எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19 52

இவர்களது பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும்.. இப்போது ஹாலில் ஒன்றாக குழுமியிருந்தனர்..!! நடந்த விஷயத்தை பாரதியே அவர்களுக்கு விளக்கி சொல்ல.. எல்லோருடைய முகத்திலுமே அப்படி ஒரு ஆச்சரியமும் மலர்ச்சியும்..!! அவள்தான் வேண்டும் என்று அசோக் ஒற்றைக்காலில் நின்றதற்கு.. இப்போது நல்லதொரு பலன் கிடைத்திருப்பதாக அனைவருக்குமே ஒரு திருப்தி..!!

அவ்வாறு அவர்கள் பூரிப்பில் திளைத்திருந்தபோதே..

“ச்சே..!!” அசோக் சலிப்பான குரலுடன் ஹாலுக்குள் பிரவேசித்தான்.

“என்னடா ஆச்சு..??” மகனை கேட்டாள் பாரதி.

“ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க மம்மி.. யோகா க்ளாஸ்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..!!”

“ஓ..!! கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பாரேன்..!!”

“இல்ல மம்மி.. நான் உடனே கெளம்புறேன்.. நேர்லயே போய் அவங்களை பாத்து பேசிடுறேன்..!!” பரபரப்பு குறையாதவனாய் பைக் சாவி எடுக்க கிளம்பியவன்,

“இ..இது அண்ணிதானாடா.. நல்லா தெரியுமா..?? கண்ணு மட்டுந்தான் தெரியுது..??”

என்று ஃபோட்டோவை பார்த்தபடியே சங்கீதா சந்தேகக்குரல் எழுப்பியதும் அப்படியே நின்றான். தங்கைக்கு அசோக் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்பே, அவனுடைய தாத்தா அவனது உதவிக்கு வந்தார்.

“ப்ச்.. காதலிக்கிறவன் அவன் சொல்றான்.. கரெக்டாத்தான் இருக்கும்..!! கண்ணை பார்த்து கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா.. நான்லாம் காத்துல வர்ற வாசனையை வச்சே இவளை கண்டுபிடிச்சுடுவேன்..!!” நாராயணசாமி அவ்வாறு சிரிப்புடன் சொல்ல,

“ச்சீய்.. போங்க..!!”

அசோக்கின் பாட்டி அழகாக வெட்கப்பட்டாள். அந்த வெட்கத்தில் ஒருவித பெருமிதமும் ஏராளமாய் கலந்திருந்தது. அவளது வெட்கத்தை பார்த்து, ‘ஹாஹாஹா’ என்று அனைவருமே இப்போது அடக்கமுடியாத ஒரு சிரிப்பினை உதிர்த்தனர். அசோக்குமே தனது பதற்றம் தணிந்து மெலிதாக ஒரு புன்னகையை வெளிப்படுத்தினான். இப்போது மணிபாரதி சற்றே நகர்ந்து அசோக்கை நெருங்கினார். மகனுடைய தோளில் கைபோட்டவர், இதமான குரலில் சொன்னார்.

“போடா.. போய் என் மருமகளை கூட்டிட்டு வா.. போ..!!”

தங்கையின் கையிலிருந்த புகைப்படத்தை பிடுங்கிய அசோக், பைக் சாவி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.. வாசலுக்கு வந்த அவனது குடும்பத்தினர் அனைவரும், அவன் கிளம்புவதையே எதிர்பார்ப்பும் சந்தோஷமுமாய் பார்த்தனர்..!! பைக்கை கிளப்பிய அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கி பறக்க ஆரம்பித்தான்..!! தொலைந்துபோன காதலியை காணப்போகிற அவனது வேகத்தை.. அவனுடைய பைக்குக்கும் சரியாக புரிந்து கொண்டிருந்தது.. சாலையில் சர்ர்ர்ரென சீறிப் பாய்ந்தது..!!

பத்தே நிமிடத்தில்.. அந்த தற்கொலை தடுப்பு ஆலோசனை மைய வளாகத்தின் முன்பாக வந்து நின்றது அசோக்கின் பைக்..!! வண்டியில் இருந்து இறங்கியவன், வராண்டாவை அடைந்து வேகமாக நடைபோட்டான்.. நீளமான காரிடாரின் கடைசி அறைக்குள் புயலென புகுந்தான்..!! மார்பிள் பதித்த தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பத்துப் பேரும்.. அவர்களுக்கு எதிர்ப்புறம் அதே தோற்றநிலையில், தனியாக அமர்ந்திருந்த மும்தாஜும் காணக்கிடைத்தனர்.. அனைவருமே ஆழ்ந்ததொரு தியானத்தில் திளைத்திருந்தனர்..!!

அங்கு நிலவிய அமைதியை குலைக்க அசோக் சற்றும் தயங்கவில்லை..!!

“மும்தாஜ்..!!!”

என்று சத்தமிட்டுக்கொண்டேதான் அந்த அறைக்குள் நுழைந்தான்..!! படக்கென விழிகள் திறந்து அனைவரும் அசோக்கை குழப்பமாய் பார்க்க.. மும்தாஜோ முகத்தில் ஒரு திகைப்புடன் அவனை ஏறிட்டாள்..!!

“அசோக்..!!”

அசோக் மும்தாஜை நெருங்கி அவளது புஜத்தை பற்றினான்.. தரையில் இருந்து எழுப்பினான்..

“எ..என்னாச்சு அசோக்..??”

“வாங்க சொல்றேன்..!!”

எதுவும் புரியாமல் விழித்த மும்தாஜை, அந்த அறைக்கு வெளியே இழுத்து வந்தான்.. அவளது புஜத்தை விடுவித்தவன், கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டி, பதற்றமும் பரிதவிப்பும் கலந்த குரலில் கேட்டான்..!!

“இ..இது.. இது யாரு மும்தாஜ்..??”

2 thoughts on “எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 19<a href="#" class="jm-post-like" data-post_id="4200" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 52</a>”

Comments are closed.

Scroll to Top