மதன மோக ரூப சுந்தரி – 4 44

“ஓ.. சரி சரி..!! அ..அதனால என்ன.. பரவால.. ஹிஹி..!!” அசடு வழிந்தாள் ஆதிரா.

கதிர் வந்து சேர்வதற்கு இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும் என்று ஆதிராவுக்கு தோன்றியது.. அதற்கு முன்பாக அவள் முடிக்க நினைத்திருந்த இன்னொரு வேலை இப்போது ஞாபகத்திற்கு வந்தது..!! கதிருக்கும் சேர்த்து காலை உணவு தயார் செய்யுமாறு தென்றலை பணித்துவிட்டு.. தடதடவென படிக்கட்டு ஏறி தனது அறைக்கு விரைந்தாள் ஆதிரா..!! அலுமினிய உடலும், அகண்ட தலையுமாக இருந்த அந்த டார்ச் லைட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.. மீண்டும் படியிறங்கி ஹாலுக்கு வந்தாள்..!!

மாடிப்படிக்கட்டின் மறுபுற மறைவிற்கு சென்றாள்.. அங்கிருந்த அலமாரியை அசைத்து நகர்த்தினாள்..!! காற்றைத்தவிர உள்ளே வேறேதும் இல்லாத காலி அலமாரி.. அதிக பலம் தேவையின்றி எளிதாகவே அப்புறப்படுத்த முடிந்தது..!! அலமாரியின் அடியில் விரிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பை இழுத்து ஒருபுறமாக ஒதுக்கினாள்.. தரையோடு பொருந்திய ஒரு மரக்கதவு இப்போது பார்வைக்கு வந்தது.. அந்த வீட்டுக்குள் அடங்கிய நிலத்தடி நிலவறைக்கு இட்டுச் செல்கிற மரக்கதவு..!!

கதவைத் திறந்து விரித்து, எதிர்பக்கமாக சாய்த்து வைத்த ஆதிரா.. உள்ளே தெரிந்த சிறிய மரஏணியில் கால்கள் பதித்து கீழிறங்கினாள்.. இறங்கியதுமே இடப்பக்கமாக இன்னொரு கதவு தென்பட்டது.. அதையும் தள்ளித் திறந்து அந்த ரகசிய அறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்..!!

பழங்கால மாளிகை வீடுகளில் இந்த மாதிரி நிலவறை அமைந்திருப்பது இயல்பான ஒன்றுதான்.. எதிரிகளிடம் இருந்தோ, எதிர்பாராத நிகழ்வுகளில் இருந்தோ மறைந்து கொள்ள ஏதுவான இடம்..!! இரண்டு தலைமுறைகளாக இந்த அறையில் யாரும் அதிகமாக புழங்குவது கிடையாது.. தாமிரா ஒருத்தியைத் தவிர..!! சிறுவயதில் இருந்தே சுட்டித்தனம் மிகுந்தவள் அல்லவா..?? ஏதாவது சேட்டை செய்து.. அம்மா, அப்பா, தாத்தா என்று யாரிடமாவது அடி வாங்கிவிட்டு.. இந்த அறையில் வந்து அடைந்து கொள்வாள்..!! பருவமடைந்த பிறகும் கூட.. இந்த அறையில் கணிசமான நேரத்தை ஒதுக்குவதை வாடிக்கையாகவே வைத்திருந்தாள்..!! அந்த ஆராய்ச்சிக் கட்டுரையின் நகல் ஏதாவது சிக்குமா என்றுதான்.. ஆதிரா இப்போது இந்த அறைக்குள் அடியெடுத்து வைத்திருப்பது..!!

அறை முழுவதையும் அடர் இருட்டுதான் நனைத்திருந்தது.. மின்விளக்கு பழுதாகி போயிருக்க, ஆதிராவின் கையிலிருந்த டார்ச்லைட்தான் சொற்பமான வெளிச்சத்தை, அறைக்குள் பாய்ச்சிக் கொண்டிருந்தது..!! அறைக்குள் நுழைந்ததுமே ஒரு பழைய புழுங்கல் நெடி.. சிலந்திகளின் கால்வண்ணத்தில் ஆங்காங்கே நூலாம்படை..!! மங்கலாக காட்சியளித்த அறைக்குள் இருந்த பொருட்கள் மீது.. டார்ச்லைட்டின் நீள்க்கற்றை வெளிச்சம் படர்ந்து, பிறகு அடுத்த பொருளுக்கு நகர்ந்தது..!!

காரை பெயர்ந்துபோன சுவர்ப் பூச்சு.. இன்சுலேஷன் இற்றுப்போன எலக்ட்ரிகல் வயரிங்.. ஒட்டடை படிந்த நான்கு ரெக்கை மின்விசிறி..!! மரக்கட்டில்.. மேஜை.. புத்தகங்கள்.. நாற்காலி.. அலமாரி.. இரும்புப் பெட்டகம்.. அழுக்கு பிடித்த அலுமினிய வாஷ் பேஸின்.. பக்கவாட்டில் யானை தந்தங்கள் பாதிக்கப்பட்டு, பரப்பு முழுவதிலும் தூசு படிந்த, ஒரு ஓவல் ஷேப் நிலைக்கண்ணாடி..!!

மேஜையும், அலமாரியுமே ஆதிராவின் இலக்காக இருந்தது..!! டார்ச்லைட்டை வாயால் கவ்விப் பிடித்துக்கொண்டு.. மேஜை ட்ராயரிலும், அலமாரி அடுக்குகளிலும் அவசர அவசரமாய் தேடினாள்.. அந்த ஆராய்ச்சி கட்டுரையின் நகலினை தாமிரா இங்கேனும் பதுக்கியிருக்கிறாளா என்று பார்த்தாள்..!! தாமிராவுடைய பத்தாம் வகுப்பு பாடப்புத்தகம்.. குறிப்பேடு.. ஹேர்பேண்ட்கள்.. உள்ளாடைகள்.. சுருட்டி வைக்கப்பட்ட அவளது ஓவியங்கள்.. வீட்டுக்கு தெரியாமல் சுவைத்திட்ட சாக்லேட் ராப்பர்கள்..!!

ஒரு ஐந்தாறு நிமிடங்கள் ஆர்வமான, தீவிரமான தேடுதல்.. உருப்படியாய் எதுவும் சிக்கவில்லை.. உள்ளங்கை முழுக்க தூசி அப்பிக்கொண்டதுதான் மிச்சம்..!!

“ப்ச்..!!”

தேடுதலை கைவிட்டு ஏமாற்றமும், சலிப்புமாய் எழுந்துகொண்ட ஆதிரா.. ‘நச்’ என்று எதிலோ முட்டிக்கொண்டாள்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.