மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

ஆதிராவால் அழத்தான் முடிந்தது.. அதைத்தாண்டி எதையும் செய்கிற மனத்தெளிவு அவளுக்கு இல்லை..!! அமானுஷ்யமான ஒரு சக்தியை வென்றுமுடிப்பதற்கு திட்டம் தீட்டுகிற அளவுக்கு.. தளர்ந்துபோன அவளது மூளைக்கோ கிஞ்சித்தும் வலுவென்பது இல்லை..!! கண்கள் மட்டும் தாரைதாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தன.. அகழி வந்து இந்த ஐந்தாறு நாட்கள் நடந்த சம்பவங்களையே, அவளது மனது திரும்ப திரும்ப நினைத்து வெந்துகொண்டிருந்தது.. கணவனின் ஆசைமுகத்தை மீண்டும் காண இயலுமா என்கிற கேள்வி, நொடிக்கொருமுறை அவளது இற்றுப்போன இருதயத்தில் அமிலம் வார்த்துக்கொண்டிருந்தது..!!

சிறிது நேரத்தில்.. முகிலனின் குடும்பத்தினர் விஷயத்தை கேள்விப்பட்டு ஆதிராவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.. முதன்முறையாக முகிலனும் அவர்களுடன் வருகை தந்திருந்தான்..!! ஊர்த்திருவிழாவை உற்சாகம் இல்லாமலே நடத்தி முடித்திருந்தவன்.. குடும்பத்து மனக்கசப்பை மனதில் கொள்ளாமல் அந்தவீட்டு வாசற்படி மிதித்தான்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும் ஆதிராவை ஆறுதல்படுத்த முயன்றனர்.. ஆதிராவோ, ஆறுதலுக்கு அணுவளவும் மாறுதல் கொள்கிற நிலையில் இல்லை..!! முகிலன் தயங்கி தயங்கி பேசியதை மட்டும்.. கொஞ்சமாய் காதுகொடுத்து கேட்டுக் கொண்டாள்..!!

“எ..எனக்கு எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல ஆதிரா..!! இ..இந்த மாதிரி ஒரு நெலமைல நீ இருக்குறப்போ.. உன்னை வந்து பார்த்து பேசணும்னு தோணுச்சு.. அதான்.. நானாவே கெளம்பி அம்மாவோட வந்தேன்..!!”

“ம்ம்..!!”

“உ..உனக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

“இல்லத்தான்.. உங்கமேலலாம் எனக்கு எந்த கோவமும் இல்ல..!!”

“ஹ்ம்ம்.. தாமிரா பண்ணின அந்த ஆராய்ச்சி எனக்கு பிடிக்கல.. அதை நீ திரும்ப தோண்டினதும் எனக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!! மத்தபடி உங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு எந்த கோவமும் இல்ல..!! தாமிரா காணாமப் போனதுக்கு சத்தியமா நான் காரணம் இல்ல ஆதிரா..!!”

“ம்ம்..!! இ..இப்போ தெரியுது..!!”

“குறிஞ்சியைவிட.. குடும்பமும், குடும்ப மானமும் எனக்கு ரொம்ப முக்கியம் ஆதிரா.. அதான் அப்படிலாம் நடந்துக்கிட்டேன்..!! நான் குடும்பம்னு சொன்னது.. உன்னை, தாமிராவை, சிபியை.. எல்லாரையும் சேர்த்துதான்..!!”

“பு..புரியுதுத்தான்..!!”

” எ..எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல..!! உனக்கு நான் ஏதாவது செய்யணும்னா சொல்லு.. செய்றேன்..!!”

ஆதிரா பதிலேதும் சொல்லவில்லை.. அமைதியாகவே இருந்தாள்..!! எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுவதோ, கோபம்தோய்ந்த வார்த்தைகளை கொப்பளிப்பதோ.. எப்போதுமே முகிலனுக்கு எளிதான விஷயம்..!! இந்தமாதிரி ஒரு இக்கட்டான, இறுக்கமான சூழ்நிலையில்.. கனிவாக, கருத்தாக பேசுவதெல்லாம் அவனுக்கு கைவராத காரியம்..!! இப்போதும் அப்படித்தான்.. மனதில் தோன்றியதை வெளிப்படையாக கொட்டிவிட்டு, ஓரமாய் நகர்ந்துகொண்டான்..!!

மைசூரில் இருந்து கிளம்பிய தணிகைநம்பி.. மேலும் சிறிது நேரத்தில் அகழிவீட்டை வந்தடைந்தார்..!! முகிலனின் குடும்பத்தினரை அவர் அங்கு எதிர்பார்த்திரவில்லை.. முதலில் சற்று திகைத்துப்போய்த்தான் நின்றார்.. பிறகு, எல்லோரையும் பார்த்து ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தார்.. கரங்களை கூப்பி வணக்கம் செய்தார்..!! பொங்கிவருகிற காட்டாற்று வெள்ளம், எதிர்ப்படுகிற பொடிப்பொடி தடைகளை எல்லாம், மூழ்கடித்து அழித்து செல்கிறது அல்லவா..?? அது மாதிரிதான்.. மகளுடைய வாழ்வில் நேர்ந்திருக்கிற பெருந்துயரம், உறவினர்களுடன் கொண்ட மனக்கசப்பை, தணிகைநம்பிக்கு மறந்துபோக வைத்திருந்தது..!! துக்கத்தில் பங்கெடுக்க வந்திருப்பவர்களை நன்றியுடன் பார்த்தவர்.. அழுதுகொண்டிருந்த மகளை நெருங்கி அன்பாக அணைத்துக் கொண்டார்..!!