என்ன பண்றது என் காதலனச்சே!! 2 154

அவர்கள் வந்திருப்பது காரணம் தெரியாமல் அவன் முழித்துக் கொண்டிருக்க மரியாதைகக்காக அவர்களை பார்த்து சிரித்தான்.. பின்னாலே சௌமியாவும் ஹாலுக்கு வந்தாள். கிஷோரின் அப்பாவும் அம்மாவும் அவர்களுக்கு எதிரில் சேரில் அமர்ந்திருந்தனர். பணம் படைத்தவர்களுக்கே பொதுவான கர்வம் சிறிதும் அன்றி முகத்தில் மரியாதையுடன் வீட்டின் மூத்த மருமகள் என்ற பெயரில் சௌமியாவுக்கும் அவர்கள் தங்கள் கைகளை கூப்பி வணக்கம் ம்மா என்றார்கள்..

பதிலுக்கு பணிவுடன் வணக்கத்தை தெரிவித்த சௌமியா “இவ்வளவு நல்ல மனிதர்கள் யார்” என்று தெரியாமல் முழிக்க பக்கத்தில் இருந்த கிஷோரின் கைகளை கிள்ளி “யாரு அவங்க” என்று கண்களாலே கேட்க..

கிஷோரின் அம்மா வள்ளி “சௌமியா இது நம்ம மலரோட அப்பா அம்மா ம்மா.. சார் பேரு சிங்காரம் அவங்க சம்சாரம் பேரு மரகதம்.. இந்த மரகதம் க்ரூப்ஸ் தெரியும்ல.. அது இவங்க தான்மா.. அவங்களே நம்ம வீடு தேடி வந்துருக்காங்க.. அப்டியே கிச்சனுக்கு போயி காபி போட்டு கொண்டு வாம்மா”

மலர் என்ற பெயரை கேட்டதும் சௌமியா வெறுப்புடன் காபி போட போக, சிங்காரம் குறுக்கிட்டார்.. அம்மாடி நீ இங்க வாம்மா.. காபி லாம் வேண்டாம், வரும் போது தான் ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு வந்தோம்..

சிங்காரம் மேலும் தொடர்ந்தார்.

நான் நேராவே விஷயத்துக்கு வந்துடரனே.. எங்களுக்கு இருக்கிறது ஒரே பொண்ணு.. பரம்பரை பரம்பரையா நாங்க சேர்த்து வச்சது எல்லாம் அவளுக்கும் அவளை கட்டிக்க போற மருமவனுக்கும் தான். அவ சந்தோசம் தான் எங்களுக்கு முக்கியம், ஆனா இந்த கடைசி ஒரு வாரம் பாருங்க.. ரூமை விட்டு வெளியே வராம அழுதுகிட்டே கிடந்தா, என்னடா ன்னு விஷயத்தை கேட்டா அப்போ தான் சொல்றா, இந்த உங்க இளைய மகனை விரும்புறதா சொன்னா, சரி விரும்பட்டும் நல்லது தான், தம்பிய பத்தி நாங்க விசாரிச்ச வரைக்கும் தம்பி சொக்க தங்கம் ன்னு எல்லாரும் சொல்றாங்க.. உங்க எல்லாருக்கும் என் பொண்ணை பிடிச்சிருக்கு ன்னு தெரியும். அப்புடி இருக்க தம்பி ஏன் கோவிச்சுக்கிட்டு என் பொண்ணு கூட பேசாம இருக்குன்னு விசாரிச்சுட்டு போகலாம் ன்னு வந்தேன்..

எல்லாம் சரியா போச்சுன்னா மேற்கொண்டு விஷயத்தை நாம பேசலாம். என்ன சம்பந்தி நான் சொல்றது சரிதானே.. என்று கிஷோரின் அப்பாவை பார்த்து கேக்க அவருக்கு முகமெல்லாம் சந்தோசம்..