மதன மோக ரூப சுந்தரி – 1 53

உடனடியாய் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.. உள்ளத்தில் பொங்கிய ஆத்திரம், குரூரமாய் ஒரு திட்டம் தீட்ட அவரை தூண்டியது..!! ஊரில் பரவிய தொற்றுநோயும்.. நிலச்சரிவால் நேர்ந்திட்ட சில துர்மரணங்களும் அவருடைய நினைவுக்கு வந்தன.. சாமியருள் வந்து சாபமும் வரமும் தருகிற சன்னதக்காரர் ஞாபகத்துக்கு வந்தார்..!! இரண்டையும் சேர்த்து ஒரு முடிச்சு போட்டார்.. இதோ அவரது திட்டம் எதிர்பார்த்த பலனை தந்துவிட்டது..!! இவரது சுயவெறுப்புக்கு அவளை காவு தர.. ஊர் மக்களை தயார் செய்துவிட்டார்..!!

திட்டம் பலித்ததில் மிகவும் திருப்தியுடனே காணப்பட்டார் புவனகிரி..!! கல்த்தூணில் சாய்ந்திருந்த சன்னதக்காரரை ஒருமுறை திரும்பி பார்த்தார்.. அவரோ ஒருவித குற்ற உணர்வுடன் தலையை கவிழ்த்துக் கொண்டார்..!!

அதே நேரத்தில்.. அகழியின் ஊர் எல்லையை ஒட்டிய சமவெளி பிரதேசத்தில்.. அடுத்த ஊருக்கு இறங்குகிற மலைச்சரிவு ஆரம்பமாகிற இடத்தில்.. மசமசப்பான விளக்கு வெளிச்சத்துடன், மழைநீரில் நனைந்தவாறு காட்சியளித்தது அந்த வீடு..!! குழல் மூங்கில்களால் கட்டப்பட்ட குடில் வீடு.. வேசியென புவனகிரி வெறுப்பை உமிழ்ந்த குறிஞ்சியின் வீடு..!!

கல்மேடையில் இருந்து குதித்த அடியாட்களின் பரபரப்பு.. வீட்டுக்குள் இருந்த குறிஞ்சியிடமும் காணப்பட்டது..!! தரையில் முழங்காலிட்டு அமர்ந்திருந்தவள்.. கட்டிலுக்கு அடியில் இருந்த அந்த தகரப்பெட்டியை வெளியே இழுத்தாள்..!! ‘க்றீச்ச்ச்’ என்ற ஒலியுடன் வெளியே வந்த பெட்டியை திறந்து.. உள்ளிருந்த பொருட்களை பரபரவென தரையில் வாரி இறைத்து எதையோ தேடினாள்..!! அவளுக்கு பின்னால் நின்றிருந்த தீர்த்தபதி.. இப்போது கவலை தோய்ந்த குரலில் சொன்னான்..!!

“எ..என்னை மன்னிச்சுடு குறிஞ்சி..!!”

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதும் குறிஞ்சி அவனை ஏறிட்டு ஒருகணம் கூர்மையாக பார்த்தாள்.. பிறகு மீண்டும் தலையை குனிந்து.. தகரப்பெட்டிக்குள் தனது தேடுதலை தொடர்ந்தவாறே.. ஆதங்கமான குரலில் கேட்டாள்..!!

“ஏன் இப்படி செஞ்சீங்க.. என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம..??”

“எ..எல்லாம்.. உன் மேல இருக்குற ஆசைலதான் குறிஞ்சி..!!”

“ஆசை இருந்தா அதை என்கிட்ட சொல்லிருக்கலாமே.. நான் தீர்த்து வச்சிருப்பேனே..??”

“இல்ல.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!”

“நீங்கதான் தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க..!! அவரோட பையனா இருந்தும்.. ஆணவம்ன்றது கொஞ்சம் கூட இல்லாம நீங்க பேசின விதம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. அதனாலதான் நானும் உங்ககூட பேசினேன் பழகினேன்..!! மற்றபடி அந்த மாதிரி எண்ணம் உங்க மேல எனக்கு எப்போவும் வந்தது இல்ல..!!”

“எனக்கு தெரியும்..!!”

“அப்புறம் எப்படி உங்க அப்பாகிட்ட அப்படி நீங்க சொல்லலாம்..??”

“உன்னை எப்படியாவது கல்யாணம் செய்துக்கணும்னு எனக்கு ஆசை குறிஞ்சி..!! அப்பாவை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்க முடியும்னு நெனைச்சேன்.. கடைசில சண்டை போட வேண்டியாதா போயிடுச்சு..!! அப்பா இந்த மாதிரி செய்வார்னு..”

தீர்த்தபதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, குறிஞ்சி சரக்கென முகத்தை திருப்பி அவனை பார்த்தாள்.. அவனுடைய கண்களை தனது கண்களால் கூர்மையாக சந்தித்தவாறே இறுக்கமான குரலில் சொன்னாள்..!!

“வேற என்ன செய்வார்னு எதிர்பார்த்திங்க..?? உங்க அப்பாவை பத்தி உங்களை விட எனக்கு நல்லா தெரியும்..!!” என்றவள் சற்றே நிறுத்தி,

“புரியுதா..??” என்று அழுத்தமாக கேட்டாள்.