாரையாய் கண்ணீர் வடித்தவாறே.. பரிதாபமாய் புலம்பினாள் வனக்கொடி..!!

“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!”

கைகள் நிறைய சரளைக் கற்களுடன்.. ஆதிராவுக்கு பின்னால் தொடர்ந்து வந்த செம்பியன்.. கண்களில் ஒரு அதீத பயத்துடன் ரகசியக்குரலில் கிசுகிசுத்தார்..!!

“அந்த பூகிமேன்.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவான்..!!”

கதிரும் ஆதிராவும் காரில் ஏறி அமர்ந்தனர்.. கார்க்கதவை அறைந்து சாத்திய ஆதிரா, எதேச்சையாக பின்புறம் திரும்பினாள்..!! பின்சீட்டில் கைகளை விரித்துவைத்து கம்பீரமாக அமர்ந்திருந்தார் வில்லாளன்.. எகத்தாளமான குரலில் இவளிடம் கேட்டார்..!!

“அகழில இருக்குற ஒரு பயலுக்கும் அறிவுன்றதே கெடையாதா..??”

கார் சென்றுகொண்டிருக்கையிலேயே அவளது காலுக்கடியில் ஏதோ தட்டுப்பட்டது.. சீட்டுக்கடியில் இருந்து, அந்த குட்டிப்பெண் விருட்டென தலையை வெளியே நீட்டினாள்.. அகல்விழியின் தங்கை..!! வெளிறிப் போன முகமும், பயம் அப்பிய விழிகளுமாக மிரட்சியாக சொன்னாள்..!!

“அ..அக்காவை.. குறிஞ்சி தூக்கிட்டு போயிட்டா..!!”

காரோட்டிக்கொண்டிருந்த கதிர் திடீரென இவள்பக்கமாக திரும்பினான்.. வெறித்த பார்வையுடன், கியர் மாற்றிக்கொண்டே இறுக்கமாக சொன்னான்..!!

“இல்லைங்க.. குறிஞ்சிதான் காரணம்னு எனக்கு தோணல..!!”

வீட்டை அடைந்ததும் ஆதிரா காரில் இருந்து இறங்க.. பின்பக்க கதவை திறந்துகொண்டு கூடவே இறங்கினான் முகிலன்.. குரூரமாக முகத்தை வைத்துக்கொண்டு எச்சரித்தான் இவளை..!!

“அப்படியே கோழிக்குஞ்சை திருகுற மாதிரி அவ கழுத்தை திருகிப் போட்ருவேன்.. சொல்லி வையி..!!”

வாசலை அடைந்து படி ஏறுகையில்.. கையில் கிஃப்ட் பாக்ஸுடன் எதிர்ப்பட்டார் திரவியம்..!!

“ஹாஹா.. எனக்கு எல்ல்ல்ல்ல்லாம் தெரியும்மா..!!” என்று விஷமப் புன்னகையை சிந்தினார்.

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.