மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

வனக்கொடியிடம் பேசிமுடித்தபிறகு.. அந்த வீட்டை ஒருமுறை கவனமாக சுற்றிப் பார்த்தார் வில்லாளன்.. அவருடன் உதவிக்கு சென்றிருந்தார் திரவியம்..!! கீழ்த்தளத்தின் எல்லா அறைகளையும் அலசினார்.. மாடிப்படியேறி மேல்த்தளத்தை ஒருமுறை சுற்றிவந்தார்..!! வீட்டுக்குள் அடங்கியிருந்த ரகசிய அறை பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு.. அதற்குள்ளும் சென்று தீவிரமாக பார்வையிட்டார்..!!

பார்வையிட்டதன் பிறகு ஹாலுக்கு வந்த வில்லாளன்..

“கதவு, ஜன்னல்லாம் எதுவும் உடைஞ்சிருக்குற மாதிரி தெரியல.. வெளில இருந்து யாரும் உள்ள வந்திருக்க சான்ஸ் இல்லன்னுதான் தோணுது..!! போயிருந்தா இவராத்தான் போயிருக்கனும்..!!” என்று இயல்பான குரலில் சொன்னதை எல்லாம்,

“…………………….” எங்கோ ஒரு வெறித்த பார்வையுடன் கேட்டுக்கொண்டாள் ஆதிரா.

“நைட்டு தூங்குறப்போ கதவெல்லாம் லாக் பண்ணிட்டுத்தான தூங்குனீங்க..??”

“ஆ..ஆமாம்..!!”

“காலைல எந்திரிச்சு பாக்குறப்போ அவர் உங்க பக்கத்துல இல்ல..??”

“ம்ம்..!!”

“அப்புறம்.. வனக்கொடி வீட்டுக்கு வந்ததும் விஷயத்தை சொல்லிருக்கிங்க..!! அதுவரை என்ன பண்ணுனீங்க..??”

“இல்ல.. நான் எந்திரிக்கிறப்போவே வனக்கொடிம்மா வந்திருந்தாங்க..!!”

“ஓ..!! கதவெல்லாம் லாக் பண்ணிட்டு தூங்கினதா சொன்னீங்க.. அப்புறம் எப்படி அவங்க..??”

“அவங்கட்ட ஒரு சாவி இருக்கு..!!”

ஆதிரா உலர்ந்துபோன குரலில் சொல்ல.. இப்போது வில்லாளன் நெற்றியை சற்றே சுருக்கினார்.. அப்படியே திரும்பி வனக்கொடியை ஒரு சந்தேகப்பார்வை பார்த்தார்..!! அவருக்கு ஏற்கனவே வனக்கொடியின் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது.. இப்போது அவளை சந்தேகப்படும்படியான ஒரு சூழல் அமையவும், அவர் பார்த்த பார்வையில் ஒருவித கடுமையும், கூர்மையும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது..!!

“இங்க வா..!! நீ எப்போ வீட்டுக்கு வந்த..??” வனக்கொடியை ஒருமையில் அழைத்து கேட்டார்.

“நா..நான்.. நான் வர்றப்போ..” பதற்றத்தில் வனக்கொடி தடுமாறிக் கொண்டிருக்கும்போதே,

“இன்ஸ்பெக்டர்..!!” இறுக்கமான குரலில் வில்லாளனை அழைத்தாள் ஆதிரா.

“ம்ம்..” ஆதிராவின் பக்கமாக திரும்பினார் வில்லாளன்.

“தயவு செஞ்சு அவங்கமேல சந்தேகப்படாதிங்க ப்ளீஸ்..!! அவங்க பார்வைதான் அப்படி இருக்கும்.. மத்தபடி ரொம்ப நல்லவங்க..!! அவங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! இதுக்குலாம் காரணம் வேற ஆளு.. அது யார்னு எனக்கு நல்லா தெரியும்..!!”

“யா..யாரு..??”

“குறிஞ்சி..!!!!” ஆதிரா தீர்க்கமாக சொல்ல, வில்லாளனின் முகத்தில் ஒருவித கேலிப்புன்னகை.

“ஹஹா.. எப்படி சொல்றீங்க..??”

“தெரியும்.. என்னால ஃபீல் பண்ண முடியுது..!! இதுக்குலாம் காரணம் மனுஷங்க இல்ல.. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி..!!”

“ஓ..!! எதனால அந்த முடிவுக்கு வந்தீங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா..??”

“நான் எவ்வளவு தெளிவா சொன்னாலும் அது உங்களுக்கு புரியாது.. உங்களால புரிஞ்சுக்க முடியாது..!!”

“கமான் ஆதிரா.. சொல்லுங்க ப்ளீஸ்..!! நீங்க சொன்னாத்தான என்னாலயும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்..??”

“இல்ல இன்ஸ்பெக்டர்.. உங்களால எனக்கு ஹெல்ப் பண்ண முடியாது..!! உங்க அக்கறைக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. நீங்க கெளம்பலாம்..!!”

சொல்லிவிட்டு விருட்டென எழுந்து நடந்த ஆதிராவையே.. திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார் வில்லாளன்..!! அதன்பிறகும் அந்தவீட்டில் தனது வேலை என்னவென்று புரியாதவராய்.. திரவியத்திடம் சொல்லிவிட்டு சீக்கிரமே அங்கிருந்து வெளியேறினார்..!!