கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா … சீனுவுக்கு போன் பண்ணட்டும்மா, அவங்களை வீட்டுல விட்டுட்டு திரும்பி வரும்போது, அவனை ஏதாவது ஹோட்டல்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்றேனே … ?” மீனா நடராஜனிடம் வினவினாள்.
“எனக்கும் தான் பசியில தலைவலிக்க ஆரம்பிச்சிடிச்சி; மணியும் ஒண்ணாக போகுது; டாக்டர் சொன்ன மாதிரி நான் ஒரு ஆள் இங்கேயே இருக்கேன்; சீனு வந்ததும் நீங்க எல்லாம் பக்கத்துல எதாவது நல்ல ஹோட்டல் இருந்தா, சட்டுன்னு எதையாவது சாப்பிட்டுட்டு, எனக்கு ஒரு தயிர் சாதம் பார்சல் வாங்கிட்டு வந்துடுங்கோ; நான் வெளியில மரத்தடியிலே உக்கார்ந்து ஒரு வாய் அள்ளிப் போட்டுகிறேன்.” மல்லிகா தன் பெண்ணைப்பார்த்தாள்.
“அம்மா, சுகன்யாவை மறந்துட்டியா?”
“ஏண்டி, நீ என்னா, என்னை ஒரு கொடுமைக்காரின்னே உன் மனசுக்குள்ள முடிவு கட்டிட்டியா? என்னை இதயமே இல்லாத ஒரு ராட்சசின்னு நினைக்கிறியா? பாவம் அந்த பொண்ணு, என் புள்ளைக்காக தன் ரத்தத்தை குடுத்துட்டு, காலையிலேருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம துடி துடிச்சுக்கிட்டு இருக்காளே; அது எனக்கு புரியலன்னு நீ நினைக்கிறியா? சுகன்யா உன் பொண்ணுன்னு இப்பத்தான் அஞ்சு நிமிஷம் முன்னாடி அவ அம்மா சொல்லிட்டு போனா; சுகன்யாவை விட்டுட்டு நான் சாப்பிடுவேனா?
“அப்புறம் ஏம்ம்மா … நீ காலையில அவகிட்ட அவ மனசை புண்படற மாதிரி பேசினே? எல்லாரும் உன்னை தப்பா நினைக்கிற மாதிரி ஏன் நடந்துகிட்டே?” மீனா தன் தாயின் தோளை ஆதுரத்துடன் அழுத்தினாள்.
“நீ கேக்கிற கேள்விக்கெல்லாம் என்னால இப்ப உனக்கு பதில் சொல்லமுடியாது. நான் சொன்னாலும், நான் சொல்றதுல இருக்கற அர்த்தம் உனக்கு இப்ப புரியாது”
“சரி … அவளுக்குத்தான் நீ சொல்றதுல இருக்கற அர்த்தம் புரியாது; எனக்கும் புரியாதா? இப்பத்தான் அவளை நீ நேராப் பாத்துட்டியே; அந்த பொண்ணோட அம்மாவையும் பாத்துட்டே; அவ தாய் மாமாவையும் பாத்துட்டே; சும்மா ஜாலியா பையனுங்க பின்னால வண்டியில ஏறி ஊர் சுத்திட்டு, சினிமா பாத்துட்டு … அவன் காசுல பாப்கார்ன்னும் ஐஸ்கீரீமும் வாங்கித் திண்ணுட்டு, அப்புறமா அந்த பையனுக்கு டாட்டா காட்டிட்டு, ஃபாரின்லேருந்து வழுக்கை விழுந்த சொட்டைத்தலையன் எவனாவது கிடைச்சான்னா, அவன் பின்னாடி போற இந்த காலத்து பொண்ணுங்க மத்தியில, உன் பிள்ளைக்காக ஓடி ஓடி அவ பண்ற காரியங்களையும் உன் கண்ணால பாக்கிறே; உன் மனசுல கை வெச்சு சொல்லுடி; உனக்கு அவளைப் பிடிக்கல்லேன்னு? அவ நம்ம பையனுக்கு ஏத்தவ இல்லையா? நடராஜன் வேகமாக அவர்கள் பேச்சில் குறுக்கிட்டார்.
“இப்பவே இங்கேயே எல்லாத்தையும் எங்கிட்ட நீங்க பேசி முடிச்சே ஆகணுமா? மல்லிகாவின் முகம் மெலிதாக சிவக்க ஆரம்பித்தது.
“ஆமாம்; அப்படித்தான் வெச்சுக்கோடி; உன் பைத்தியக்காரத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாமப் போச்சு; உன் மனசுல என்னத்தான் இருக்குன்னு எனக்கு தெரியலை; நீ என்ன எதிர்ப்பாக்கிற அவகிட்ட; சொன்னாத்தானே தெரியும்; உன்னால, நீ உளறினதாலே, காலையிலே அவங்க ரெண்டு பேருகிட்டவும், தேவையில்லாம நான் மன்னிப்பு கேக்க வேண்டியாதாச்சு; அவளை உனக்கு புடிக்குது; புடிக்கலைன்னு; உண்மையை சொல்றதுல உனக்கு என்ன தயக்கம்?”
“….”
“சொல்லுடி மல்லிகா; நீ ஏன் பதில் சொல்ல மாட்டேங்கிற?”
“எனக்கும் அவளைப் பிடிச்சிருக்குங்க; ஆனா …” மல்லிகா தன் வார்த்தையை முடிக்கும் முன், சுகன்யா கையில் ஒரு
“கேரி பேக்குடன்” வேகமாக மூச்சிரைக்க அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். தன் மாமாவையும், அம்மாவையும் வழியனுப்பிவிட்டு நின்ற சுகன்யாவுக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. நாம ஓடி வந்த மாதிரிதான் செல்வாவோட குடும்பமும், ஆக்சிடெண்ட் ஆன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அரக்க பரக்க ஹாஸ்பெட்டலுக்கு ஓடி வந்திருப்பாங்க; அவங்களும் கண்டிப்பா அவ்வளவு சீக்கிரமா காலையில டிஃபன் சாப்பிட்டு இருக்கமாட்டாங்க. அவங்களும் இப்ப பசியோடத்தான் இருப்பாங்க.