மதன மோக ரூப சுந்தரி – 4 45

அத்தியாயம் 17

ஆதிரா உச்சபட்சமானதொரு குழப்பத்தில் உழன்று தவித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அகழி வந்ததிலிருந்தே நடந்த சில சம்பவங்கள் அவள் மனதில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தன..!! இப்போது, அவளது கைபேசிக்கு வந்திட்ட மர்மமான அழைப்பு.. அவளது பழைய எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்ததும்.. மனதில் ஏற்பட்டிருந்த அந்த கலக்க அதிர்வுகள் இன்னுமே வீரியமடைந்திருந்தன.. புத்திக்கு புலப்படாத ஒரு குழப்பச்சுழலுக்குள் சிக்கித் தவிப்பது போன்றொரு உணர்வு..!!

தனது பழைய கைபேசி எண்ணை ஆதிரா கிட்டத்தட்ட மறந்தே போயிருந்தாள்.. அதுவுமல்லாமல், அழைப்பு வந்த இரண்டுமுறையுமே அந்த எண்ணை சற்று கவனித்துப்பார்க்கவும் தவறியிருந்தாள்..!! அதனால்.. பார்த்ததுமே அவளுடைய பழைய எண் என்பது, சட்டென அவளுக்கு உறைக்கவில்லை..!!

இப்போது கதிர் சொன்னபிறகு.. அந்த எண்ணை ஓரிரு வினாடிகள் உற்று நோக்கியபிறகு.. ஒருவருடத்திற்கு முன்பு அவள் உபயோகித்த எண்தான் அது என்கிற உண்மை.. அவளது மூளையை பலமாக அறைந்தது..!! அந்த உண்மை புத்திக்கு புலப்பட்டதுமே.. அவளது தலைக்குள் கிர்ர்ர்ரென்று ஒரு குடைச்சல்.. மயக்கம் வரும்போல உடலில் ஒரு தடுமாற்றம்.. கண்களையும் முகத்தையும் ஒருமாதிரி சுருக்கிக் கொண்டாள்..!!

“எ..எப்படி கதிர் இது.. எ..என்னோட பழைய நம்பர்ல இருந்து.. எ..எனக்கு ஒன்னும் புரியல..!!”

“எனக்கும் எதுவும் புரியலைங்க ஆதிரா..!! கால் பண்ணினா ‘நாட் இன் யூஸ்’ன்னு வேற வருது..!!”

“ம்ம்ம்ம்..!!”

“மைசூர் போனதுல இருந்தே இந்த புது நம்பர்தான் யூஸ் பண்றீங்களா..??”

“ஆமாம்..!!”

“உ..உங்களோட பழைய ஸிம்மை என்ன பண்ணுனிங்க..??”

“அ..அது.. என்னோட பழைய மொபைல் தொலைஞ்சு போனப்போ.. அந்த ஸிம்மும் சேர்ந்து தொலைஞ்சு போயிருக்கனும்..!!”

“ஓ..!! மொ..மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சு..??”

“தெ..தெரியலை கதிர்.. எனக்கு ஞாபகம் இல்ல.. ஒருவருஷமா நடந்த எதுவுமே எனக்கு சுத்தமா ஞாபகம் இல்ல.. அந்த மொபைல் எப்படி தொலைஞ்சு போச்சுன்னு கூட மறந்துடுச்சு..!!” ஆதிரா அவ்வாறு பரிதாபமாக சொல்லவும், கதிர் அவளது இயலாமையை ஓரளவுக்கு புரிந்துகொண்டான்.

“ஒ..ஒருவேளை சிபிக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இருக்கா..?? அவர்ட்ட கேக்கலாமா..??”

“இ..இல்ல.. அவருக்கும் தெரியல.. அல்ரெடி நான் கேட்டுட்டேன்..!! ‘தொலைஞ்சு போச்சு’ன்னு மட்டுந்தான் நான் அப்போ அவர்ட்ட சொல்லிருக்கேன்.. எப்படி தொலைஞ்சு போச்சுன்னு சொல்லலைன்னு சொன்னார்..!!”

“ம்ம்ம்ம்.. அந்த நம்பர்ல இருந்து எப்படி.. ஒரே கொழப்பமா இருக்கு ஆதிரா..!!”

“எ..எனக்குந்தான் கதிர்..!!”

குழம்பிய மனநிலையுடனே இருவரும் சிங்கமலையில் இருந்து புறப்பட்டார்கள்.. காரை நிறுத்தியிருந்த சாலையை அடையும் மலைச்சரிவில் இறங்கி, மெல்ல நடைபோட்டார்கள்..!! சுற்றிலும் பச்சைப் பசேலென, சூரிய வெளிச்சம் குறைவான பாதை..!! அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்கள்.. ஆங்காங்கே முளைத்த முட்புதர்கள்..!! அந்த முட்புதர்களை.. அனிச்சை செயலாய் கைகொண்டு விலக்கியவாறே.. ஆதிரா மலைச்சரிவில் இறங்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய காலில் ஏற்பட்டிருந்த வெட்டுக்காயத்தில்.. அவ்வப்போது ‘சுருக்.. சுருக்’ என்று ஒரு வலி..!!

ஆதிராவின் சிந்தனையோட்டம் இப்போது வெகுவாக சிதைந்து போயிருந்தது.. மூளைக்குள் வெட்டிய குழப்ப மின்னல்களால், அவளது முகம் வெளிறிப்போய் கிடந்தது.. அவளுடைய கண்களில் இனம்புரியாத ஒரு பயமும், மிரட்சியும்..!! அங்கிருந்து அவள் வீட்டை சென்றடைகிற வரை.. ஆங்காங்கே அவ்வப்போது தோன்றி மறைந்த மாயபிம்பங்களும், மருட்சியான காட்சிகளுமே.. அவள் எந்த அளவிற்கு குழப்பக்கடலில் மூழ்கியிருக்கிறாள் என்பதற்கு சான்றுகள்..!!

1 Comment

  1. And indefinitely it is not far 🙂

Comments are closed.