எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

பதைபதைப்புடன் படிக்கட்டு ஏறிய பாரதி, மூச்சிரைக்க அசோக்கின் அறையை வந்தடைந்தாள்.. அவரசமாக கதவை திறந்து, அறைக்குள் பார்வையை வீசினாள்..!! உள்ளே அவள் கண்டகாட்சியில்.. ஒருவித நிம்மதியும், குழப்பமும் ஒருசேர அவளுடைய முகத்தில் படர்ந்தன..!! அசோக் சுயநினைவுடன் இருந்ததினால் வந்தது அந்த நிம்மதி.. குழப்பத்துக்கு காரணம் அவன் அமர்ந்திருந்த நிலை..!!

கால்கள் தரையில் பதிந்திருக்க கட்டிலில் அமர்ந்திருந்தான்.. முழங்கைகளை தொடைகளில் ஊன்றி, முகத்தினை உள்ளங்கைகளில் கவிழ்த்திருந்தான்.. மூச்சு விடுவதற்கு சாட்சியாய் அவனது முதுகு விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தது..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு சூனிய உணர்வில் ஆழ்ந்திருக்கிறான் என்பதினை.. அவன் அமர்ந்திருந்த தோற்றத்தில் இருந்தே அறிந்துகொள்ள முடிந்தது..!!

பதற்றம் குறையாத பாரதியின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்க.. படியேறி ஓடிவந்ததில் அவளது நெஞ்சுக்கூடு காற்றுக்காக அடித்துக்கொண்டு கிடக்க.. அதற்குள்ளாகவே சப்தம் கேட்டு அசோக் தலையை நிமிர்ந்து பார்த்தான்..!! வாசலில் தாயின் உருவம் கண்டதும்.. அவனது நெற்றியில் உடனடியாய் ஒரு சுருக்கம்..!! அதுவும்.. அவள் வந்து நின்றிருக்கிற கோலம் அவனை சற்றே திகைப்பில் ஆழ்த்தியது..!!

ஒருசில வினாடிகள்தான்.. அசோக்கிற்கு புரிந்து போனது.. வாசலில் அவள் நின்ற கோலமும், வந்திருப்பதற்கான காரணமும்..!! சிறிது தடுமாறியவன், பிறகு பொறுமையாக பக்கவாட்டில் திரும்பினான்.. கையை நீளமாக்கி சற்றே எட்டி அதை எடுத்தான்.. எடுத்ததை பிறகு உள்ளங்கையில் வைத்து அம்மாவிடம் நீட்டினான்.. தூக்க மாத்திரைகள் நிரம்பிய டப்பா..!!

வாசலின் இருபுறமும் கையூன்றி நின்று.. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த பாரதி.. இப்போது அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!! மகனை நெருங்கியவள்.. அவன் கையிலிருந்த டப்பாவை கைப்பற்றிக்கொண்டாள்..!! அவளுடைய முகத்தில் இன்னமும் முழுநிம்மதி வந்திருக்கவில்லை.. அச்சம் இன்னும் மிச்சம் இருந்தது..!! அம்மாவின் எண்ண ஓட்டம் அசோக்கிற்கு புரிந்திருக்கவேண்டும்..!!

“சா..சாப்பிடலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடல..!!”

தளர்வான குரலில் சொன்னவன்.. தலையை மெல்ல குனிந்துகொண்டான்..!! பாரதி இப்போது மகனின் தாடையை பற்றி.. அவனது முகத்தை நிமிர்த்தினாள்..!! அம்மாவை ஏறிட்டு அவளது கூர்மையான பார்வையை சந்தித்த அசோக்கிற்கு.. தனது வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கையில்லை என்று தோன்றியது..!!

“சாப்பிடல மம்மி.. ப்ராமிஸ்..!!” என்றான் சற்றே சலிப்பாக.

பாரதிக்கு இப்போது மகனின் வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது.. அவளிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.. ‘என்னாயிற்றோ ஏதாயிற்றோ’ என்று பதைபதைப்புடன் ஓடிவந்திருந்ததில், அவளது இருதயம்தான் இன்னும் ‘படக் படக்’ என துடித்துக்கொண்டிருந்தது..!! படபடப்பை குறைக்கும் பொருட்டு.. பாரதியும் அசோக்கின் அருகாக மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்..!! கையிலிருந்த டப்பாவை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு.. கண்களை மூடி.. சுவாசத்தை சீராக்கிக்கொள்ள முயற்சித்தாள்..!!

“ஆ..ஆனா.. கூடிய சீக்கிரத்துல எனக்கு அந்த நெலமை வந்துடுமோன்னு பயமா இருக்கு மம்மி..!!”

அசோக் அவ்வாறு சொன்னதும்.. பாரதி இப்போது தலையை திருப்பி.. பக்கவாட்டில் தெரிந்த மகனின் முகத்தை கலவரமாக பார்த்தாள்..!! அம்மாவை கவனியாத அசோக்.. எங்கேயோ வெறித்து பார்த்தபடி தொடர்ந்து பேசினான்..!!

“ஆளாளுக்கு அவளை மறந்துடு மறந்துடுன்னு சொல்றீங்க..!! எ..என்னால முடியல மம்மி.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என்னால அவளை மறக்க முடியும்னு எனக்கு தோணல..!!”

“………………………….”

“அவளோட பிரச்சினையை சொல்லி கஷ்டப்படுத்தக்கூட விரும்பாம.. என்னைவிட்டு பிரிஞ்சு போயிருக்கா.. எந்த அளவுக்கு என்னை உண்மையா நேசிச்சிருக்கணும்.. எந்த அளவுக்கு எதையுமே எதிர்பார்க்காம என்மேல அவளுக்கு காதல் வந்திருக்கணும்..?? அந்த மாதிரி ஒருத்தியை எப்படி என்னால மறக்க முடியும் மம்மி..??”

“………………………….”

“அவளை மறக்கனும்னா இதுதான் ஒரே வழி.. அதான்..!!”

“………………………….”

“ஏ..ஏதோ ஒருவேகத்துல எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆனா சாப்பிட போறப்போ.. என்னன்னவோ யோசனை மம்மி..!! நீ.. டாடி.. சங்கி.. தாத்தா, பாட்டி.. ஃப்ரண்ட்ஸ்..!! ரொம்ப கஷ்டமா இருந்தது..!!”

“………………………….” அமைதியாக மகனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பாரதிக்கு, இப்போது கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.