மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

ஒருவழியாக சிங்கமலையின் உச்சியை வந்தடைந்தாள்.. அவளுடன் வந்த மிருகங்களும், பறவைகளும் ஆங்காங்கே நகர்ந்து நின்றுகொண்டன.. தாமிராவின் உருவத்தை இப்போது காணவில்லை.. விலங்குகளுக்கு மத்தியில் தனியாளாய் தவிப்புடன் நின்றிருந்தாள் ஆதிரா..!! அவளுக்கு மூச்சிரைத்து மார்புகள் ஏறியிறங்கின.. நெஞ்சுக்கூடு காற்றுக்காக ஏங்கி பதறியது..!!

‘என்ன செய்வது இப்போது.. இங்கே எதற்கு என்னை அழைத்து வந்திருக்கிறாள்..??’

எதுவும் புரியாமல்.. வெண்ணிலாவின் வெளிச்சம் மட்டுமே படர்ந்திருந்த அந்த பிரதேசத்தை வெறிக்க வெறிக்க பார்த்தவாறு நின்றிருந்தாள்.. சற்றே தைரியம் பெற்றவளாய் தங்கையின் பெயரை சொல்லி அழைத்தாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!” – அவள் அவ்வாறு அழைத்துக் கொண்டிருக்கும்போதே,

“அக்காஆஆஆஆஆ..!!!” – இதயத்தை பிசைவது மாதிரி ஒலித்தது தாமிராவின் ஓலம்.

பதறிப்போன ஆதிரா, சப்தம் வந்த திசைப்பக்கமாக சற்றே நகர்ந்தாள்.. மலைவிளிம்பை அடைந்து கீழே வெளிச்சத்தை தெளித்தாள்..!! தாமிராவின் உருவம் இப்போது கண்ணுக்கு புலப்பட்டது.. மகிழம்பூ மரக்கிளைகளுக்குள் பின்னிக்கொண்டு கிடந்தாள் தாமிரா.. உயிர்துறக்கும் தருவாயில் உடன்பிறந்தவளை பார்த்து அழைத்தது போலவே, இப்போதும் இவளைநோக்கி கைநீட்டி பரிதாபமாக அழைத்தாள்..!!

“அக்காஆஆஆஆஆ..!!!”

தங்கையை அந்தநிலையில் பார்க்கவும், அவளது அந்த பரிதாபக்குரலை கேட்கவும்.. ஆதிராவுக்கு உடல் சில்லிட்டுப்போனது, அப்படியே அழுகை பீறிட்டு கிளம்பியது..!! கண்களில் இருந்து பொலபொலவென நீர்கொட்ட.. ‘ஓ’வென்று அழுது அரற்றியவாறே.. தங்கையை பார்த்து ஏக்கமாக கைநீட்டினாள்..!!

“தாமிராஆஆஆ..!!” என்று தவிப்புடன் அழைத்தாள். ஆனால் தாமிராவோ,

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!”

என்றொரு கேலிச்சிரிப்பை உதிர்த்துவிட்டு காற்றில் மாயமாய் மறைந்துபோனாள்..!! கண்ணில் உறைந்துபோன கண்ணீருடன், ஆதிரா மட்டும் இப்போது அந்த மலையுச்சியில் தனித்து நின்றிருந்தாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!! எங்கடி இருக்குற..??”

“………………………………”

“வெளையாண்டது போதுண்டி.. அவரை எங்க வச்சிருக்குற.. சொல்லு..!!”

“………………………………”

ஆதிரா கெஞ்சினாள்.. தாமிராவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.. சுற்றிலும் அடர்த்தியான நிசப்தம்..!! பனி படர்ந்த உயரமான மலைச்சிகரம்.. நிலவு வெளிச்சத்தில் நனைந்திருந்த காட்டுமரங்கள்.. வீசும் காற்றின் ‘விஷ்ஷ்ஷ்ஷ்’ என்ற ஓசை.. மலையடிவாரத்தில் ஓடுகிற குழலாற்றின் ‘சலசலசல’ சப்தம்.. அவ்வப்போது வாய்திறந்து கர்ஜித்த காட்டுப்புலி.. கையில் டார்ச்சுடன் ஒற்றையில் நிற்கிற ஆதிரா..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!”

“ரே ரே.. ரே ரே.. ரே ரே..!!”

திடீரென காட்டுமரங்களுக்குள் எதிரொலித்தது தாமிராவின் குரல்.. உடனே ஆதிராவின் மூளைக்குள் ஒரு பளிச்..!! முன்பொருமுறை அவள் கண்ட கனவில்.. தங்கையுடன் கண்ணாமூச்சி விளையாடி.. இதே சிங்கமலையை வந்தடைந்தது நினைவுக்கு வந்தது..!!

‘அப்போது.. இங்கே.. அவளை.. அவளை மட்டுமல்ல அவரையும்..’

மனதுக்குள் அந்த எண்ணம் தோன்றியதுமே, மறுபடியும் பரபரப்பானாள் ஆதிரா.. கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, கையில் டார்ச்சுடன் ஓடினாள்..!! சிங்கமுக சிலையின் பக்கவாட்டு மலைக்கு சென்றாள்.. மலையை குடைந்து அமைக்கப்பட்டிருந்த அந்த குகையை அடைந்தாள்..!! சற்றே குனிந்து பார்த்து, குகைக்குள் டார்ச் அடித்தாள்..!!

வட்டமாக குவிந்த டார்ச் வெளிச்சத்தில்.. குகைக்குள் படுத்திருந்த சிபி பார்வைக்கு வந்தான்..!! மகிழம்பூக்களால் ஆன மலர்ப்படுக்கையில் மகாராஜாவை போல அவனை கிடத்தியிருந்தாள் தாமிரா.. நீண்டதொரு மயக்கத்தில் அவனை ஆழ்த்தியிருந்தாள் என்று தோன்றியது..!! கணவனின் முகத்தை பார்த்ததும் ஆதிராவின் மனதுக்குள் அப்படியொரு உன்னதமான சிலிர்ப்பு.. கண்களில் நீர் முட்டியது.. உடலும், உதடுகளும் படபடத்தன.. பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்ற திருப்தி பரவ, அப்படியே ‘ஓ’வென்று அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு..!!

“அத்தான்ன்ன்..!!!” – ஆதிரா அலறிக்கொண்டே சிபியை நோக்கி ஓட,

“விஷ்ஷ்ஷ்ஷ்க்க்க்க்..!!!” என்று எங்கிருந்தோ வந்து அவளை இடைமறித்தாள் தாமிரா.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!” என்று கோரமாக ஒரு சிரிப்பு சிரித்தாள்.

“தாமிராஆஆ..!!” தவிப்பாக சொன்னாள் ஆதிரா.

“அவ்வளவு ஈசியா அவரை எடுத்துட்டு போக விட்டுடுவனா..?? ஹாஹா..!!”

தாமிரா அகங்காரமாக சிரித்தாள்..!! கழுத்தை முறுக்கி நெளித்து, கண்களை விரித்து செவ்விழிகளை உருட்டி காட்டினாள்.. வாயை அகலமாக திறந்து, கூர்பற்களை கடித்து நெரித்து காட்டினாள்.. ‘ஆஆஹ்.. ஆஆஹ்..’ என்று ஆதிராவை கடித்துவிடுவது போல பாய்ந்தாள்.. அக்காவை பயமுறுத்தி பதறவைக்க முயன்றாள்..!!

ஆதிராவோ முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் அசையாமல் நின்றிருந்தாள்..!! முன்பு இதே தாமிரா உயிரோடு இருந்தபோது.. தனது போர்வைக்குள் நுழைந்து முகத்தில் டார்ச் அடித்து தன்னை பயமுறுத்தியதெல்லாம்.. ஆதிராவுக்கு இப்போது ஞாபகம் வந்தது.. உடனே அவளது உதட்டில் ஒரு வறண்ட புன்னகை..!! அப்போதெல்லாம் ‘பேய்.. பிசாசு..’ என்று பதறித்துடித்த ஆதிரா.. இப்போதோ கொஞ்சம்கூட பயமில்லாமல் விறைப்பாக நின்றிருந்தாள்..!!

“போதுண்டி.. நிறுத்து.. உன்னை பார்த்து எனக்கு பயமில்ல..!!” என்று துணிச்சலாக சொன்னாள்.

“பயப்பட மாட்டியா..?? பயப்பட மாட்ட..?? ம்ம்..??” தாமிரா தலையை அப்படியும் இப்படியும் விகாரமாய் அசைத்தவாறு கேட்டாள்.

“பயப்படமாட்டேன்..!! உன்னை பார்த்து நான் ஏன் பயப்படனும்..?? நீ என் தங்கச்சி.. என்மேல உயிரையே வச்சிருந்த என் குட்டித்தங்கச்சி..!!”

ஆதிரா கண்களில் நீர்பனிக்க சொன்னாள்.. அதைக்கேட்டு தாமிராவும் அப்படியே அடங்கிப்போனாள்.. அவளது சீற்றம் வெகுவாக குறைந்து போனது.. ‘உஷ்ஷ்ஷ்.. உஷ்ஷ்ஷ்..’ என்ற பெருமூச்சு மட்டும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது..!!

“வெளையாண்டது போதும் தாமிரா.. அவரை எங்கிட்ட ஒப்படைச்சிடு..!!” ஆதிரா கேட்க,

“முடியாது..!!” தாமிரா மறுத்தாள்.

சற்றே எரிச்சலான ஆதிரா தங்கையின் உருவத்தை மீறி குகைக்குள் செல்ல முயன்றாள்.. அவளால் முடியவில்லை.. பாறையில் மோதியதுபோல பின்புறமாக உந்தித்தள்ளப் பட்டாள்..!! தாமிரா ஒருவித ஆவேசத்துடன் முன்னோக்கி நகர.. ஆதிரா பின்னோக்கி அடியெடுத்து வைத்தாள்.. இருவரும் இப்போது குகையை விட்டு வெளியே வந்திருந்தனர்..!!

“ப்ச்.. எங்கிட்ட இருந்து இன்னும் என்னதான் எதிர்பாக்குற..?? நீ வச்ச கேம்லயும் நான் ஜெயிச்சுட்டேன்.. ப்ளீஸ்.. அவரை விட்ரு..!!”

“கேம் வச்சது அவரை கண்டுபிடிக்கிறதுக்குத்தான்.. கொண்டுபோறதுக்கு இல்ல..!!”

“எ..என்னது..??”

“கொண்டுபோறதுக்கு இன்னொரு கேம்..!!”

“இன்னொரு கேமா..??” தங்கை சொன்னதை கேட்டு ஆதிரா சற்றே கலங்கினாலும்,

“சரி சொல்லு.. என்ன கேம்..??” என்று உடனடியாய் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டுகேட்டாள்.

“அதை நீதான் கண்டுபிடிக்கணும்..!!”

“எ..என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

“என்ன கேம்ன்றதையே நீதான் கண்டுபிடிக்கணும்..!!” சொல்லிவிட்டு தாமிரா விகாரமாக சிரித்தாள்.

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!”

‘என்னடா இது புது குழப்பம்?’ என்று ஆதிரா திகைத்துப்போய் நிற்க.. அவளைப்பார்த்து கைகொட்டி கேலியாக சிரித்தாள் தாமிரா..!! கழுத்தை வளைத்து தலையை ஆட்டி.. கையை விரித்து விரல்களை அசைத்து.. பாட்டு பாடினாள்..!!

“கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபுடி ரே ரே..!!”

19

“ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா..!!!!!!!!!!” – பாடலுடன் சிரிப்பையும் சேர்த்துக்கொண்டாள்.

ஆதிராவுக்கு சிலவினாடிகள் எதுவும் புரியவில்லை.. அவஸ்தையாய் அங்குமிங்கும் பார்வையை அலைபாய விட்டாள்..!! அப்போதுதான்.. பாறையிடுக்கில் நீட்டியிருந்த அந்த சிவப்புநிற மலர் அவளுடைய பார்வையில் பட்டது.. உடனே அவளது மூளைக்குள் பளீரென்று ஒரு மின்னல்.. தங்கை என்ன எதிர்பார்க்கிறாள் என்று இப்போது அவளுக்கு புரிந்து போயிருந்தது..!! சிரித்துகொண்டிருந்த தாமிராவை பார்த்து பட்டென கேட்டாள்.. இருகைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு..!!

“Game or Shame..??”

தனது மேனரிசத்தை அக்காவிடம் பார்த்த தாமிராவுக்கு.. ரத்த விளாறுகளாய் வெடித்திருந்த அவளது உதட்டில் மெலிதாக ஒரு கேலிப்புன்னகை கசிந்தது..!!

“என்ன கேம்..??” என்று உறுமினாள்.

“அந்தப் பூ.. அந்தப் பூவை நான் பறிக்கிறேன்.. அப்படி பறிச்சுட்டா.. அவரை நீ விட்டுறணும்..!! சொல்லு.. Game or Shame..??”

ஆதிரா கேட்டுவிட்டு காத்திருக்க.. தாமிரா இப்போது அக்காவை ஒரு பெருமிதப் பார்வை பார்த்தாள்.. புன்னகையும் கரகர குரலுமாக சொன்னாள்..!!

“GGGame..!!!!”

அடுத்த நிமிடம் ஆதிரா அந்த மலைச்சரிவில் மேலேறிக் கொண்டிருந்தாள்.. நிலவொளியின் மசமசப்பான வெளிச்சம்.. உத்தேசமாக ஆங்காங்கே பிடித்தவாறு மெல்ல மேலே நகர்ந்தாள்.. பிடிமானம் நழுவினால் கீழே சரிந்து உயிரை இழக்க நேரிடும்..!! பாசி படர்ந்திருந்த வழுக்குப் பாறைகள்.. மழைநீரில் வேறு நனைந்து அப்படியே வழவழத்தன.. கையையோ காலையோ உறுதியாக வைக்கமுடியவில்லை.. விழுக் விழுக்கென்று நழுவி ஓடியது..!!

“ஆஆஆஆஆ..!!”

கால் அப்படி நழுவும்போதேல்லாம் ஏதாவது பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஆதிரா கத்தினாள்..!! அவளது காலின் வெட்டுக்காயம் வேறு பாறையில் உரசி திகுதிகுவென எரிந்தது.. உயிரே போவது மாதிரி வின்வின்னென வலித்தது..!! வேதனையை பொறுத்துக்கொண்டு.. உடலை நகர்த்தி நகர்த்தி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! கணவனை மீட்டு செல்வது மட்டுமே அவளது ஒற்றை நோக்கமாக இருந்து.. அவளை மேல்நோக்கி உந்தித் தள்ளியது..!!