விஸ்வா, “ஓ! அதனால் தான் ஒரு சின்ன பாராட்டு கூட இல்லாமல் என்னை அனுப்பினாங்களா?”
டாக்டர் மதுசூதன், “அது உன் பாதுகாப்புக்காக”
விஸ்வா, “என்ன சொல்லறீங்க?”
டாக்டர் மதுசூதன், “நீ சுட்டுக் கொன்ன ஆஃபீஸரின் அப்பா பாகிஸ்தான் ஆர்மியில் ஜெனரல் ஆக இருந்தவர். பிறகு ஐ.எஸ்.ஐயில் முக்கியப் பதவியில் இருந்தார். உனக்கு என்ன மெடல் அல்லது விருது கொடுத்து இருந்தாலும் அதுக்கு ஒரு அஃபீஷியல் சைடேஷன் தயாரிச்சு இருக்கணும். அந்த பாகிஸ்தான் ஆஃபீஸரை நீதான் கொன்னே அப்படின்னு தெரிய வந்தா உனக்கும் உன் குடும்பத்துக்கும் ஆபத்து வரக்கூடும்-ன்னுதான் எந்த மெடலும் விருதும் கொடுக்கப் படலை.”
உண்மையை உணர்ந்து விஸ்வா மௌனம் காத்தான் …
டாக்டர் மதுசூதன், “உன் கேஸ் ஃபைலை யாரோ திறந்து பார்க்கறாங்கன்னு தெரிஞ்சதும் எனக்கு நியூஸ் வந்தது. போலிக் கேஸ் ஃபைலாக இருந்தாலும் it was flagged. என்ன ஏதுன்னு விசாரிச்ச போது நீ டைவர்ஸ்ஸுக்கு அப்ளை பண்ணி இருப்பதாவும் ஜட்ஜ் மேரேஜ் கவுன்ஸிலிங்க் தேவைன்னு ஆர்டர் போட்டு இருப்பதாவும் தெரிஞ்சுது”
விஸ்வா, “நான் ஏன் டைவர்ஸுக்கு அப்ளை பண்ணினேன்னு உங்களுக்குத் தெரியாது”
டாக்டர் மதுசூதன், “தெரியும். உன் டைவர்ஸைப் பத்தின எல்லா விவரங்களும் எனக்குத் தெரியும். என் இன்ஃப்ளுயன்ஸைப் பயன் படுத்தி டாக்டர் அமுதாவின் கேஸ் ஃபைலை வாங்கி முழுக்கப் படிச்சுட்டுத்தான் சொல்லறேன்”
விஸ்வா, “சோ, நான் செய்யறதில் என்ன தப்பு?”
டாக்டர் மதுசூதன், “விஸ்வா, நீ வனிதாவை டைவர்ஸ் பண்ணாதேன்னு சொல்லலை. பண்ணனும் அப்படின்னும் சொல்லலை. எந்த முடிவு எடுத்தாலும் அதை நினைச்சு நீ வருங்கலத்தில் வருத்தப் படக் கூடாது. முடிவு எடுக்க தோதான மன நிலையில் நீ இல்லை”
விஸ்வா, “என்ன என்னதான் செய்யச் சொல்லறீங்க?”
டாக்டர் மதுசூதன், “என்னை உனக்கு உதவி செய்ய அனுமதி கொடு. உன் மேல் இருக்கும் அக்கறையினால் மட்டும் நான் இதைச் சொல்லலை. உனக்கு மன ரீதியா எந்த பாதிப்பும் வராமல் பாத்துப்பேன்னு நான் என் பாருவுக்கு வாக்குக் கொடுத்து இருக்கேன். அதுக்காவும் தான்”
அவர் அப்படிச் சொன்ன போது, அவன் அவரிடம் சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் பெற்றுக் கொண்டு இருந்த போது பல மாலைகளை அவரது வீட்டில் கழித்ததை நினைவு கூர்ந்தான். அவனை மனோதத்துவ மருத்துவம் பெறும் ஒரு பேஷண்டாகப் பார்க்காமல் அவனிடம் வெகு சகஜமாகப் பழகி அவனிடம் அன்பு செலுத்திய அவரது அன்பு மனைவி பார்வதியும் அவன் நினைவுக்கு வந்தார்.
விஸ்வா, “ஓ! எப்படி இருக்காங்க?”
டாக்டர் மதுசூதன், “Alas, I lost my Paru to the dreaded cancer. நான் ரிடையர் ஆகறதுக்கு மூணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வந்தது. ரிடையர் ஆகும் போது, ஐ மீன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கடைசி மூச்சு விட்டா”
