மதன மோக ரூப சுந்தரி – 4 45

“இந்தா.. ரயிலு வரப்போகுது இப்போ..!!” பயமுறுத்தி பார்ப்பார் செம்பியன்.

“வந்தா வரட்டும்..!!” ஓடிக்கொண்டே கத்துவாள் கடைசியாக செல்கிற குட்டித்தாமிரா.

“மோதப்போகுது..!!”

தாமிரா இப்போது நின்று திரும்பி பார்ப்பாள்.. கைகள் இரண்டையும் இடுப்பில் வைத்து ஸ்டைலாக நின்றவாறு.. தன்னை நோக்கி ஓடிவருகிற செம்பியனிடம் கேலியாக சொல்வாள்..!!

“மோதினா என்ன..?? ஓ.. எங்கமேல மோதினா உங்க ஓட்டை ரயிலு ஒடைஞ்சு போய்டும்னு பயமா..??” தாமிராவின் கேலி செம்பியனை செம டென்ஷனாக மாற்றும்.

“அடிக்க்க்… குட்டிக்கழுதை..!!! என்ன பண்றேன் பாரு இப்போ..!!”

ஆவேசமாக கத்துகிற செம்பியன், மீண்டும் குனிந்து சரளை கற்களை பொறுக்கிக் கொள்வார்.. ஓடுகிறவர்களை தொடர்ந்து விரட்டிக்கொண்டே செல்வார்.. குழந்தைகள் செல்கிற திசையை விட்டுவிட்டு, குறிபார்த்து வேறு திசையெல்லாம் கல் எறிவார்..!!

பழைய நினைவில் இருந்து மீண்ட ஆதிராவுக்கு, அவளையும் அறியாமல் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது.. எவ்வளவு இனிமையான குழந்தைப் பருவம் என்று தோன்றியது.. மீண்டும் அந்தக் காலங்கள் திரும்ப வராதா என ஏக்கமாக இருந்தது..!!

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்கள் அகழி ரயில் நிறுத்தத்தில் இருந்தனர்.. அலுவலகம் சென்று செம்பியனை சந்தித்தனர்..!! சிறிய அலுவலகம்தான்.. ஒரு நாளைக்கே நாலு ரயில்கள்தான் இந்த நிறுத்தத்தில் நிற்கும்.. எனவே.. ஐந்தே ஐந்து அலுவலர்களை மட்டுமே கொண்ட மிகச்சிறிய அலுவலகம்தான்..!!

ஆரம்ப நல விசாரிப்புகளுக்கு பிறகு.. ஆதிரா வந்த விஷயம் பற்றி கேட்டார் செம்பியன்..!! அவளும்.. தாமிரா மேற்கொண்ட ஆராய்ச்சி பற்றியும், அது தொடர்பாக அவள் இவரை அடிக்கடி வந்து சந்தித்தது பற்றியும் சொல்லிவிட்டு, பிறகு அந்தக் கேள்வியை கேட்டாள்..!!

“தாமிரா என்ன விஷயமா உங்களை வந்து பாத்தான்னு தெரிஞ்சுக்கலாமா அங்கிள்..??”

“ஒன்னுல்லம்மா.. சில தகவல்கள்லாம் கேட்டு தெரிஞ்சுப்பா.. அவ்வளவுதான்..!!!”

“எந்த மாதிரி தகவல்கள்..??”

ஆதிரா அவ்வாறு கேட்டதும், செம்பியன் சட்டென அமைதியானார்.. மனதில் இருக்கிற விஷயங்களை ஒன்று சேர்த்து ஒழுங்குபடுத்த, நேரம் எடுத்துக் கொள்கிறார் என்று தோன்றியது..!! சில வினாடிகள் இடைவெளிவிட்டு, அதன்பிறகே பேசினார்..!!

“ஹ்ம்ம்.. உனக்கே தெரியும்ல.. எனக்கு ஆவி நம்பிக்கைலாம் ரொம்ப ஜாஸ்தி.. ஆவிகள் இந்த உலகத்துல நிச்சயமா இருக்குன்னு நம்புறவன் நான்..!! ஆவிகளை பத்தி நெறைய விஷயங்கள் படிச்சிருக்கேன்.. தெரிஞ்சு வச்சிருக்கேன்.. சின்ன சின்ன ஆராயச்சிலாம் பண்ணிப் பாத்திருக்குறேன்..!!”

“ம்ம்.. அதுலாம் தெரியும் அங்கிள்..!!”

“ஆவிகளை பத்தி பொதுவான ஆராய்ச்சி மட்டும் இல்லாம.. நம்ம ஊரே பயந்து நடுங்குற குறிஞ்சியை பத்தியும், நெறைய விஷயங்கள் நான் சேகரிச்சு வச்சிருக்கேன்..!! இப்போன்னு இல்ல.. சின்ன வயசுல இருந்தே எனக்கு அந்த இன்ட்ரஸ்ட் உண்டு.. எனக்கு ஏனோ குறிஞ்சியை பத்தி தெரிஞ்சுக்குறதுல ஒரு ஈடுபாடு.. முப்பது முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சது இதுலாம்..!!!”

“ம்ம்..!!”

“குறிஞ்சி தூக்கிட்டுப் போயிட்டான்னு சொல்லப்படுறவங்களோட வீட்டுக்குலாம் போவேன்.. அவங்க குடும்பத்தாரோட பேசுவேன்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சு வச்சுப்பேன்.. எல்லாத்தையும் டைரில எழுதி வச்சுப்பேன்..!! இதுவரை.. இந்த அகழில காணாம போனவங்களோட மொத்த லிஸ்டும்.. கிட்டத்தட்ட மொத்தமா எங்கிட்ட இருக்கு..!!

“ஓ..!!”

“அதெல்லாம் பத்திதான் பெரும்பாலும் தாமிரா கேட்பா..!! அதாவது.. நடுவுல ஒரு இருபது வருஷம் எந்த பிரச்சினையும் இல்லாம இருந்தது இல்லையா.. அதுக்கு முந்தி காணாம போனவங்களோட டீடெயில்ஸ், எந்த மாதிரி எந்த சூழ்நிலைல காணாம போனாங்க, அவங்களோட வம்சாவளி என்ன.. இதெல்லாம் கேட்பா.. நானும் சொல்வேன்..!! நான் சொல்றதுல அவளுக்கு தேவையான விஷயங்களை நோட் பண்ணிப்பா.. அவ்வளவுதான்..!!”

“ஹ்ம்ம்ம்ம்..!!”

ஆதிரா அதற்குள்ளாகவே ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருந்தாள்.. ‘அவ்வளவுதானா’ என்பது போல இருந்தது அவள் பெருமூச்சு விட்டவிதம்..!! அவளுடைய மனதில் ஏற்பட்டிருந்த சலிப்பு, அதைத்தொடர்ந்து அவள் பேசிய பேச்சிலும் தென்பட்டது..!!

“ப்ச்.. எனக்கு நெறய விஷயம் புரியலை அங்கிள்.. ஒரே கொழப்பமா இருக்கு.. ஆவி பத்தியும், இந்த குறிஞ்சி பத்தியும்..!!”

“என்னம்மா புரியல உனக்கு..?? எங்கிட்ட கேளு.. எனக்கு தெரிஞ்சா சொல்றேன்..!!”

“மொதல்ல.. மத்த ஊர்ல பேய்களை பத்தி சொல்றதுக்கும், நம்மூர்ல குறிஞ்சி பத்தி சொல்றதுக்கும் ரொம்பவே வித்தியாசம்..!! மத்த ஊர்லலாம்.. பேய் கொன்னுடுச்சுன்னு சொல்வாங்க.. அடிச்சுப்போட்டு போய்டுச்சுன்னு சொல்வாங்க.. பேயை பாத்து ரத்த வாந்தி எடுத்து செத்துப் போய்ட்டார்ன்னு சொல்வாங்க..!! ஆனா.. இங்க.. இந்த மாதிரி.. ஆள் இருந்த சுவடே தெரியாம.. ஒரு சின்ன ட்ரேஸ் கூட இல்லாம.. மனுஷங்க மாயமா மறைஞ்சு போறாங்க.. ஒரு ஆவியால இது முடியுமா..?? அந்தமாதிரி தூக்கிட்டு போற சக்திலாம் ஆவிங்களுக்கு இருக்கா..?? இதெல்லாம் சாத்தியம்தானா..??”

“ஹ்ம்ம்.. சில வெளிநாடுகள்ல ஒரு நம்பிக்கை இருக்கு ஆதிரா.. பூகிமேன்’னு ஒரு கெட்டசக்தி இருக்குறதா நம்புறாங்க.. அந்த பூகிமேனோட குணாதிசயம், நம்ம குறிஞ்சியோட குணாதிசயத்தோட ரொம்பவே ஒத்துப் போகுது..!! பிரேஸில் நாட்டுல சொல்லப்படுற பூகிமேன் கதைகள் இந்த மாதிரிதான்.. எங்க போனாங்கன்னே ட்ரேஸ் பண்ண முடியாத மாதிரி.. அப்டியே ஒரு மேஜிக் மாதிரி.. மனுஷங்களை தூக்கிட்டு போய்டுவானாம் அந்த பூகிமேன்..!!”

“ஓ..!!”

“அதேமாதிரி.. குறிஞ்சி ரெட் கலர் அங்கி போட்டுக்கிட்டு வருவான்னு எல்லாரும் சொல்றாங்கள்ல..??”

“ஆமாம்..!!”

“குறிஞ்சிக்கும் அந்த அங்கிக்கும் என்ன சம்பந்தம்னு எனக்கு தெரியல.. ஆனா.. ஐரோப்பிய நாடுகள்ல இந்த மாதிரி ஒரு நம்பிக்கை இருக்கு.. ரெட்ன்றது ஈவிலோட கலர் அப்படின்னு.. பேய்கள்லாம் செவப்பு கலர் ட்ரஸ் போட்டுட்டு வரும்னுதான் அவங்க நம்புறாங்க..!!”

“ஓ..!!”

“இதெல்லாம் ஏதோ வேற நாட்டு மக்களோட வெத்து நம்பிக்கைன்னு நெனைக்காம.. மனுஷங்களோட உலகம், ஆவிகளோட உலகம்னு.. அந்த ரெண்டை மட்டும் மனசுல வச்சு யோசி ஆதிரா.. நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியும்..!!”

“ஹ்ம்ம்.. சாத்தியம்தான்னு தோணுது..!!”

“கரெக்ட்..!!”

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.