மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

“இல்லத்தான்.. தப்பா சொல்றீங்க.. அக்காவை கட்டிக்கிட்டா நீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பிங்க..!! அவ உங்களை எவ்வளவு லவ் பண்றா தெரியுமா.. உங்க மேல உயிரையே வச்சிருக்கா அத்தான்..!! சின்ன வயசுல இருந்தே உங்க மேல அவளுக்கு அவ்வளவு ஆசை..!! உங்ககிட்ட எக்ஸ்ப்ரஸ் பண்றதுக்கு அவளுக்கு ஒரு தயக்கம், வெட்கம்.. அவ்வளவுதான்..!! மத்தபடி.. எங்கிட்ட எல்லாம் சொல்லிருக்கா..!! அந்த அளவுக்கு உங்கமேல உசுரா இருக்குற அக்காவை கட்டிக்க, நெஜமாவே நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!”

“……………………..” சிபி இப்போது சற்றே வாயடைத்துப்போய் நின்றிருந்தான்.

“வீட்ல எல்லாம் சந்தோஷமா இருக்காங்க அத்தான்.. அக்கா, அப்பா, அம்மா, திரவியம் அங்கிள், வனக்கொடி அம்மா.. எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க.. அவங்க சந்தோஷத்தைலாம் கெடுக்கப் போறிங்களா..??”

“நாம கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அந்த சந்தோஷம் அவங்களுக்கு கெடைக்கும் தாமிரா..!! ஆதிராவுக்கு வேணா வேற..”

“இல்ல.. எனக்கோ அக்காவுக்கோ சத்தியமா அதுல சந்தோஷம் கெடைக்காது..!!”

“தாமிரா..!!”

“ப்ளீஸ்த்தான்..!! கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உங்களை கல்யாணம் பண்ணிக்க சுத்தமா இன்ட்ரஸ்ட்டே இல்லாத நான் வேணுமா.. இல்ல.. உங்களையே நெனச்சு ஒவ்வொரு நிமிஷமும் உருகிக்கிட்டு இருக்குற அக்கா வேணுமா..?? யாரை கல்யாணம் செஞ்சுக்கிட்டா உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு யோசிச்சு பாருங்க..!! என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!!”

படபடவென சொல்லிவிட்டு தாமிரா அமைதியானாள்.. சிபி சில வினாடிகள் அவளுடைய முகத்தையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! தாமிரா தன்னை காதலிக்கவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியான, ஆச்சரியமான விஷயமாக இருந்தது.. அவளது பேச்சிலும், பார்வையிலும், செயல்பாட்டிலும் பலமுறை காதலை உணர்ந்திருக்கிறான்.. இப்போது அதெல்லாம் இல்லை என்று அவள் சொல்லும்போது, அவனால் நம்புவதற்கே மிக கடினமாக இருந்தது.. ஆனால் அதை நம்புவதைத் தவிர அவனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை..!!

18

“நெஜமாவே உனக்கு என்மேல காதல் இல்லையா தாமிரா..??” என்று பரிதாபமாக ஒருமுறை கேட்டான்.

“இல்லத்தான்.. சத்தியமா இல்லை..!!” உணர்ச்சியற்ற குரலில் தெளிவாக சொன்ன தாமிரா,

“ம்ம்.. அப்பாக்கு கால் பண்ணி பேசுங்க..!!” என்று சிபியின் செல்ஃபோனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“……………………..” செல்ஃபோனை வாங்கிக்கொண்ட சிபி, வெறுமையாக அவளை பார்த்தான்.

“யோசிக்காதிங்கத்தான்.. பேசுங்க.. அக்காவை கட்டிக்க சம்மதம்னு சொல்லுங்க.. அப்பா அங்க டென்ஷனா உக்காந்துட்டு இருப்பாரு.. அவரு உங்களுக்கு எவ்வளவு நல்லது பண்ணிருக்காருன்னு நெனச்சு பாருங்க.. உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காருன்னு நெனச்சு பாருங்க..!! இந்த கல்யாணம் நடந்தாத்தான் எல்லாருக்குமே சந்தோஷம் அத்தான்.. ப்ளீஸ்.. பேசுங்க..!!”

சிபி சிறிதுநேரம் செய்வதறியாது தளர்ந்து போனவனாய் உறைந்திருந்தான்..!! இவனது பதிலுக்காக அகழியில் தணிகைநம்பி காத்திருக்கிற நிலையில்.. இவன் மீது காதல் இல்லை என்று தாமிரா திட்டவட்டமாக சொல்லி முடித்தபிறகும்.. அவனுக்கு வேறு வழியிருக்கவில்லை..!! தணிகை நம்பியை தனது கைபேசியில் அழைத்து பேசினான்.. ஆதிராவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.. அதுவும் சுரத்தற்ற குரலில், சுத்தமாக விருப்பமே இல்லாமல்..!!

“பெரியவங்களா பாத்து என்ன செஞ்சாலும் எனக்கு சரிதான் மாமா..!!” என்று மட்டும் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

“தேங்க்ஸ் அத்தான்..!!”

தாமிரா சிபியை நன்றியுடன் பார்த்தாள்.. ஒரு பெரிய பிரச்சினையை ஒருவழியாக சமாளித்தாயிற்று என்று சற்றே நிம்மதியுற்றாள்.. ஆனால் அவளது நிம்மதி நீண்டநாள் நீடிக்கப்போவதில்லை என்பதை, அப்போது அவள் அறியவில்லை..!! கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தாயிற்று என்று, சிபி அத்துடன் தனது முயற்சியை கைவிட்டு விடவில்லை.. முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாமிராவை தொடர்ந்து கெஞ்சிக்கொண்டுதான் இருந்தான்..!!

காதலை புறக்கணிப்பது எப்போதுமே கடினமான காரியம்தான்.. தன்மீது அன்பு வைத்திருக்கும் இன்னொரு ஜீவனை எவ்வாறு எளிதில் உதறித்தள்ள முடியும்..?? அதுவும்.. மனதுக்குள் அவன்மீது அவளும் கொள்ளை கொள்ளையாய் காதலை வைத்துக்கொண்டு..?? தாமிரா அடுத்த நாளையும் மைசூரில்தான் கழித்தாள்.. இருவரும் அதிகமாக பேசிக்கொள்ளாவிட்டாலும், இருவருடைய இதயங்களும் ஒரு இனம்புரியாத அழுத்தத்துக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தன..!! சிபியின் ஏக்கமான பார்வையும், உடைந்துபோன குரலும், பரிதாபமான கெஞ்சலும்.. தாமிராவின் காதல் மனதை கசக்கி பிழிவதாக இருந்தன..!! அடிக்கடி அவன் தனது காதலை வலியுறுத்தி, கல்யாணக் கற்பனை சொல்வது.. அவளது மனஉறுதியை மிகவுமே அசைத்துப் பார்ப்பதாக அமைந்தது..!!

அடுத்தநாள் இரவு.. தாமிரா மைசூரில் இருந்து அகழி கிளம்புகையிலும்.. ரயில் பெட்டிக்குள் அவள் காலடி எடுத்து வைக்கும்போதும்கூட.. சிபி அதையேதான் சொன்னான்..!!

“இன்னும் எதும் கெட்டுப்போகல தாமிரா.. இப்போக்கூட உன் முடிவை நீ மாத்திக்கலாம்..!! மாமா, அத்தையை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னு யோசிக்காத.. அதை நான் பாத்துக்குறேன்.. நான் பேசி அவங்கட்ட சம்மதம் வாங்குறேன்..!! ஆதிராவுக்கு வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணிவச்சுட்டு.. அப்புறம்கூட நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்..!! ஊருக்கு போய் கொஞ்சம் ரிலாக்ஸ்டா யோசி.. கல்யாணத்துக்கு இன்னும் ஒருமாசம் இருக்கு.. அதுக்கு முன்னாடி ஒரு நல்லமுடிவா எடு..!!”

17

“எத்தனை நாள் ஆனாலும் என் முடிவு மாறாது அத்தான்..!!” – தாமிராவின் குரலில் இரண்டு நாட்க ளுக்கு முன்பாக இருந்த உறுதி இப்போது இல்லை என்பதை தெளிவாக உணரமுடிந்தது.

“ஹ்ம்ம்.. பாக்கலாம்..!! பார்த்து பத்திரமா போ.. நான் நாளைக்கு கால் பண்றேன்..!!”

“ப்ளீஸ்த்தான்.. வேணாம்.. இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க.. ப்ளீஸ்..!!”

“பண்ணுவேன் தாமிரா.. கண்டிப்பா பண்ணுவேன்..!! என் காதலை அவ்வளவு சீக்கிரம் செத்துப்போக விடமாட்டேன்.. கல்யாணத்துக்கு மொதநாள் வரைகூட, உன் மனசை மாத்த ட்ரை பண்ணிட்டேதான் இருப்பேன்..!! ‘என்மேல உனக்கு அக்கறை இல்ல.. எக்கேடோ நான் கெட்டாலும் பரவால்ல..’ன்னு நீ நெனச்சா.. என் காலை பிக்கப் பண்ணவேணாம்..!!”

சிபி சிந்திய வார்த்தைகள் தாமிராவின் தளிர்மனதை வதைப்பதாக இருந்தன.. கண்களில் வழியமுனைந்த கண்ணீர்த்துளிகளை கட்டுப்படுத்தியவாறே, கம்பார்ட்மன்ட்டுக்குள் அவசரமாக புகுந்துகொண்டாள்..!!

ஏ/ஸி கம்பார்ட்மன்ட்.. தோலை ஊடுருவும் ஈரப்பதமான காற்று.. அங்கொன்றும், இங்கொன்றுமாக அமர்ந்திருந்த பயணிகள்..!! தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டாள் தாமிரா.. கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சிபியை பார்த்தாள்..!! அவனது பார்வையில் தெறித்த அந்த ஏக்கமும், காதலும்.. இப்போது இவளை ஏதோ செய்தன.. இவள் மனதிலும் காதல் ஊற்றை மெலிதாக கசியச் செய்தன.. கண்ணில் துளிர்த்த நீருடன் காதலனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

நீண்ட ஒரு இரைச்சலுடன் ரயில் கிளம்பியது..!! இவளது கம்பார்ட்மன்ட் மெல்ல நகர ஆரம்பிக்க.. வெளியே நின்றிருந்த சிபி, இவளைப்பார்த்து மெலிதாக கையை அசைக்க.. இவளுக்கு திடீரென என்னானதோ.. என்ன நினைத்தாளோ..

“ஐ லவ் யூ அத்தான்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!” என்று சிபியை பார்த்து கத்தினாள். அவளது குரலை கண்ணாடி ஜன்னல் தடுத்து நிறுத்தியது.

“எ..என்ன.. என்ன சொல்ற தாமிரா.. எனக்கு கேக்கல..!!” ரயில் பெட்டியின் பின்னாலேயே ஓடினான் சிபி.

“நான்.. நான் உங்களைத்தான் லவ் பண்றேன் அத்தான்.. உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்..!!”

“இ..இல்ல.. கேக்கல தாமிரா..!!”

“என்னை மன்னிச்சிடுங்க அத்தான்.. எனக்கு வேற வழி இல்ல..!! என்னை மன்னிச்சிடுங்க.. ப்ளீஸ்..!!”

“தாமிராஆஆ..!!”