யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 254

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். பின் மெல்ல “இப்பதான் லேசா பசிக்குது” என்றாள்.

“லவ்வர்கூட பேசினதுனாலயா?” என்று சிரித்தபடி கேட்டான்.

“அப்படி இல்ல” கன்னம் குழையச் சிரித்தாள்.

“ம்ம்?”

“இன்னிக்கு எங்கம்மா செஞ்சது புடிக்கவே இல்ல”

“ஏன்.? சரி இங்கதான் கொஞ்சம் சாப்பிடு”

“இல்ல.. பரவால்ல. எனக்கும் செரியா பசியே இல்ல. இப்ப சாப்பாடு சாப்பிடறதவிட ஸ்நாக்ஸ் ஏதாவது இருந்தா நல்லாருக்கும்”

“அப்படியா என்ன புடிக்கும்?”

உடனே ஆர்வமாகி சாப்பிட அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்னென்ன பிடிக்காது என்பதைப் பற்றி ஒரு பட்டியலிட்டாள். அன்று அவன் கிளம்பிப் போகும்வரை அவனுடனிருந்தாள். வீட்டை பூட்டி அவளுக்கு பை சொல்லி கிளம்பினான் நிருதி.. !!

மறுநாள், நிருதி மதிய உணவுக்கு வரும் நேரத்தில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அகல்யா. அவள் மனசு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. நேற்று இரவில் இருந்தே அவளுக்குள் ஏற்பட்ட தவிப்பு அது. தொடர் படிப்பு கொடுக்கும் மன அழுத்தத்தினாலோ என்னவோ அவளுக்கு அவளின் காதலன் நினைவு அதிகமாக வந்து தாக்கிக் கொண்டிருந்தது. தூக்கத்தின் முடிவில் கூட அவனைப் பற்றின கனவுகளுடனே விழித்தாள். அந்த அலைக்கழிப்பு அவனுடன் பேசினால்தான் தீரும் எனும் நிலையில் இருந்தாள். அவள் தோழியின் போனில் இருந்து பேசலாம் என்று காலையிலேயே கீர்த்தியின் வீட்டுக்குச் சென்றாள். நேற்றிரவுடன் அவளது பேலன்ஸும் தீர்ந்து விட்டதாம். இந்த நிலையில் நிருதியை விட்டால் அவளுக்கு வேறு வழியே இருக்கவில்லை.. !!

நிருதி இன்று சிறிது நேரம் தாமதித்தே வீட்டுக்கு வந்தான். அவன் பைக் சத்தம் கேட்டவுடனே எழுந்து வெளியே போய் எட்டிப் பார்த்தாள். அவன் திரும்பி அகல்யாவைப் பார்த்து புன்னகைத்தான். அவளும் புன்னகைத்தாள்.

“வரேன்” என்றாள்.

“வா..”

தலையசைத்துத் திரும்பிப் போய் தன்னைக் கண்ணாடியில் பார்த்து உடைகளை சரி செய்துகொண்டு வீட்டைச் சாத்திவிட்டு புத்தகத்துடன் அவன் வீட்டுக்குச் சென்றாள். அவன் முகம் கழுவி வந்து உடை மாற்றியிருந்தான்.

“ஒரே டென்ஷன்” என்றாள்.

“ஏன்? ”

“சும்மாதான்”

“சும்மா யாராவது டென்ஷனாவாங்களா?”

சிரித்து “காலைல போன் பேசலாம்னு கீர்த்தி வீட்டுக்கு போனேன். இன்னிக்குனு பாத்து அவளுது பேலன்ஸ் இல்ல. ரீசார்ஜ் பண்ணாதான் பேச முடியும். அவ நைட்தான் அவங்கம்மாகிட்ட காசு வாங்கி ஈஸி பண்ணுவா..”

“அந்த டென்ஷனா?”

“ம்ம்..”

போனை எடுத்துக் கொடுத்தான். சிரித்தபடி வாங்கினாள். “தேங்க் யூ”

“சரி. சாப்பிட்டியா?”

“இல்ல. நீங்க சாப்பிடுங்க” என்று விட்டு உடனே கால் செய்தாள். கால் ரிங்காகிக் கொண்டிருக்கும்போதே மசால் வாசணையை உணர்ந்து மூக்கைச் சுழித்தாள். “என்ன வாசம் இது?” எனக் கேட்டாள்.

நிருதி ஒரு பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினான். லேசான திகைப்புடன் அதை வாங்கியவளுக்கு புரிந்து விட்டது. அதே நேரம் மறுபக்கத்தில் போன் எடுக்கப்பட்டது.

“அலோ?” என்றான் மறுமுனைக் காதலன் ஹரி.

“ஏ இரு. ஒரு நிமிசம் கூப்பிடறேன்” என்று உடனே காலை கட் பண்ணினாள். ஆர்வத்துடன் பார்சலை பிரித்துப் பார்த்தாள். முட்டை பப்ஸ், வெஜ் பப்ஸ் இரண்டும் இணைந்து மசால் வாசணையை தூக்கலாக காற்றில் பரப்பியது. விழிகள் விரிய வியப்புடன் நிமிர்ந்து நிருதியைப் பார்த்தாள் அகல்யா. “யாருக்கு வாங்கினீங்க?”

“உனக்குத்தான்”

“எனக்கா? நேத்துதான் சொன்னேன்” அவள் வியந்தபடியிருக்க அவளின் கையில் இருந்த போன் ரிங்கானது. ‘ஹரி’ என்றது டிஸ்பிளே. உடனே ஆன் செய்தாள்.

“ஏ லூசு இரு கூப்பிடறேன்” என்று விட்டு மீண்டும் கட் பண்ணி போனை சோபாவில் வைத்து அவளும் உட்கார்ந்தாள்.

“உனக்குத்தான் சாப்பிடு” எனச் சொல்லிவிட்டு நிருதி கிச்சன் சென்றான்.