என்ன பண்றது என் காதலனச்சே!! 2 153

தக்காளி!! வெண்டைக்காய்!! வெங்காயம்!!

அம்மா வாங்க!! அக்கா வாங்க!!

தக்காளி!! வெண்டைக்காய்!! வெங்காயம்!!

அம்மா வாங்க!! அக்கா வாங்க!!

வெளுத்து வாங்கும் அந்த உச்சி வெயிலில் கடமையே கண்ணாய் தள்ளுவண்டியில் காய்கறிகளை வைத்து சென்று கொண்டிருந்தார் ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெரிய மனிதர். அந்த ஆள் அரவமற்ற வீதியிலும் ஒரு பெண் மட்டும் வெறிச்சோடி கிடந்த சாலையை வெறித்து பார்த்து கொண்டிருந்ததை கண்டார் அந்த மனிதர்.

தாயி!! ஏன் வாசல்லயே நின்னுட்டு இருக்க, வா தாயி! வந்து காய்கறி வாங்கிட்டு போ. வெலை சௌரியம் தான்.

அந்த தள்ளுவண்டி காரர் சொன்னது எதுவும் காதில் விழாமல் அந்த பெண் சாலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

என்னது விலை சௌரியம் தானா, என்று பக்கத்துக்கு வீட்டில் இருந்து இன்னொரு பெண் வந்து காய்கறிகளை தேர்ந்தெடுத்து கூடையில் அள்ளி போட்டு கொண்டிருந்தாள். அவள் கண்களிலும் வாசலில் நின்று சாலையையே வெறித்து பார்த்து கொண்டிருந்த பெண் அகப்பட்டாள்.

ஏய்ய்ய் சௌமியா!! என்னடி உச்சி வெயில்ல வாசல்ல நின்னுட்டு இருக்குற. என்ன காய் வாங்கலையா?

எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் எதையோ பறி கொடுத்ததை போல சாலையை பார்த்து கொண்டிருந்தாள்.

என்ன இவ!! கூப்பிடறது கூட கேக்காம அப்படியே நிக்குறா. என்னாச்சு இவளுக்கு.

ஆமா தாயி!! நானும் கூப்பிட்டு பாத்தேன் காய் வாங்க. ஆனா அது காதுல வாங்காம அப்டியே நிக்குது.. என்னன்னு போய் விசாரி தாயி.

சரி!! சரி!! எம்புட்டு ஆச்சு ன்னு சொல்லுங்க

72 ரூபா ஆச்சு தாயி, நீ 70 ரூபா மட்டும் கொடு தாயி.

அந்த பெண் ரவிக்கையிலிருந்து மணி பர்ஸை எடுத்து அதிலிருந்து இரண்டு தாள்களையும், சில நாணயங்களையும் அவர் கையில் கொடுத்து விட்டு கால்களை சௌமியா பக்கம் திருப்பினாள்.