மதன மோக ரூப சுந்தரி – 1 52

கடும் மழை பொழிகிற மலைப்பிரதேசம்.. கரி பூசிவிட்ட மாதிரியாக அடர்இருள்.. நெருக்கமாய் வளர்ந்திருக்கிற காட்டுமரங்கள்.. அதற்குள்ளே வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான சாலை..!! அந்த சாலையில்.. சிவப்பு நிற அங்கி காற்றில் படபடக்க.. வெள்ளை நிற குதிரையில் குறிஞ்சி பறந்து கொண்டிருந்தாள்..!! சிறிது தூர இடைவெளியில்.. இன்னும் நான்கு குதிரைகளில்.. புவனகிரியின் ஆட்கள் அவளை விரட்டிக் கொண்டிருந்தனர்..!!

குறிஞ்சி குதிரையேற்றம் அறிந்தவள் என்றாலும், கைதேர்ந்தவள் என்று சொல்ல முடியாது..!! பின்தொடர்ந்து சென்றவர்களுக்கோ அது அன்றாட பணியும் பயிற்சியுமாக இருந்தது..!! குறிஞ்சிக்கும் அவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்துகொண்டே வந்தது..!!

குதிரையை விரட்டிக்கொண்டே.. குறிஞ்சி தலையை மெல்ல திருப்பி பின்னால் பார்த்தாள்..!! துரத்துபவர்கள் இப்போது தனக்கு இன்னும் நெருக்கமாக வந்திருப்பதை அறிந்ததும்.. அவளுக்குள் ஒரு நடுக்கம் பரவியது..!! மாட்டிக்கொள்வோமோ என்பது மாதிரியான ஒரு பயம்.. அவளுடைய மனதினை வந்து கவ்விக்கொண்டது..!! குதிரையின் வயிற்றை உதைத்து.. அதனை வேகம்கொள்ள தூண்டினாள்..!!

இடைவெளி நிறைய குறைந்து போனதும், நால்வரில் ஒருவன் திடீர் முடிவெடுத்தான்.. கையிலிருந்த வேல்க்கம்பை சுழற்றி, காற்றில் சரக்கென வீசினான்..!! மழைநீரை கூர்மையாக கிழித்து பறந்த அந்த வேல்க்கம்பு.. சரியாக சென்று குறிஞ்சியின் தோள்ப்பட்டையில் சதக்கென்று பாய்ந்தது..!!
“ஆஆஆஆஆஆ…!!!!”

குருதி பீய்ச்சியடிக்க அலறிக்கொண்டே குறிஞ்சி ஒருபக்கமாக சரிந்தாள்.. சமநிலை கிடைக்காத குதிரையும் அவளுடன் சேர்ந்து சரிந்தது..!! குதிரை சென்ற வேகத்துக்கு.. குறிஞ்சி தரையில் தூக்கி விசிறப்பட்டாள்..!! கல்லிலும் முள்ளிலும் காட்டுச்செடியிலும் கடகடவென உருண்டவள்.. கரும்பாறை ஒன்றில் சென்று நச்சென்று மோதவும்.. கண்கள் செருக சுய நினைவை இழந்தாள்..!! விரட்டி வந்தவர்கள் குதிரையின் வேகத்தை குறைத்து தரையில் குதித்தனர்..!!

அதே நேரத்தில்.. தீர்த்தபதி தனது நண்பன் முத்தழகனின் வீட்டில் இருந்தான்..!! குறிஞ்சியை விரட்டிக்கொண்டு அந்த நால்வரும் சென்றபிறகு.. தனது குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பியவன்.. நேராக நண்பன் வீட்டில்தான் வந்து நின்றான்..!!

வீட்டுக்குள்ளே.. கடும்குளிருக்கு கம்பளி போர்த்தியவாறும்.. காய்ந்துபோன தொண்டையுடன் ‘லொக் லொக்’ என்று இருமியவாறும்.. கட்டிலில் படுத்திருந்தாள் அந்த பெண்மணி.. முத்தழகனின் தாய்..!! தன்னை பெற்றெடுத்த தாயை சிறுவயதிலேயே இழந்திருந்த தீர்த்தபதி.. தனக்கு கடவுள் அளித்த இன்னொரு தாயாக கருதுபவள்..!!

“அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு..??” தீர்த்தபதி கேட்க,

“அப்படியேதான் இருக்கு..!!” கவலையாக பதில் சொன்னான் முத்தழகன்.

தீர்த்தபதி இப்போது நடந்து சென்று அந்த அம்மாவை நெருங்கினான்.. கட்டிலுக்கு குனிந்து அவளுடைய கையை வாஞ்சையாக பற்றிக்கொண்டான்..!! இமைகளை மெல்ல பிரித்து அவள் இவனை பார்க்க.. இவன் அவளை பாசமிகு பார்வை ஒன்று பார்த்தான்..!!

முத்தழகனின் தந்தை ஒரு சுகபோகி.. குறிஞ்சியின் அழகில் அவருக்கு ஒரு மயக்கம்..!! குடித்தது சூதாடியது போக தனது வருமானத்தின் ஒரு பெருமானத்தை.. குறிஞ்சியின் அழகை சுகிப்பதற்கென்று செலவழிப்பதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.. குறிஞ்சியின் குடிலிலேயே பெரும்பொழுதை கழித்தார்.. கட்டிய மனைவியை உதாசீனப்படுத்தியே வந்தார்..!!

நண்பனின் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளை மட்டுமே தீர்த்தபதியால் செய்ய முடிந்தது.. கணவனின் போக்கை கண்டு நண்பனின் அம்மாவுக்கு ஏற்பட்ட மனநோயை தீர்க்க, தீர்த்தபதிக்கு வழியேதும் தெரியவில்லை..!! ‘இது மனதில் உண்டான காயம்.. மருந்துக்கு குணப்படாது..’ என்று மருத்துவர் சொன்னது இன்னமும் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது..!! அம்மாவின் மனநோய் நீங்கவேண்டும் எனில்.. குறிஞ்சி இந்த ஊரில் இருக்கக்கூடாது என்பதை சிலநாட்கள் முன்புதான் நன்கு புரிந்து கொண்டிருந்தான்..!!

இப்போது.. அந்த அம்மாவின் கையை இதமாக தடவிக் கொடுத்தவாறே.. உலர்ந்து போன குரலில் சொன்னான்..!!

“உங்ககிட்ட சொன்னதை செய்து முடிச்சுட்டேன் அம்மா..!! இனிமே அவ இந்த ஊர்ல இருக்க மாட்டா.. அவளால உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.. உங்க கணவர் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டார்..!! உங்களுக்கு சீக்கிரமே சரி ஆகிடும் அம்மா.. கவலைப்படாதீங்க..!!”

தீர்த்தபதி அவ்வாறு சொன்னதை கேட்டதும், அந்த பெண்மணியின் கண்களில் ஒரு மின்னல் கீற்று.. உதடுகள் பிரித்து பலவீனமாக ஒரு நன்றிப்புன்னகையை உதிர்த்தாள்..!! உள்ளுக்குள் அரித்த குற்ற உணர்வை மறைத்துக்கொண்டு.. தீர்த்தபதியும் பதிலுக்கு புன்னகைத்தான்..!!