உன்ன என்னமோன்னு நினைச்சேன் – Part 4 110

பாகம் 28.

நான் சிரித்துக் கொண்டே, இல்லை மைதிலி. அதுக்கு காரணம் இருக்கு. இப்போதைக்கு இதுதான் சேஃப். ஒரே அடியா அடிச்சா, அவன் வெறில எதாவாது பண்ணிடுவான்.

எல்லாத்துக்கும் மேல ஒரு காரணம் இருக்கு! கல்யாணம் ஆனதுல இருந்து, உன்னை ரொம்பக் கஷ்டப்படுத்தியிருக்கான், உன் ஃபீலிங்சோட ரொம்ப விளையாண்டிருக்கான். அவனை, நீ தனியா நின்னு, தன்னம்பிக்கையா அடிச்சேன்னு புரியனும் அவனுக்கு! அதான், அவனுக்கு கிடைக்கிற பெரிய அடி! நீ ஒன்னும் கிள்ளுக்கீரையில்லைன்னு புரியனும் அவனுக்கு. இந்த கிரடிட் முழுக்க உனக்கு மட்டுமே போகனும்!

திரும்பி உட்கார்ந்திருந்த மைதிலியின் மனம் நெகிழ்ந்திருந்தது. மனம் முணுமுணுத்தது. திருடன், எல்லாம் எனக்காகப் பார்த்து பார்த்து செய்கிறான் என்று!

இப்பொழுது அவனைப் பார்த்தவள், எல்லாம் சரி, ஆனா, அவன், உங்களை கொஞ்ச நஞ்சமா பேசியிருக்கான், உங்களுக்கும் எவ்ளோ பெரிய துரோகம் பண்ணியிருக்கான். அதுனால, அவன் அடி வாங்குறதை, நீங்க பாக்கனும்னு எனக்குத் தோணாதா?

இப்பொழுதும் அவர்கள் மற்றவர்களுக்காகவே யோசித்தனர்.

இல்லை மைதிலி, இப்ப ப்ரியாவுக்கும் அவனுக்கும் தெரியுறது சேஃப் கிடையாது.. அதான்!

ஹல்லோ, சும்மா எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்துட்டிருக்காதீங்க! உங்களுக்குதான் எல்லாம் தெரியுமா? எங்களுக்கும் தெரியும்! சில சமயம், மனசு சொல்ற மாதிரி கேட்டுட்டு போயிட்டே இருக்கனும்! ரொம்ப யோசிக்கக் கூடாது!

ஹா ஹா. இந்த டயலாக்கை ஞாபகம் வெச்சுக்கோ மைதிலி, என்னிக்காவுது யூஸ் ஆகும் என்று சிரித்தவன், இனிமே மேடம் சொல்ற படியே கேட்கிறேன், சரிங்களா என்று கிண்டல் பண்ணியவன், இப்ப என்ன, அவனை நான் பாக்கனும் அப்படித்தானே?

ஆமா!

கவலைப்படாத. கண்டிப்பா அவனை நான் பாப்பேன். இப்ப இல்ல, அடுத்த அடி, கடைசி அடி கொடுக்குறப்ப, கண்டிப்பா பாப்பேன்.

அடுத்த அடியா? அது எப்ப?

கூடிய சீக்கிரம் என்று சொல்லியவன் திடீரென்று பேச்சை மாற்றிக் கேட்டான். ஆக இதுக்கும், ட்ரீட்டோ, தாங்க்சோ கிடையாதுதானே?

அவள் சிரித்துக் கொண்டே இல்லை என்று தலையாட்டினாள்.

சரி கொடுக்க வேணாம், விடு என்றவன், ஆனா மைதிலி, இனிமே என்னை அண்ணான்னு கூப்பிடாத! என்றான்.

அவன் திடீரென இப்படிச் சொன்னதும், அவள் அமைதியானாள். எங்கோ பார்த்தபடி கேட்டாள். வே….வேற எப்பிடி கூப்பிடுறது?

மாமான்னு கூப்பிடு!

_______________

இன்னுமொரு ஒன்றரை மாதம் கழிந்திருந்தது!

அதே கோடம்பாக்கம் வீடு!

அன்று உட்கார்ந்திருந்த அதே சோஃபாவில் மைதிலி! அன்று போலே, இன்றும் ராஜாவை நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் இன்னமும், மாமா என்று கூப்பிடு எனச் சொன்னதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவனும், அதற்கப்புறம் அப்படி கூப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தவும் இல்லை. மாமா என்று கூப்பிடுகிறாளோ இல்லையோ, அண்ணா என்று கூப்பிடுவதை அவள் நிறுத்தியிருந்தாள்!

அன்று, மாமா என்று கூப்பிடு என்றுச்சொல்லிவிட்டு அவன், முக்கிய வேலை இருக்கிறது, மாலை வருவதாகச் சொல்லி சென்றிருந்தான். அவள் அப்படியே உட்கார்ந்திருந்தாள். அவன் வார்த்தைகள் அவள் காதிலிலேயே ஒலித்துக் கொண்டிருந்தது! சந்தோஷப் படுவதா, அழுவதா, கோபப்படுவதா என்று தெரியவில்லை.