மதன மோக ரூப சுந்தரி – இறுதி 27

“ஐயோ.. இது ஒன்னும் நாட்டுல நடக்காதது இல்லக்கா.. எல்லாத்துக்கும் அவங்கவங்க மனசுதான் காரணம்.. எனக்கு இது ஓகேன்னு தோணுது..!! எல்லாரோட கைல கால்ல விழுந்தாவது இதுக்கு சம்மதம் வாங்க வேண்டியது என் பொறுப்பு.. என்ன சொல்ற..??”

“என்னால முடியாது..!! நீ வேணா பெரிய புரட்சி பண்றவளா இருக்கலாம்.. நான் அப்படி இல்ல..!! நல்லா கேட்டுக்கா.. அவரு எனக்கு மட்டுந்தான்.. இன்னும் ரெண்டு வாரத்துல எங்களுக்கு கல்யாணம்.. அவரும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லியாச்சு.. அவ்வளவுதான்..!! அவரும் நானும் புருஷன் பொண்டாட்டியா ஆகப்போறோம்.. அதை எவ நெனச்சாலும் தடுத்து நிறுத்தமுடியாது..!!” ஆதிராவின் சீற்றத்தில், தாமிராவும் சட்டென சூடானாள்.

“ஏன்..?? நான் நெனச்சா.. அதை தடுத்து நிறுத்த முடியும்..!! ஓகேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்.. அடுத்த நிமிஷம் அத்தான் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுவாரு..!! அப்பா, அம்மாவும் அதை பெருசா எதுக்கப் போறது இல்ல..!!” தாமிராவின் பதிலுக்கு, ஆதிரா சற்றும் சளைக்கவில்லை.

“அப்படி நீ செஞ்சா.. அதுக்கப்புறம் என்னை நீ பொணமாத்தான் பார்ப்ப..!!”

வெடுக்கென சொல்லிவிட்டு.. தங்கையின் பதிலுக்கு கூட காத்திராமல்.. அங்கிருந்து விடுவிடுவென கிளம்பினாள் ஆதிரா..!! அக்கா இத்தகைய அஸ்திரத்தை எறிவாள் என்று, தாமிரா சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை.. ஒரு சிலவினாடிகள் அப்படியே விக்கித்துப் போய் நின்றிருந்தாள்..!! அப்புறம் திடீரென ஏதோ தோன்றியவளாய்.. ஆதிராவின் முதுகை பார்த்து கத்தினாள்..!!

“Game or Shame..??”

315

தாமிராவின் வார்த்தைகள் காதில் விழுந்ததும்.. அப்படியே சரக்கென ப்ரேக்கடித்து நின்றாள் ஆதிரா..!! தலையை கொஞ்சம் கொஞ்சமாய் திருப்பி தங்கையை பார்த்தாள்..!! தாமிரா தனது இரண்டு கைகளையும் முகத்திற்கு முன்பாக விரித்து வைத்தவாறு நின்றிருந்தாள்.. அவளது ட்ரேட் மார்க் மேனரிசம்..!! எப்போதும் அந்த கைகளின் இடைவெளியில் தெரிகிற அவளது ஒற்றைக்கண்.. குறும்பாக ஒரு சிமிட்டு சிமிட்டும்..!! இப்போதோ.. பொலபொலவென கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது..!!

“எ..என்னடி சொல்ற..??” ஆதிரா சற்று குழப்பமாகவே கேட்டாள்.

“ரெண்டு பேரும் ஒரு கேம் ஆடலாம்..!! யார் ஜெயிக்கிறாங்களோ, அவங்களுக்கு தோத்தவங்க அத்தானை விட்டுக் குடுத்துடணும்.. அத்தோட இந்த சேப்டரை க்ளோஸ் பண்ணிடனும்.. அவங்கவங்க வழில அவங்கவங்க வாழ்க்கையை பாத்துக்கிட்டு போயிட்டு இருக்கணும்..!! ஓகேவா..??”

“லூசா உனக்கு..?? கேம் ஆடி டிஸைட் பண்ற மேட்டராடி இது..?? எதுலதான் வெளையாடுறதுன்னு உனக்கு வெவஸ்தை இல்ல..??”

“இது வெளையாட்டு இல்லக்கா.. ஐ’ம் டாம் சீரியஸ்..!! நீ ஜெயிச்சிட்டா.. கடைசி வரைக்கும் என் காதலை பத்தி அத்தான்ட்ட நான் வாயே தெறக்க மாட்டேன்.. அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சந்தோஷமா வாழலாம்..!! சப்போஸ் நான் ஜெயிச்சிட்டா.. அத்தானை எனக்கு விட்டுக் குடுத்துட்டு நீ வேற கல்யாணம் பண்ணிக்கணும்.. அவ்வளவுதான்..!! சொல்லு.. Game or Shame..??”

தங்கையின் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தன்மை.. ஆதிராவையும் சற்று நிதானிக்க வைத்தது.. அமைதியாக ஒருகணம் யோசித்தாள்..!! ‘எப்போதும் எனக்கு விட்டுக் கொடுப்பதற்காகவே இந்த மாதிரி விளையாட்டு வைப்பதாக இவள் சொல்கிறாளே.. இதுவும் அதுபோலொரு விளையாட்டாக இருக்குமோ..?? என்னுடைய மனது நோகாமலே சிபியை எனக்கு விட்டுக் கொடுப்பதற்காக இப்படி ஒரு ஆட்டத்தை முன்வைக்கிறாளோ..?? ஆட்டத்தில் கலந்துகொண்டால், இந்த பிரச்சினைக்கு எளிதாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியுமோ..??’ என்பது மாதிரியாக ஒரு எண்ணம் ஆதிராவின் மனதுக்குள் ஓடவும்.. சிறிது தடுமாற்றத்துடனே சொன்னாள்..!!

“Game..!!!!”

“குட்..!!” கண்களில் கண்ணீருடன், உதட்டில் ஒரு புன்னகையையும் சிந்தினாள் தாமிரா.

“என்ன கேம்..??”

ஆதிரா கேட்கவும், தாமிரா இப்போது அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.. ஒரு சில வினாடிகள்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய், அக்காவிடம் தெளிவான குரலில் சொன்னாள்..!!

“அதோ.. அந்த பூவை யாரு மொதல்ல போய் பறிக்கிறாங்களோ.. அவங்கதான் வின்னர்..!!”

தாமிரா கைநீட்டிய திசையில் ஆதிரா பார்வையை வீசினாள்..!! சிங்கமுக சிலை வடிக்கப்பட்டிருந்த மலைமுகட்டில்.. வழுக்குப்பாறைகள் நிறைந்த ஒரு பிரதேசத்தில்.. ஒரு பாறை இடுக்குக்குள் இருந்து ஒற்றையாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது அந்த மலர்.. செக்கச்செவேல் என்று சிவந்துபோய், வித்தியாசமான இதழமைப்பு கொண்ட ஒரு அரியவகை மலர்..!! அணிலால் தட்டிவிடப்பட்ட சிவப்பு மை, கண்ணாமூச்சி ரே ரே புத்தகத்தில் ஒரு ஓவியம் தீட்டியதே.. அதே மலர்..!!

போட்டி என்னவென்று தெரிந்ததும் ஆதிரா சற்று மிரண்டுதான் போனாள்.. அந்த மலரை பறிப்பது அவ்வளவு கடினமானது மட்டுமல்ல, உயிருக்கே மிக ஆபத்தான காரியம் என்றும் அவளுக்கு தெளிவாக உறைத்தது..!!

“ஏய்.. என்ன வெளையாடுறியா..?? அதுலாம் ரொம்ப கஷ்டம்டி..!!” என்று மறுத்து பார்த்தாள்.

“கேம்னா கேம்தான்..!! லைஃப்ல கஷ்டப்படாம எதுவும் கெடைக்காது..!! அத்தான் வேணும்னா.. அந்த பூவை பறிக்கிறதை தவிர உனக்கு வேற வழியில்ல..!!”

“ஏய்..!!”

“ரெடி.. ஒன்.. டூ.. த்ரீ.. கோ..!!”

தாமிரா தானாக சொல்லிவிட்டு, அந்த மலரை பறிக்கிற முனைப்புடன் மலையை நோக்கி ஓடினாள்.. ஓரிரு வினாடிகளுக்கு அப்புறமே ஆதிரா சுதாரித்துக் கொண்டாள்.. கையிலிருந்த செல்ஃபோனை ரவிக்கைக்குள் திணித்துவிட்டு, தானும் தங்கையின் பின்னால் ஓடினாள்..!!

சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விஷயங்களுக்கென ஜாலியாக விளையாடிய ஒரு விளையாட்டை.. இப்போது வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிற ஒரு பெரிய விஷயத்துக்காக, அக்காவும் தங்கையும் ஆடத் துணிந்திருந்தார்கள்..!! இருவரும் பரபரவென அந்த மலையில் ஏறினார்கள்..!! பாறைகளில் தங்கள் கைவிரல்களை அழுந்தப் பதித்து.. உடலை எக்கி எக்கி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி.. அந்த மலரை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தார்கள்..!!

இருவரிலும் தாமிராதான் மிக வேகமாக இருந்தாள்.. அவளது வேகத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை..!! தங்கையின் வேகத்தை பார்த்து ஆதிரா மிரண்டுபோனாள் என்றுதான் சொல்லவேண்டும்.. அவளது காலடியை தாண்டி இவளால் மேலே முன்னேற முடியவில்லை.. இருவருக்கும் இடையே அவ்வளவு பெரிய இடைவெளி.. இந்த வேகத்தில் சென்றால், சீக்கிரமே அந்த மலரை தாமிரா கைப்பற்றிவிடுவாள் என்று தோன்றியது..!! தாமிரா விட்டுக்கொடுப்பதைத்தான் இத்தனை நாளாய் ஆதிரா பார்த்திருக்கிறாள்.. முதன்முறையாக தனக்கு சரிக்கு சரி போட்டியிடுவதை, அப்படியே திகைத்துப்போய் பார்த்தாள்..!!

அக்காவும், தங்கையும் இப்போது தளப்பரப்பில் இருந்து பதினைந்து, இருபது அடி உயரத்திற்கு சென்றிருந்தனர்.. அந்த மலர் நீண்டிருந்த பாறையிடுக்கின் வெகு அருகே நகர்ந்திருந்தனர்..!! தாமிராதான் அந்த மலருக்கு மிக நெருக்கமாக இருந்தாள்.. அவளது பாதத்துக்கு நெருக்கமாக ஆதிரா..!!

தாமிரா கையை நீட்டி அந்த மலரை பறிக்க முனைகையில்தான் அது நடந்தது.. பாசி படர்ந்திருந்த ஒரு பாறைப்பரப்பில் தாமிராவின் வலதுகால் அழுத்தமாக அமர, அப்படியே விழுக்கென்று வழுக்கிக்கொண்டது..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

வழுக்கிய வேகத்தில் அவளது கைகள் பிடிமானத்தை இழந்துபோக.. சர்ரென கீழே சரிந்தாள் தாமிரா..!! தன்னை பின்தொடர்ந்து மேல்வந்துகொண்டிருந்த அக்காவின் மீது சென்று தொம்மென மோதினாள்..!! தங்கை வந்து இடித்ததில் ஆதிராவும் நிலைகுலைந்தாள்.. பாறையை பற்றியிருந்த அவளது பிடியும் விட்டுப்போக, தாமிராவுடன் சேர்ந்து தானும் கீழே சரிந்தாள்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

இருவரும் அந்த இருபது அடி உயர சரிவில் இருந்து கடகடவென கீழே உருண்டார்கள்..!! அவர்களது முகம், கை, கால் எல்லாம் கரடுமுரடான பாறையில் உராய்ந்து சிராய்த்துக்கொள்ள.. சரசரவென உருண்டு உருண்டு தளப்பரப்பிற்கு வந்தார்கள்..!! தளப்பரப்பின் அந்தப்பக்கம் ஆயிரத்து ஐநூறு அடி உயர சரேல் பள்ளத்தாக்கு.. பள்ளத்தாக்கின் அடியில் குழலாறு..!! யாரும் கவனமில்லாமல் கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காக எழுப்பப்பட்டிருந்த.. இரும்புக்குழாய்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு தடுப்புச்சுவர்..!! உருண்டவேகத்தில் அந்த தடுப்புச்சுவரை சென்று டமாரென்று மோதினார்கள் இருவரும்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

இற்றுப்போன ஒரு இரும்புக்குழாய் படாரென்று உடைந்துகொள்ள.. அந்த இடைவெளியின் வழியே பள்ளத்தாக்குக்குள் சரிந்தாள் தாமிரா.. அவளை பின்தொடர்ந்து வந்த ஆதிராவின் கைக்குள் வலுவான ஒரு பிடிமானம் சிக்கிக்கொள்ள, இன்னொரு கையால் தங்கையின் கையை எட்டி பிடித்தாள்..!!

“ஆஆஆஆஆஆஆஆ..!!!!”

ஆதிரா இப்போது தளப்பரப்பில் ஓரளவுக்கு வசதியாக கிடந்தாள்.. அவளது ஒருகை தடியான ஒரு இரும்புக்குழாயை இறுகப் பற்றியிருந்தது.. இன்னொரு கை தாமிராவின் இடதுகையை இழுத்து பிடித்திருந்தது..!! தாமிரா மட்டும் ஆயிரத்து ஐநூறு அடி மலைச்சரிவில் அப்படியும் இப்படியுமாக அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.. அக்கா தனது கையை பற்றியிருக்க, இவளும் அவளது கையை அழுந்தப் பற்றியவாறு தொங்கிக்கொண்டிருந்தாள்.!!

“அக்காஆஆ.. அக்காஆஆ..!!!!” பயத்தில் மிரண்டுபோய் அலறினாள்.

“தாமிராஆஆஆ..!!!” தங்கையின் எடை தந்த வேதனையுடன் பற்களை கடித்து கத்தினாள் ஆதிரா.

“மே..மேல தூக்குக்கா.. மேல தூக்கு..!!”

“மு..முடியலடி.. கஷ்டமா இருக்கு..!!”

“கொஞ்சம்க்கா.. ட்ரை பண்ணு…!!”

“இ..இருடி..!!”

335

“விழுந்துருவேன் போல இருக்குக்கா.. சீக்கிரம்..!!”

“கொஞ்சம் இருடி..!!”

ஆதிரா இப்போது தனது கால் ஒன்றை சற்றே மடக்கினாள்.. தனது நிலையை உறுதியாக்கிக்கொண்டு தங்கையை மேலே தூக்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்..!! அப்போதுதான்.. அவளது மனநிலையில் அந்த மாற்றம்..!!

கூட்டம் கூட்டமாய் நாட்டுக்குள் வாழ்கிற ஒரு மிருகம்தான் மனிதன் என்பவன்..!! சட்டதிட்டங்களோ, சொந்தபந்தங்களோ இல்லாமல் போய்விட்டால்.. எந்த மனிதனிடமும் மனிதகுணத்தை காண இயலாது..!! ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாய் இருந்தாலும்.. அவனுக்குள்ளும் ஒரு மிருக குணம் ஒழிந்திருக்கும்..!! அக்குணம் எங்கே ஒளிந்திருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.. எப்போது வெளிப்படும் என்றும் யாருக்கும் புரியாது..!! ஆதிராவுக்குள் ஒளிந்திருந்த ஒரு மிருககுணம் அப்போது வெளிப்பட்டது..!!

சிறுவயதில் இருந்தே சிபி மீது அவள் வைத்திருந்த தீராக்காதல்.. அந்தக்காதல் கல்யாணத்தில் கனியப்போகிறதென்ற அவளது சந்தோஷம்.. அந்த சந்தோஷத்திற்கு சமாதி கட்டுவது மாதிரியான தங்கையின் காதல்.. ‘நான் நெனச்சா இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும்’ என்ற தாமிராவின் பேச்சு.. போட்டியில் வென்று சிபியை அடைய தாமிரா காட்டிய வேகம்.. எல்லாமுமாக சேர்ந்து ஆதிராவின் ஆழ்மனதுக்குள் புதைந்திருந்த அந்த மிருககுணத்தை படக்கென வெளிப்பட செய்தன..!!