கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

“டேய் சீனுன்னு” கூப்பிடமுடியுமா?

மீனா சீக்கிரமா வந்து தொலைச்சா பரவாயில்லே; உள்ளே போனவ அப்படி என்னதான் பண்ணிகிட்டு இருக்கா? இந்த கொடுமையான மவுனத்தை என்னால தாங்கமுடியலியே? தொண தொணன்னு பேசற இந்த சீனுவும் இன்னைக்கு வாயில கொழுக்கட்டையை அடைச்சிக்கிட்டு இருக்கான்? பாவி அவன் மட்டும் என்னப் பண்ணுவான்? எல்லாமே இந்த மீனாவால வந்த வெனை! அவதான் இன்னைக்கு சீனுவோட வாயை கட்டிப்போட்டுட்டாளே!

சீனுவும், மீனாவின் அந்த வார்த்தையை தன் மீது வீசப்பட்ட ஒரு சவுக்கடியாகத்தான் உணர்ந்தான். எங்க ரெண்டு பேருடைய ஃப்ரெண்ட்ஷிப்பையே, ஒரு வினாடியிலே ஒண்னுமில்லாம ஆக்கிட்டாளே? செல்வாவும் நான் குடிக்கறதை சீரியஸா எடுத்துக்கலே! சீனு… நீயும் செல்வாவை, அவன் சொல்றதை சீரியஸா எடுத்துக்கலே? நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ன்னு வாயாலத்தானே சொல்லிக்கிட்டிருந்தீங்கடான்னு, ரெண்டுபேரையும் ஜோட்டால அடிச்சுட்டாளே?

என்னாலத்தானே செல்வாவுக்கு இந்த நிலைமை? செல்வா எத்தனையோ முறை சீரியஸா, நான் கட்டிங்க் வுடற விஷயத்தைப் பத்தி, என் கிட்ட இது நல்லதுக்கு இல்லேடான்னு தன் மனம் வெதும்பி பேசியிருக்கான். நான் தான் அவன் சொன்ன எதுக்கும் காது குடுக்காம என் போக்குல போய்கிட்டு இருந்தேன்; என்னால இன்னைக்கு அவன் அவமானப்பட்டு வாயைத் தொறக்க முடியாம உக்காந்திருக்கான்.

செல்வா, மவுனமாக உட்க்கார்ந்து தன் விரல் நகங்களை ஒவ்வொன்றாக கடித்து துப்பிக்கொண்டிருந்தான். மீனா பேசிவிட்ட அந்த ஒரு வார்த்தையால் செல்வாவும், சீனுவும், எப்போதும் தங்களுக்குள் தாங்கள் உணரும் சகஜமான நிலைமை, ஒரே நொடியில் சுக்கு நூறாக்கிவிட்டதை, நினைத்து திரும்ப திரும்ப வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். சீனு, தன் தலையை குனிந்து தன் கன்னத்தை சீரியஸாக சொறிந்துகொண்டிருந்தான்.
“அண்ணா! சாப்பிட வர்றீங்களா?”

வெங்காயத்தின் விலை மடமடவென ஒரே நாளில் ஏறியது போல், மீனாவின் குரலில் திடீரென மரியாதை ஏகத்துக்கு ஏறியிருந்தது. செல்வாவுக்கு தன் தங்கை தனக்கு திடீரென கொடுக்கும் மரியாதைக்கான காரணம், தெளிவாக புரிந்தாலும், இவ எப்ப நம்பளை தலைமேல தூக்கி வெச்சுக்குவா; எப்ப கால்லே போட்டு மெதிப்பான்னு ஒண்ணும் புரியலையே, ஏகத்துக்கு அப்பா இவளுக்கு செல்லம் கொடுத்து வெச்சிருக்காரு. வயசுக்கு வந்த பொண்ணை ஒண்ணும் வாய்விட்டு அதட்டி சொல்லவும் முடியலை. இவ மனசுக்குள்ள இந்த நிமிஷம் என்ன இருக்கு? புதுசா வேற ஒரு சீனுக்கு அடி போடறாளா? அவன் மனதில் சிறிதே வியப்பும், அச்சமும் ஒரு சேர எழுந்தன.

சீனு, தன் தலையை நிமிர்த்தாமல், தன் உள்ளங்கைகளை விரித்து, அதில் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும், அட்சரேகைகளையும், தீர்க்க ரேகைகளையும், அன்றுதான் புதிதாக பார்ப்பவன் போல் மவுனமாக உற்று நோக்கிக் கொண்டிருந்தான். செல்வா, தன் தங்கையின் முகத்தை நிமிர்ந்து நோக்கியவன், வாய் பேசாமல், சீனுவின் பக்கம் நோக்கி, அவனையும் நீயே ஒரு தரம் சாப்பிட கூப்பிடேண்டி, என்ற பொருள் தன் பார்வையில் தொக்கி நிற்க, மீனாவிடம் கண்களால் கெஞ்சியவன், தன் தலையைத் சட்டென தாழ்த்திக்கொண்டான்.

“மணி பதினொன்னு ஆவப்போவுது, அர்த்த ராத்திரியில, ஒவ்வொருத்தரையும் நான் தனித்தனியா, வீட்டுக்கு வந்த புதுமாப்பிள்ளையை, விருந்துக்கு அழைக்கற மாதிரி வெத்தலைப் பாக்கு வெக்கணுமா?” மீனா தன் குரலில் போலியாக சிறிது சீற்றத்தை கொண்டுவந்தாள்.

மீனாவின் குரலில் இருந்த சீற்றத்தைக்கண்டதும்,
“இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி, காத்துல எனக்கு முத்தம் கொடுத்துட்டு போனா; அதுக்குள்ள இப்ப எதுக்காக என் மேல இந்த கோபம் இவளுக்கு?” ம்ம்ம்.. நடத்தற டிராமாவை, சொந்த அண்ணனை பக்கத்துல சாட்சிக்கு வெச்சிக்கிட்டே நடத்தணுதுமில்லாமே, கடைசீல என்னை இந்த வீட்டு மாப்பிள்ளைன்னும் சீலைக் குத்திப்பிட்டா..! இனிமே இவகிட்டேயிருந்து தப்பிச்சு ஓடமுடியாதபடி கட்டிப்போட்டுட்டா!.

சீனு தன் மனதில் ஓடும் கட்டுக்கடங்காத எண்ணங்களுடன், விளக்கெண்ணைய் குடிச்சது போலிருந்த தன் முகத்தை ஒரு முறை, தன் வலதுகையால், அழுந்த துடைத்துக்கொண்டு, தன் தலையை நிமிர்த்தி வாசல் படியில் நின்றிருந்தவளை நோக்க,
“பசிக்குதுன்னு சொன்னியேடா … சட்டுன்னு எழுந்து வாயேன்” என்கிற கனிவான அழைப்பை அவள் கடைக்கண்ணில் கண்டதும், சரியான ஒண்ணாம் நம்பர் திருட்டு ராஸ்கல் இவ; இவளுக்கு வாயில ஒரு பேச்சு; கண்ணுல ஒரு பேச்சு; இவ கிட்ட இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல இருக்கே; சீனு நீண்ட பெருமூச்சுடன் எழுந்தான்.

***

மீனா, அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டாங்களா?” சீனு அங்கு எதுவுமே நடக்காதது போல், தன்னை வெகு சகஜமாக காட்டிக்கொள்ள முயன்றான்.

“கையை கழுவிக்கிட்டு வந்து சாப்பிடறதுங்கற பழக்கம் கூட போயாச்சு இந்த வீட்டுலே? தட்டின் எதிரில் உட்க்கார்ந்த செல்வாவிடம் மீனா எரிந்து விழுந்தாள்.

“மீனா … போதும்டா கண்ணு, சாப்பிட வுடுடி…” செல்வா எரிச்சலுடன் பேசியபோதிலும், முழுவதுமாக வீக்கம் குறையாத தன் காலுடன் வாஷ் பேசினுக்கு நொண்டியபடி நடந்தான். சீனு அவளை பார்க்காமலே செல்வாவின் பின்னால் வாயைத் திறக்காமல் எழுந்து ஓடினான்.

“போதும்…மீனா … போதும் … செல்வாவுக்கு வெய்யேன் … அம்மா மாதிரி பொண்ணுக்கும் மனசும், கையும் தாராளம், தட்டில் எடுத்து எடுத்து ஊத்தப்பத்தையும், பஜ்ஜியையும் மாறி மாறி போட்டுக் கொண்டிருந்தவளை மனதில் நன்றியுடன் பதறித் தடுத்தான் சீனு.

“இங்க சாப்பிடறதுக்கு பில்லு யாரும் போடப்போறதில்லே …சீன் காட்டாம ஒழுங்கா சாப்பிடுங்க…”மீனாவின் குரலில் இப்போது கொஞ்சம் மென்மை வந்திருந்தது.

“மீனா … ஊத்தப்பம் ரொம்ப நல்லா இருந்தது … தேங்க்ஸ்ம்ம்மா …” அண்ணனுக்குத்தான் மரியாதை கூடியிருக்குன்னுப் பாத்தா, எனக்கும் கொஞ்சம் மரியாதை அதிகரிச்சித்தான் இருக்கு. மனதுக்குள் சற்றே வியப்புடன் அவள் முகத்தைப் பார்த்த சீனு மெல்லிய குரலில் சொன்னான்