கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

அவர் தெரு நாய்களை தன் தடியைக் காண்பித்து மிரட்டுகிறார் எனக் கேள்விப்பட்டு, வாயில்லாப் பிராணிகளின் சங்கச் செயாலாளர் பெண்மணி ஒருவர் அவர் வீட்டுக்கு தன் சங்க உறுப்பினர்களுடன் ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை பத்திரிக்கை நிருபர் ஒருவருடன் விஜயம் செய்தார்.

காலம் கெட்டுப் போச்சு… விலங்குகளுக்குன்னு ஒரு சங்கம்.. அதுக்கு பிரசிடெண்ட்…செயலாளர்கள். அதுவும் எல்லாம் பெண்டுகள்… ஆத்துக்காரியத்தைக் கவனிக்காம பொதுச்சேவைக்குன்னு வந்துடறதுகள், என மெல்ல தன் காதுக்கே கேட்காத அளவில் முணுமுணுத்துவிட்டு அலுத்துப்போய், தன் கர்ம வினையை நொந்தவாறு ஒருவழியாக ஓய்ந்து போனார்.

வெளிப்படையாக ஓய்ந்து போனாலும், இதுகளுக்கு எப்படித் தெரியுது நான் தெருவுக்கு வந்துட்டேன்னு? என்னைத் துரத்தமா விடமாட்டேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு அலையுதுங்களே? இந்த விந்தையை நினைத்து நினைத்து ராமசாமி மனசுக்குள் பெருமூச்சு விடாத நாளேயில்லை.

“குலைக்கறது நாயோட இயல்பு… உங்களைப் பாத்து அதுங்க குலைக்கலை… நீங்க வீணா ஏன் பயத்துல ஓடறீங்க? அதுங்க உங்களைத் தொரத்த நீங்களே ஏன் இடம் குடுக்கறீங்க..?”

தன் நண்பர் ராமசாமியின் அர்த்தமில்லாத பயத்தைப் போக்க நடராஜன் விடா முயற்சி செய்து பார்த்தார். அதனால் எந்த பலனும் கிட்டாமல் போக முடிவில் அவர் தன் மனம் வெறுத்துப் போய், ராமசாமியை மாத்தவே முடியாது… இனிமே தெரு நாய்ங்க கிட்டத்தான், அவரைப் பாத்து கொலைக்காதீங்கன்னு கருணை மனு குடுக்கணும்; அவர் தன் வீட்டில் சொல்லி சொல்லி சிரிப்பார்.

நடராஜனின் தோழமை ராமசாமிக்கு வெகு அத்தியாவசியமாக தேவைப்பட்டதுக்கு அடுத்த காரணம் ஒன்று இருந்தது. சுந்தரம் அய்யர் மெஸ்ஸில் சுடச்சுட பில்டர் காஃபி குடித்துக்கொண்டே அன்றைய அரசியல் நிலவரத்தை ஒரு நாள் தான் அலசவில்லையென்றால், தன் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடுவதாக அவர் நினைத்தார்.

ராமசாமி, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீசில், அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரலாக வேலைப்பார்த்துவிட்டு ஓய்வு பெற்றவர். நடராஜனும் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசராக பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

ராமசாமியை தமிழ் திருமறைகளில் ஒரு அத்தாரிட்டி என்று அவரைத் தெரிந்தவர்கள் சொல்லும் அளவுக்கு புலமைப் பெற்றவர். நடராஜனுக்கும் சைவத்தின் பேரிலும், சைவ நூல்களின் பேரிலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது.

ஞாயிற்றுக் கிழமைகளில், அவர்கள் வீட்டருகில் இருக்கும் சிவன் கோவிலில் நடக்கும் உபன்யாசங்களுக்கும் ஒன்றாகப் போய் திரும்புவது அவர்கள் வழக்கம். நண்பர்கள் இருவரும் அந்த ஏரியாவில் ஒரே நேரத்தில் வீடு கட்டி, ஒரே வாரத்தில் குடி வந்தவர்கள்.