மதன மோக ரூப சுந்தரி – 1 54

நிலவரியை மக்களிடம் நேரடியாக வசூல் செய்த மைசூர் அரசு.. அதில் ஒருபகுதியை ஆங்கிலேய அரசுக்கு கப்பமாக கட்டிவிடும்..!! மைசூர் அரசால் பிற்காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சில தமிழர் வாழ்கிற பாளையங்கள்.. நிலவரி செலுத்தாமல் முரண்டுபிடிக்கவே.. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வரிவசூல் செய்கிற முறை அறிமுகப் படுத்தப்பட்டிருந்தது..!! அவ்வாறு வரி வசூல் செய்வதற்கென்றே.. பகுதிவாரியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு.. அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற அதிகாரிகள் அதற்கென நியமிக்கப் பட்டிருந்தனர்..!!

1876 முதல் 1878 வரை.. பெரிய அளவில் நிலவிய பஞ்சத்தினாலும்.. பசி பட்டினியாலும்.. பரவிய காலராவினாலும்.. ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உயிர்கள்.. கொத்துக்கொத்தாய் செத்து மடிந்தன..!! மைசூர் சமஸ்தானம் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்தித்தது..!! அந்த சீர்குலைவில் இருந்து அரசு கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொண்டிருந்த சமயம்.. 1894-ல்.. மைசூர் மஹாராஜா ஐந்தாம் சாமராஜேந்திர உடையாரின் அகால மரணம்..!! அப்போது அவருடைய மகன் கிருஷ்ணராஜ உடையாருக்கு பத்தே வயது..!! மகன் வளர்ந்து வாலிபம் பெறும் வரைக்குமாக.. மஹாராணியே வேறுவழியன்றி அரியணையில் அமர நேர்ந்தது..!!

நாட்டில் நிலவிய பொருளாதார சீர்குலைவு ஒருபுறம்.. ஆட்சிப் பொறுப்பில் ஏற்பட்ட திடீர் குழப்பம் மறுபுறம்..!! வரி வசூல் செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.. அப்பாவி மக்களிடம் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தனர்.. சிற்சிறு கிராமங்களை தங்களுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்..!! அகழியும் அதுமாதிரியான ஒரு கிராமம்தான்.. அதனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அதிகாரிதான்.. இந்த புவனகிரி..!!

மக்கள் புவனகிரியின் வார்த்தைகளுக்காக காதுதீட்டி காத்திருக்க.. அவருடைய காதுகளுக்குள்ளோ.. அவரது மகன் தீர்த்தபதி நேற்று ஆவேசமாக பேசிய வார்த்தைகள், இப்போது திரும்பவும் ஒலித்தன..!!

“அவளைத்தான் நான் திருமணம் செய்துக்க போறேன்.. அதை யாராலயும் தடுக்க முடியாது..!!”

அந்த வார்த்தைகள் அவருடைய காதுகளுக்குள் ஒலித்ததுமே.. அவர் தனது தலையை சரக்கென சிலுப்பிக் கொண்டார்..!! அவரது பிடரியில் வழிந்த கேசம்.. அப்படியும் இப்படியுமாய் அலை பாய்ந்தது.. கன்னத்து சதைகளும், காதணிகளும் கிடுகிடுத்தன..!! நனைந்து கொண்டிருந்த மக்களை நிமிர்ந்து பார்த்தார்.. நாடி நரம்பெல்லாம் புடைக்க ரௌத்திரமாக கத்தினார்..!!

“சொல்லுங்க.. அவ இந்த ஊருக்கு தேவையா..??”

“தேவையில்ல.. தேவையில்ல..!!” கூட்டத்தினர் ஒருசேர கத்தினர்.

“சன்னதக்காரர் சொன்னதை கேட்டிங்கள்ல..??”

“கேட்டோம்.. கேட்டோம்..!!”

“உங்க கஷ்டத்துக்கெல்லாம் யார் காரணம்..??”

“அவதான்.. அவதான்..!!”

“என்ன செய்யலாம் அந்த வேசை முண்டையை..??” வெறுப்பை உமிழ்ந்தார் புவனகிரி

“கொல்லனும்.. கொல்லனும்..!!” வெகுவாக ஒத்துழைத்தது ஊர்ஜனம்.

முகத்தில் இப்போது ஒருவித மலர்ச்சி பரவ ஆரம்பிக்க.. புவனகிரி தலையை திருப்பி பின்னால் பார்த்தார்.. வன்மம் மிக்க அவரது கண்களில் ஒருவித குரூர கூர்மை..!! அவருடைய அந்த சைகைக்குத்தான் காத்திருந்த மாதிரி.. அவருக்கு பின்னால் நின்றிருந்த அந்த நால்வரும் இப்போது உடனடியாய் பரபரப்பாயினர்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றியவாறு, கல்மேடையில் இருந்து குதித்தனர்..!!

புவனகிரிக்கு தன் மகன் தீர்த்தபதி மீது பெரிய அன்போ அக்கறையோ எப்போதும் இருந்ததில்லை.. சிறுவயதில் இருந்தே அவனுக்கு தன்மீது அவ்வளவாக ஒட்டுதல் இல்லை என்பதையும் அவர் நன்கறிவார்..!! ஆனாலும்.. அவனுடைய திருமணம் தனக்கு பிடித்த வகையிலே அமையவேண்டும் என்பதில் அவர் ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தார்.. அதற்கென பல திட்டங்களும் வைத்திருந்தார்..!! திடீரென மகன் வந்து அவ்வாறு உரைத்ததும் உள்ளம் கொதித்து போனார்.. அதிலும் அவன் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சொன்ன அந்தப்பெண்..!! அவளுடைய பெயரை கேட்டதுமே இவரது ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போயிற்று.. அவளுக்கென அவன் வாக்குவாதம் செய்ததில் இவர் மூர்க்கமாகிப் போனார்..!!