கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

செல்வா இப்போதைக்கு கண் விழிக்கமாட்டான்னு டாக்டர் சொன்னார்; அவன் தூங்கிக்கிட்டு இருக்கும்போது, ஏதாவது டிஃபன் வாங்கிட்டு போய் அவங்களுக்கும் குடுத்துட்டு, தானும் சாப்பிட்டால் என்னவென்று அவள் மனதில் பட்டது. மருத்துவமனைக்கு சற்று தள்ளியிருந்த ஹோட்டலில் நுழைந்து அத்தனை பேருக்கும் போதுமான அளவிற்கு தக்காளி சாதமும், ரெண்டு பாக்கெட் தயிர் சாதமும், தொட்டுக் கொள்ள மசால் வடையும், கூடவே ரெண்டு பாட்டில் மினரல் வாட்டரும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் சுகன்யா.
“அத்தே; எவ்வளவு நேரம் நீங்க வெறும் வயித்தோட இருப்பீங்க, ஏதாவது கொஞ்சம் சாப்பிடுங்களேன்”
“இல்லம்மா, எனக்கு பசியில்லை, நான் காத்தால இங்க வர்றதுக்கு முன்னே சாப்பிட்டுட்டுத்தான் வந்தேன்; நீங்கள்ளாம் சாப்பிடுங்க, நீ ரத்தம் வேற குடுத்துட்டு வந்திருக்கே, டயர்ட்டா இருப்பே” மல்லிகா வேண்டுமென்றே சுகன்யாவின் முகத்தைப் பார்க்காமல் பேசியவள், தன் மனதுக்குள் யோசிக்கத் தொடங்கினாள். இவ கொஞ்சம் பார்க்கற மாதிரி அழகா இருக்காளே, திமிர் பிடிச்சவளா இருப்பாளோன்னு நினைச்சேன்; இல்லாட்டி அசமஞ்சமா இருக்கப்போதுன்னு நெனச்சேன், ஆனா ரெண்டுலேயும் சேராம, கெட்டிக்காரியாத்தான் இருக்கா. எல்லோரும் பசியோட இருப்போமேன்னு, தான் காதலிச்சவன் குடும்பத்துக்காக, உரிமையா ஓடிப்போய் எதையோ சட்டுன்னு வாங்கிட்டு வந்திருக்காளே; நல்ல தாரள மனசுதான் இவளுக்கு; பை நெறையவும் வாங்கிட்டு வந்திருக்கா! நான் நெனைச்ச மாதிரி, ஆசையா அத்தைன்னு கூப்பிட்டு என்னையும் எப்படி தந்திரமா வளைக்கறாப் பாரு; அவ கையால குடுக்கறதை மனசு திருப்தியா வாங்கிச் சாப்பிட்டுட்டு அப்புறம் நீ வேணாண்டின்னு எப்படி அவ கிட்டவே சொல்லுவேன்; இவ நம்ம வீட்டுல இருக்கிற எல்லாரையும் ஏற்கனவே தன் கையில போட்டுக்கிட்டா; இப்ப நீ ஒருத்திதான் பாக்கி; மல்லிகா இவகிட்ட நீ மசிஞ்சிடாதேடி. சுகன்யாவும் கில்லாடியாத்தான் இருக்கா; சாப்பாட்டைக் கையில வெச்சிக்கிட்டு, பசியில துடிச்சிக்கிட்டு நிக்கற நம்ப அம்மாவை படால்ன்னு அத்தைன்னு கூப்பிட்டு தன் வழிக்கு கொண்டாரப்பாக்கிறாளே; மீனா தன் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

“அத்தை, உங்களுக்கு என் மேல என்னமோ கோபம்; அதை மனசுல வெச்சிக்கிட்டுத்தான், நான் டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சாப்பிடமாட்டேங்கிறீங்க; செல்வா சொல்லியிருக்கார்; ஞாயித்துக்கிழமையில நீங்க பதினோரு மணி வாக்கிலத்தான், நிதானமா குளிச்சு முழுகிட்டு, சாம்பார், பொறியல்ன்னு முழு சமையல் பண்ணித்தான் சாப்பிடுவீங்கன்னு; உங்க முகமே சொல்லுது; இப்ப நீங்க பசியோட இருக்கீங்கன்னு; உங்க கோபம் ஒருபக்கத்துல இருக்கட்டும்; எனக்காக இப்ப ஒரு வாய் சாப்பிடுங்க … ப்ளீஸ் …
“ சுகன்யா கெஞ்சலாகப் பேசினாள். அடப்பாவி! இந்தப் பய புள்ளை என் மானத்தை வாங்கறதுக்குன்னே பொறந்திருக்கான். என்னைப்பத்தியும், என் குடும்பத்தைப் பத்தியும் இவகிட்ட இன்னும் என்ன என்ன சொல்லி வெச்சிருக்கான்னுத் தெரியலையே? மல்லிகா தன் மனதுக்குள் மருகினாள். நடராஜன் அவர்கள் இருவருக்குமிடையில் நடந்துகொண்டிருந்த
“நீயா நானா” விளையாட்டை, இதுல இன்னைக்கு
“ஜெயிக்கப் போறது யார்” என்ற ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
“எனக்கு பசி உயிர் போவுது … என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க; நான் சாப்பிடறேன்; எனக்கு குடுங்க; சீனு வந்தான்னா யாருக்கும் ஒண்ணும் மிச்சம் இருக்காது … மொத்தமா வாரி கொட்டிகிட்டுப் போயிடுவான்; அப்பா உங்களுக்கு ஒண்ணும் இப்ப சாப்பிடறதுல பிரச்சனையில்லையே” மீனா கிண்டலாகச் சிரித்தவாறு அவள் கையிலிருந்த பையை வாங்கி பொட்டலங்களை வெளியில் எடுத்தாள்.