கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 49 15

“ஒரு வாரமா ஒழுங்கா சோறுகூடத் தின்னாமா பொலம்பிக்கிட்டு இருந்தியே… அதுக்கு என்ன பேரு?”

“நீ சும்மா இரு… இப்ப என்னைக் கண்டுக்காதே” எதிர் கேள்வி கேட்ட மனசுக்கு கடுமையான உத்திரவிட்டாள்.

கூந்தலை வேகவேகமாக வாரி ரப்பர் பேண்ட்டுக்குள் இறுக்கிக்கொண்டு, தன் தோள் பையிலிருந்து, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து தன் ஜீன்ஸ் பாக்கெட்டில் திணித்துக்கொண்டு, ஹாலுக்கு வந்தாள். முகத்தில் ஒரு பிரகாசம் வந்திருந்தது.

“யாரும்மா சுகா போன்ல? உன் அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க… இப்ப வெளியே போறியா என்ன?”

சுந்தரி தன் முகத்தை நிமிர்த்தினாள். தன் பெண் மட்டுமே புரிந்துக்கொள்ளக்கூடிய அளவில் முகத்தில் தன் எரிச்சலைக் காட்டினாள். இப்ப எதுக்குடீ ஒழுங்கா கட்டிக்கிட்டு இருந்த புடவையை அவுத்துப் போட்டுட்டு இந்த ஜீன்ஸ் சனியனைப் போட்டுக்கிட்டு வந்து நிக்கறே? வீட்டுக்கு வந்திருக்கறவங்க என்ன நினைப்பாங்கங்கற புத்தி கொஞ்சமாவது வேண்டாம்? தாயின் மனதில் ஓடும் எண்ணம் சுகன்யாவுக்கும் புரிந்தது.

“அவருதாம்மா…” முகத்தில் கெஞ்சலுடன் தாயை நோக்கினாள்.

“யாரு… நம்ம மாப்பிள்ளையா?” குமாரசுவாமி முகத்தில் புன்னகையுடன் வினவினார்.

“ஆமாம்பா…” முகத்தில் வெட்கம். சட்டெனச் சிவந்தாள் சுகன்யா.

“மாப்பிள்ளை என்ன சொல்றார்..?” அவர் முகத்தில் சிரிப்பு மேலும் விரிந்தது.

“மீனாவுக்கு பர்த் டே கிஃப்ட் வாங்கணும், இந்த ஏரியாவுல நல்ல கடை எங்கேருக்குன்னு கேட்டேன்… நான் வர்றேன்னார்..” கோச்சிக்காதேம்மா… அவருக்கு புது டிரஸ் போட்டுக்காட்டணும்ன்னு ஆசையா இருக்கும்மா… போய்ட்டு சீக்கிரம் வந்துடறேம்மா… தன் மனதிலிருப்பதை தன் கண்களால் அம்மாவிடம் சொன்னாள்.

“குட் ஈவீனிங் அங்கிள்… தாத்தா நல்லா இருக்கீங்களா? எப்ப வந்தீங்க ஊர்லேருந்து?” உதட்டில் புன்னகையுடன், செல்வா கையில் பைக் கீயை விரலில் சுழற்றிக்கொண்டே உள்ளே நுழைந்தான். சிவதாணுவின் காலைத் தொட்டு வணங்கினான்.

“சிவ.. சிவா… நல்லாயிருக்கணும்.”

“நீங்க எல்லோரும் வீட்டுக்கு வந்து மீனாவை ஆசிர்வாதம் பண்ணணும்” பொதுவாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டான், செல்வா.