கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

சுகன்யாவின் கட்டங்களும், கட்டங்களில் கிடந்த கிரகங்களும், அவர் மனதில் ஒருவர் பின்னால் ஒருவராக வந்து போனார்கள். கடைசியாக வந்த ராகு அவரைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான்.

“மீனா நீ ரொம்பவே லக்கிடீ… படிச்சி முடிக்கறதுக்கு முன்னாடியே உனக்கு நல்ல கம்பெனியில வேலை கிடைச்சிடிச்சி… இன்னைக்கு உனக்குப் பிறந்த நாள்… சந்தோஷமா ஹேப்பியா இரும்மா…”

செல்வாவின் இல்லத்தில், மீனாட்சியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்று கூடிய அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள், அவளை வாழ்த்த வந்த விருந்தினர்கள், அனைவரின் மனம் குளிரும் வண்ணம் நடராஜன் மல்லிகா தம்பதியினரால், உபசரிக்கப்பட்டார்கள்.

மனம் மகிழ்ந்த நண்பர்கள், உறவினர்கள், உளமார மீனாட்சியை வாழ்த்தி விடை பெற்றனர். ஹாலில், நடராஜன், குமாரசுவாமி, ராகவன், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே, மனதில் பொங்கும் மகிழ்ச்சி, முகத்தில் தெரிய, உற்சாகமாக, பேசிக்கொண்டிருந்தனர்.

“சீனு… ரொம்ப சந்தோஷம்ப்பா… நீயும் மீனாவுமா சேர்ந்து ஒரு நாள் காலங்காத்தால என் பிளட் பிரஷரை ஏத்தினேளே… அன்னேலருந்து நான் என் வீட்டு மாடியில வேஷ்டியை ஓணர்த்தறதுக்கு வர்றதேயில்லை…
“ ராமசாமி சிரிப்பு பொங்கி பொங்கி வந்தது.

“மாமா… உங்காத்துல நீங்க கோமணத்தை வேஷ்ட்டின்னு சொல்லுவேளா?” சீனு பதிலுக்கு அவரை நக்கலடித்தான்.

“நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க… தலையும் புரியலே… வாலும் புரியலே” சிவதாணு ராமசாமியை குழப்பத்துடன் பார்த்தார்.

“இனிமே சீனுவும், மீனாவும் இந்தாத்து மாடிப்படிக்கட்டுக்கு கீழே எப்ப வேணாலும் நிண்ணுன்டு, உக்காந்துண்டு, சிரிச்சுண்டு, சந்தோஷமா அரட்டையடிக்கலாம்னு சொல்றேன்…” ராமசாமி மீனாவை நோக்கி சிரித்தார்.

“மாமா.. சும்மா இருங்க… ப்ளீஸ் எல்லார் எதிரிலேயும் என் மானத்தை வாங்காதீங்க மாமா…” மீனா வேகமாக பாய்ந்து சென்று, ராமசாமியின் வாயைப் பொத்தினாள். நடராஜனும், மல்லிகாவும் வாய்விட்டு சிரித்தார்கள்.

ராமசாமி என்ன சொல்கிறார், மீனா ஏன் இப்படி பதறுகிறாள், நடராஜனும் மல்லிகாவும் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், சீனுவின் முகத்தில் ஏன் இத்தனை வெட்கம், என்ற விஷயம் புரியாமல், கூடத்திலிருந்தவர்கள் அவர் முகத்தை திகைப்புடன் பார்த்தார்கள்.

“மாமா.. நீங்க நாரதர்… உங்க கலகத்தாலே எங்க ரெண்டு பேருக்கும் நல்லதுதான் நடந்திருக்கு… ஒரு விஷயம் சொல்றேன்… நல்லாக்கேட்டுக்கோங்க; எப்பவும் தலையில மப்ளர் மட்டும் சுத்திண்டு, இருட்டு நேரத்துல தெருவுல நடக்காதேள்… எனக்கே உங்களை அடையாளம் தெரியமாட்டேங்கறது… அப்புறம் நொண்டிக்கருப்பன், உங்களை எப்படி தெரிஞ்சுப்பான்?”

“என்னைப்பாத்து நொண்டிக்கருப்பன் கொலைக்கறான்னு திரும்பவும், ஹிண்டுவுக்கு கம்பெளைய்ன்ட் எழுதி போடாதேள்.” சீனு அவரைத் தன் வழக்கப்படி சீண்டினான்.

“டேய் சீனு… அந்த நொண்டி கருப்பனுக்கு பிஸ்கோத்து வாங்கி போட்டுட்டு, அவனை என் பின்னாடீ
“சூ… சூ”ன்னு, என் பின்னால ஏவிவிட்டு, என்னைத் தொறத்த வெக்கிற விஷயம் நேக்கு நன்னாத் தெரியும்டா…” ராமசாமியும் விடாமல் அகடவிகடம் பண்ணிக்கொண்டிருந்தார்.

“மாமா… சாரி மாமா.. ஏதோ விளையாட்டுக்கு ஒருதரம் அப்படி நான் பண்ணிட்டேன்… பெரியவர் நீங்க… இதையெல்லாம் மனசுலே வெச்சுக்காதேள்…” அவர் பாணியிலேயே, அவர் பேசுவது போல் மிமிக்ரி செய்து சீனுவும் அவரை கலாய்த்தான்.

“நீங்க ரெண்டு பேரும், சீக்கிரமா கல்யாணம் பண்ணிண்டு, பெரியவா ஆசீர்வாதத்தோடு, காலாகாலத்துல குழந்தை குட்டிகளை பெத்துக்கிட்டு, நீண்ட ஆயுசோட, நல்லபடியா குடும்பம் நடத்தணும். அதை நான் என் கண்ணாலாப் பாக்கணும்…” மனமார வாழ்த்தினார் ராமசாமி.

“தேங்க் யூ மாமா..
“ சீனுவும், மீனாவும் கோரஸாக கத்தினார்கள்.

“புரியறது… புரியறது… நான் கிளம்பிண்டே இருக்கேன்… கிளம்பேன்டீ…”தன் மனைவியை நோக்கி உரக்கக் கூவினார்.

“நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு ஒரு பத்து நிமிஷம் வந்தே ஆகணும்..!” சிவதாணுவையும், கனகாவையும், விடாப்பிடியாக, ராமசாமிஅய்யர் தம்பதியினர் தங்களுடன் இழுத்துக்கொண்டு கிளம்பினர்.

“ஹேப்பி பர்த்டே டு யூ மீனா…!!!”

மீனாவின் வலது கையில், தான் முதல் நாள் அவளுக்கென வாங்கிவைத்திருந்த ரிஸ்ட் வாட்சை அணிவித்து, அவள் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டாள் சுகன்யா.

“தேங்க் யூ… சுகன்யா… தேங்க் யூ… வேலைக்கு போகணுமே… புது வாட்ச் ஒண்ணு வாங்கணும்ன்னு மனசுக்குள்ளவே நெனைச்சுக்கிட்டு இருந்தேன்… ப்யூட்டிஃபுல்லா இருக்கு… மீனா உண்மையான மகிழ்ச்சியுடன் சுகன்யாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“பத்து நிமிஷத்துல நீ சொன்ன மாதிரியே உன் அண்ணனை என்கிட்ட பேச வெச்சியே… நான்தான்டீ உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..” சுகன்யா அவள் காதைக்கடித்தாள்.

“மீனா.. உனக்கு எத்தனை தரம் சொல்றேன்; சுகன்யாவை பேர் சொல்லி கூப்பிடற வேலையை நீ விட்டுடு…” மல்லிகா அவளை முறைத்தாள்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.