மதன மோக ரூப சுந்தரி – 4 45

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!!”

தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, எதில் இடித்துக்கொண்டோம் என்று பார்த்தாள்..!! ஆளுயரத்திற்கு நின்றிருந்த ஓவியப்பலகை.. தாமிரா உபயோகப் படுத்துகிற ஓவியப்பலகை..!! அதன் மேற்புற தடித்த காகிதத்தில்.. தாமிராவால் ஆரம்பிக்கப்பட்டு, முடிக்காமல் விடப்பட்ட அந்த ஓவியம்..!!

டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் ஆதிரா அந்த ஓவியத்தை பார்த்தாள்.. ஊர்மக்கள் கூடிநின்று வேடிக்கை பார்க்க, அரைநிர்வாண நிலையில் இருந்த ஒரு பெண்ணை, அடித்து இழுத்து வருகிற ஓவியம்.. குறிஞ்சியை மனதில் கொண்டு வரையப்பட்ட ஓவியம் என்று, அதை பார்த்ததுமே புரிந்துகொள்ள முடிந்தது..!!

அந்த ஓவியத்தை பார்த்ததுமே ஆதிராவின் மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் வெட்டியது.. இதே மாதிரியான ஒரு ஓவியத்தை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது..!! ‘எங்கே பார்த்திருக்கிறோம்.. எங்கே பார்த்திருக்கிறோம்..?’ என்று நெற்றியை கீறிக்கொண்டு சில வினாடிகள் யோசித்தாள்.. அவ்வாறு யோசிக்க யோசிக்க, படக்கென அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தது.. அதனுடன் சேர்ந்து தாமிரா சம்பந்தப்பட்ட சில நினைவுகளும்..!! மனதுக்குள் ஒரு திருப்தி பரவ.. அவளுடைய உதட்டில் மெலிதாக ஒரு புன்னகை அரும்பியது..!!

“க்க்க்க்ர்ர்ர்ர்…!!!!!!”

திடீரெனெ பின்பக்கமாக அந்த சப்தம் கேட்கவும்.. ஆதிரா பதறிப்போய் திரும்பி பார்த்தாள்.. இவள் திரும்பி பார்த்ததும், இருளுக்குள் யாரோ படக்கென மறைவது போல ஒரு தோற்றம்.. வாசல் கதவு மெலிதாக அசைந்து கொண்டிருந்தது..!! ஆதிராவின் நெஞ்சுக்குழிக்குள் ஒரு திடுக்..!!

“தென்றல்..!!!!” – அவளது குரல் அவளையும் அறியாமல் பிசிறடித்தது.

“தென்றல்..!!!!”

மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தாள்.. பதில் ஏதும் வரவில்லை.. வெறும் பிரம்மையாக இருக்குமோ என்றொரு குழப்பம்..!! கையில் இருந்த டார்ச்லைட்டை அப்படியும் இப்படியுமாய் திருப்பி.. அறையை சுற்றி சுற்றி வெளிச்சத்தை பாய்ச்சிப் பார்த்தாள்.. வேறெந்த உருவமும் தென்படவில்லை..!!

அவ்வாறு டார்ச்லைட்டின் வெளிச்ச குவியத்துடன் ஆதிரா அந்த அறையை அலசிக் கொண்டிருந்த போதுதான்.. அவளது நாசியில் சர்ரென்று அந்த வாசனை ஏறியது.. மனதை கொள்ளை கொள்கிற அந்த அற்புத வாசனை.. மகிழம்பூவின் வாசனை..!! அறையின் பழைய நெடியை தாண்டி.. அதிக வீரியத்துடன் ஆதிராவின் நாசியை தாக்கியது..!! அந்த வாசனையை நுகர நேர்ந்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு அமானுஷ்ய உணர்வு பரவ ஆரம்பித்தது.. உடலில் மெலிதாக ஒரு நடுக்கம் பரவ, விரல்கள் வெடவெடத்தன..!!

“விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!!!!!”

திடீரென ஆதிராவின் காதோரமாய் அந்த சப்தம்.. அவளுடைய இதயத்துடிப்பு உடனே ஜிவ்வென்று சொடுக்கி விடப்பட்டது.. ‘ஹ்ஹ்ஹாக்..’ என்று மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள்..!! யாரோ அவளை அணுகுவது போலவும், அண்டுவது போலவும் அவளுக்குள் ஒரு உணர்வு.. அருகிலிருந்து யாரோ விடுகிற மூச்சுக்காற்றை அவளால் உணர முடிந்தது..!!

“யா..யாரு..?? யாரது..??”

வாய்விட்டே கேட்டுவிட்டாள்.. அப்படியும் இப்படியுமாய் காற்றில் கைகளை அசைத்து அசைத்து பார்த்தாள்.. யாரும் தட்டுப்படவில்லை..!! மகிழம்பூவின் வாசனை அவளை சற்றே கிறுகிறுக்க வைத்தது.. தேகத்தில் ஒரு தடுமாற்றத்தை உணர்ந்தாள்.. அந்த அறையை விட்டு உடனே அகன்று விடவேண்டும் போல அவளுக்குள் ஒரு உந்துதல்..!! அவசரமாய் வாசலை நோக்கி நகர்ந்தாள்.. அவ்வாறு நகர்ந்தவள், இரண்டு அடி எடுத்து வைத்ததுமே, திடீரென ப்ரேக் பிடித்தது போல நின்றாள்..!!

ஆதிரா நடக்கும்போது அவளது கையிலிருந்த டார்ச்லைட் நிலைக்கண்ணாடியின் மீது வெளிச்சத்தை சிந்த.. எதேச்சையாக அதை பார்க்க நேர்ந்த பிறகுதான், ஆதிரா அவ்வாறு ப்ரேக்கடித்து நின்றாள்..!! முகத்தில் ஒருவித மிரட்சியுடன் அந்த நிலைக்கண்ணாடியை நெருங்கினாள்.. டார்ச் வெளிச்சத்தை அதன்மீது தெளித்தாள்..!! தூசி அப்பியிருந்த கண்ணாடியில் அந்த வாசகம் கிறுக்கப்பட்டிருந்தது.. ஒரு குழந்தையின் கிறுக்கலைப் போல.. தெளிவில்லாமல்.. கோணல் மாணலாய்..!!

“கண்ணாமூச்சி ரே ரே..!!”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.