எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“சரிடா.. அம்மா கெளம்புறேன்.. தலைக்கு மேல வேலை இருக்குது.. பாத்திரம்லாம் அப்டியே கெடக்குது.. கழுவி எடுத்து வச்சுட்டு டிபன் ரெடி பண்ணனும்.. மாமா வேற கால்வலின்னாரு.. போய் தைலம் தேச்சு விடனும்.. எந்திரிக்கிறப்போ காபி ரெடியா இல்லைன்னா, உன் தங்கச்சி வேற பேயாட்டம் ஆடுவா..!! ஹ்ம்ம்… நீ குளிச்சுட்டு சீக்கிரம் கீழ வா.. நைட்டு வேற சாப்பிடல.. வயிறுலாம் காஞ்சு போய் கெடக்கும்.. வந்து சுடச்சுட ஒரு பத்து இட்லியாவது இன்னைக்கு சாப்பிடனும்.. சரியா..!!”

மிக இயல்பாக சொல்லிக்கொண்டே அறைவாசலை நோக்கி நடக்கிற அம்மாவை.. அசோக் வித்தியாசமாக பார்த்தான்..!! அடுத்த கணமே.. மேஜை மீதிருந்த தூக்கமாத்திரை டப்பா அவனது கண்களில் படவும்.. அவசரமாக அவளை அழைத்தான்..!!

“ம..மம்மி..”

“ம்ம்..??” பாரதி திரும்பி பார்த்து கேட்டாள்.

“இ..இது.. இ..இந்த டப்பா..” அசோக் இழுத்தான்.

“ஆங்.. அதுக்கென்ன..??”

“இல்ல.. இ..இங்கயே வச்சுட்டு போயிட்ட..??”

“ஹ்ம்ம்.. நல்லாருக்கே..!! நான் என்ன உனக்கு எடுபுடியா..?? நீதான எடுத்துட்டு வந்த.. நீயே போய் எடுத்த எடத்துல வச்சுடு..!!”

கிண்டலான குரலில் சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க.. அசோக்காலும் அவனுடைய உதட்டில் கசிந்திட்ட ஒரு புன்முறுவலை கட்டுப்படுத்த முடியவில்லை.. நீண்ட நாட்களுக்கு அப்புறம் அவனது இதழ்களில் பூத்துக்கொண்ட மெலிதான ஒரு புன்னகை அது..!!

“தேங்க்ஸ் மம்மி..!!” என்றான், திரும்பி நடக்கிற பாரதியின் முதுகை பார்த்து.

அசோக்கிடம் ஒருவித அலட்சியத்துடன் பேசிவிட்டு வந்திருந்தாலும்.. பாரதியின் மூளை என்னவோ உள்ளே ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தது.. படி இறங்கியவளின் முகத்தில் அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! மகனின் நிலை பற்றி பலவிதமான சிந்தனைகள்.. அடுத்து என்னென்ன செய்வது என்பது மாதிரியான கேள்விக்குறிகள்.. அவசர அவசரமாக ஆனால் மிக தெளிவாக எடுக்கப்பட்ட சில முடிவுகள்..!! படியிறங்கி கீழ் தளத்திற்கு வந்த பாரதி..

“பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!”

என்று இன்னமும் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த மாமனாரை.. தற்காலிகமாக அலட்சியம் செய்தாள்..!! சுவற்றோடு ஒட்டியிருந்த அந்த டெலிஃபோனைத்தான் முதலில் அணுகினாள்.. டயல் செய்துவிட்டு ரிஸீவரை காதில் பொருத்திக்கொண்டாள்.. அடுத்த முனையில் இருந்து ‘ஹலோ’ ஒலித்ததும்..

“ஆங்.. பவானி.. அத்தை பேசுறேன்மா..!!” என்றாள்.

அதன்பிறகு வந்த ஒருவாரம்.. பத்து நாட்கள்..!! அசோக் முழுமையாக மாறிப்போனான் என்று சொல்ல இயலாது.. ஆனால் குறிப்பிடத் தகுந்த மாதிரியாக சில மாற்றங்கள் அவனிடம்..!! அவனுடைய நினைவு எப்போதும் மீராவைத்தான் சுற்றி வந்தது.. அவளை இழந்துவிட்ட துக்கம் அவன் மனதில் எப்போதுமே உறைந்து கிடந்தது.. ஆனால்.. முன்பு மாதிரி கழிவிரக்கத்தில் மூழ்கி அவன் சோர்ந்திருக்கவில்லை.. புகையினாலும், மதுவினாலும் அவனது சிந்தனையை சிதைத்துக் கொள்ளவில்லை..!! மாறாக.. உரம் கொண்டதென நெஞ்சினை மாற்றிக்கொள்ள முயன்றான்.. உடைந்து போய்விடக்கூடாதென உறுதியாய் இருந்தான்..!!

மீராவை கண்டுபிடிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று.. திரும்ப திரும்ப யோசித்து பார்த்தான்..!! மீராவுடனான பழைய நினைவுகளை எல்லாம்.. மீண்டும் மீண்டும் அசை போட்டான்.. ஏதாவது வழி தென்பட்டுவிடாதா என ஏங்கினான்..!! எந்த ஒரு வழியும் அவனது புத்திக்கு புலப்படவில்லை.. அதற்காக அவன் தளர்ந்து போய் விடவும் இல்லை.. மறுபடியும் வேறொரு நினைவை அசைபோட்டு.. அவனது முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்தான்..!!

அம்மா உதிர்த்த அறிவுரைகள் அவனுக்கு உபயோகமானதாய் இருந்தன..!! அத்தனை நாள் காதலுக்கு உண்மையாய் இருந்தவன்.. அதன்பிறகு .. உண்மையான அந்தக்காதல் மீது உறுதியான நம்பிக்கையும் வைக்க நினைத்தான்..!! வாழ்க்கையில் இடர்பாடுகளை சந்திக்க நேருகிற வறியவர்கள்.. ‘எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்’ என்று.. கடவுள் மேல் பாரத்தை போடுவது போல.. ஆசைக்காதலியின் அழகுமுகம் காணத்துடித்த அசோக்.. ‘எங்க காதல் எங்களை சேர்த்து வைக்கும்’ என்பது மாதிரி.. காதல் மேல் தனது பாரத்தை போட்டான்..!!

பாரதி அன்று பேசுகையில்.. ‘அவளை கண்டுபிடிச்சு.. அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து..’ என்கிற ரீதிரில்.. ஒரு எதிர்கால கனவுடன் அவன் மனதில் நம்பிக்கையூட்ட முயன்றவிதம்.. அசோக்கை பொறுத்தவரையில் மிக சக்தி வாய்ந்ததாக அமைந்தது..!! அவனது மனம் சோர்ந்து போக ஆரம்பிக்கும் போதெல்லாம்.. அம்மா சொன்ன அந்த வார்த்தைகளையே அசோக் நினைவுறுத்திக் கொள்வான்..!! சட்டென்று ஒரு எதிர்கால கனவில் மூழ்க ஆரம்பித்து விடுவான்.. அந்த கனவு முழுக்க மீராவே நிறைந்திருப்பாள்..!!

திடீரென இவன் எதிரே வந்து நிற்பாள்.. திணறிப்போகிற மாதிரி இறுக்கி அணைத்துக் கொள்வாள்.. ‘உன்னை பாக்காம என்னால இருக்க முடியலடா’ என்று இவன் மார்பில் முகம் புதைத்து அழுவாள்..!! கன்னங்களில் வழிகிற நீர் துடைத்து இவன் கனிவுமொழி பேச.. கண்கள் இரண்டும் திறந்து வைத்து அவள் காதலாக பார்ப்பாள்..!! காதல்க்கதிர்வீச்சு நடத்துகிற அந்த காந்தப்பார்வையில்.. இவன் கசிந்துருகி, கவர்ந்திழுக்கப்பட்டு, கவனம் தடுமாறி நிற்கையில்.. அவள் இமைகளை மூடிக்கொள்வாள்.. இதழ்களை திறந்து வைப்பாள்..!! ‘அமுதம் பருகிக்கொள்.. அதனையே பகிர்ந்தும்கொள்..’ என.. அசைவேதுமின்றியே அழைப்பு விடுப்பாள்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.