கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

காலையிலிருந்து காய்ந்த வெய்யிலுக்கு, வானம் லேசாக கருத்து மேக மூட்டத்துடனிருந்தது. நடராஜன் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், மழை வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். மணி ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது. நாளை திங்கள் கிழமை, ஆபீசுக்கு போயே ஆகணும். கடந்த ரெண்டு நாட்களாக செல்வாவால் வீட்டில் நடக்கும் கூச்சலையும், ரகளையையும், இன்று இப்படி ஆஸ்பத்திரிக்கு வந்து நிற்பதையும் நினைத்தப்போது அவருக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்து ஒரு காபி குடித்தால் தேவலையாக இருக்கும் என தோன்றியது. சீனு ரெண்டு மணிக்கெல்லாம் தன் வீட்டுக்குப் போய்விட்டான். ராத்திரிக்கு செல்வாவுடன் அவன் இருப்பதாக சொல்லியிருந்தான். மாலை ஏழு மணிக்கு வரும்போது அவன் சாப்பிட தன் வீட்டுலேருந்தே டிபன் கொண்டு வருவதாகவும் சொல்லி சென்றிருந்தான். சீனு வந்ததும், மற்றவர்கள் வீடு திரும்பவும், போகும் வழியில் சுகன்யாவை டிராப் செய்வதாகவும் முடிவு செய்திருந்தனர். மருத்துவமனைக்குள்ளேயே இருந்த கேண்டீனுக்கு போகலாம் எனத் திரும்பிப்பார்க்க, மீனாவும், சுகன்யாவும் நெருங்கி உட்கார்ந்து, தாங்கள் இருக்குமிடத்தையே மறந்து சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் முகத்திலும் ஒரு இனம் தெரியாத உற்சாகம் மெல்லிய இழையாக ஓடிக்கொண்டிருந்தது. ஒத்த வயசு பொண்ணுங்க; சட்டுன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் அன்னியோன்யமாயிட்டாங்க; தொடர்ந்து ஒரு மணி நேரமா வாய் ஓயாம பேசறதுக்கு அப்படி என்னத்தான் இருக்கும் இந்த பொண்ணுங்க நடுவுல? நடராஜன் மெல்ல நடந்து அவர்கள் பக்கத்தில் போக, அவரை பார்த்ததும் சுகன்யா மரியாதையாக எழுந்து நின்றாள். பெத்தவளை காலையில பாத்தேன். பொண்ணை காலையிலேருந்து பாத்துக்கிட்டு இருக்கேன். நூலைப் போலத்தானே சேலையிருக்கும். அவர் மனதுக்குள் மகிழ்ச்சியடைந்தார்.
“வாங்கடா கண்ணுங்களா, கேண்டீனுக்குப் போய் ஒரு காபி சாப்பிடலாம்”
“அப்பா இந்த நேரத்துக்கு சுகன்யா சூடா பஜ்ஜியோ, வடையோ சாப்பிடுவாங்களாம்” மீனா சிரித்தாள்.
“பாக்கலாம் … பக்கத்துல ஏதாவது கிடைக்குதான்னு”
“சும்மா இரு மீனா, அதெல்லாம் எனக்கு வேணாம். செல்வாவுக்கு வேணா எதாவது வாங்கிக்கலாம், காலையிலேருந்து அவர் ஒண்ணுமே சாப்பிடலே; கண் விழிச்சா குடுக்கலாம்ன்னு நான் சொல்லிக்கிட்டிருந்தேன்.”
“சுகன்யா, நாளைக்கு நீ ஆபீஸ் போகணுமில்லையாம்மா?” காபியை உறிஞ்சியவாறே நடராஜன் வினவினார்.
“ஆமாம் … அங்கிள், லீவு போடணுமின்னா போட்டுக்கலாம்; அதுல ஒண்ணும் பிரச்சனையில்லை; சுகன்யா, மெது வடையை கடித்துக்கொண்டே சொன்னாள்.
“நோ … நோ … நான் சாதாரணமா கேட்டேன்ம்மா … நீ லீவெல்லாம் எடுக்க வேண்டாம். மீனாவுக்கு இப்ப காலேஜ் செமஸ்டர் லீவு தானே; நாளைக்கு பகல்லே மீனாவும் அவங்க அம்மாவும் அவனைப் பாத்துக்குவாங்க … நீ இவனை பாக்கறதுக்கு சாயந்திரமா ஒரு நடை வந்து போயேன் …” புன்னகையுடன் பேசினார் நடராஜன்.
“சரி அங்கிள் … இன்னைக்கு மாமா மட்டும்தான் ஊருக்கு திரும்பி போறார்; இன்னும் ஒரு வாரம் அம்மா என் கூடத்தான் இருப்பாங்க, ஈவினிங் இங்க வரதுலே எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்லே” அவர்கள் மூவரும் கேண்டீனிலிருந்து செல்வா இருக்குமிடத்துக்கு சென்ற போது, ஐ.ஸி.யூ. விலிருந்து மல்லிகா வெளியில் வந்தாள்.

“செல்வா முழிச்சிக்கிட்டிருக்கான். உடம்பு வலி குறைஞ்சிருக்காம். விழுந்தப்ப அவன் பைக் ஹேண்டில் பார் மேல விழுந்தானாம். உள் காயம் பட்டிருக்கும் போல தெரியுது, மெதுவா பொரண்டவனைப் பாத்தேன்; செவப்பா ரத்தம் கட்டிகிட்டு இருக்கு; அதனால இப்ப இடுப்புல மட்டும் வலி அதிகமா இருக்குதுங்கறான். சாயந்திரம் ரவுண்ட்ஸ் வர்ற டாக்டர் கிட்ட சொல்லணும்; எல்லாம் அவன் நேரம் தான்; அவனைப்படுத்தி எடுக்குது”.
“இப்ப பசிக்குதாம் அவனுக்கு; டாக்டரிடம் கேட்டதுக்கு, லைட்டா எது வேணா சாப்பிடட்டும், படுத்துக்கிட்டே இருக்கணுமில்லயா, அதனால சுலபமா செரிக்கற மாதிரி குடுங்கன்னு சொல்றாங்க” மல்லிகா முகத்தில் கேள்விக்குறியுடன் நடராஜனைப் பார்த்தாள்.
“எங்கிட்ட பேசற மாதிரி நீ சும்மா அவன் கிட்ட நல்ல நேரம், கெட்ட நேரம்ன்னு பேசிகிட்டு நிக்காதே; நல்ல நேரம் நடக்கவேதான், இந்த மாதிரி ஒரு பொண்ணு சரியான நேரத்துல வந்து அவன் கூட நின்னா; புரிஞ்சுதா; இந்தா, இந்த பார்சல்ல ரெண்டு மெதுவடை, தேங்காய் சட்னியோட இருக்கு; நல்லா மென்னு தின்னச் சொல்லு; எல்லாம் ஜீரணமாயிடும்; ஃப்ளாஸ்க்ல காஃபி இருக்கு; கொண்டு போய் குடுத்துட்டு வா. நீயும் காஃபியை குடி. சீனு வந்ததும், நாம கிளம்புவோம். நேரத்துல சுகன்யாவை அவ வீட்டுல விட்டுட்டு போகணும்.” அவர் மீண்டும் மரத்தடிக்குச் சென்று சிமிட்டி பெஞ்சில் உட்க்கார்ந்து கொண்டார். இப்ப எப்படி இருக்கு செல்வா … உடம்பு வலி பரவாயில்லயா?” சுகன்யாவின் குரலில் பரிவு நிரம்பி வழிந்தது. மல்லிகா பேப்பர் கப்பில் காஃபியை ஊற்றியவாறு அவர்களை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகன்யாவைக் கண்டதும் தன் மகனின் முகத்தில் பளிச்சென்று ஏற்பட்ட மாற்றத்தை அவள் கவனிக்கத் தவறவில்லை. இவ தான் என் வீட்டுக்குள்ள வந்து கரண்டி புடிக்கணும்ன்னு எழுதியிருந்தா அதை நான் தடுக்கவா முடியும்; நான் நிக்கறேன்னு கூட அவ தயங்கலை; உரிமையா தலை மாட்டில நின்னுகிட்டு அவன் நெத்தியை அழுத்தி விடறா; தலையை கோதிவிடறா; தாயும், தாலிக்கட்டிகிட்டவளும் தானே இப்படி நிக்கமுடியும். ஜோடிப் பொருத்தம் என்னமோ நல்லாத்தான் இருக்கு. அவள் மனதில் அலை அலையாக எண்ணங்கள் படையெடுக்கத் தொடங்கின.