எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“எங்களுக்கு.. அந்தப்பொண்ணைவிட நீ ரொம்ப முக்கியம்டா.. அதைத்தவிர வேற எதுவும் எனக்கு சொல்ல தோணல..!!”

மணிபாரதி பின்னால் திரும்பிப்பார்த்து சொன்னார்..!! அப்பா சொன்னதைக்கேட்ட அசோக் சில வினாடிகள் அமைதியாக இருந்தான்.. அப்புறம் திடீரென.. அழுகை கலந்திட்ட குரலில் வெடித்து சிதறினான்..!!

“அப்போ அவ்ளோதான்ல..?? எல்லாமே போச்சுல.. எல்லாமே என்னாலதான் போச்சுல..?? இந்தக்குடும்பம் காதல் மேல வச்சிருந்த நம்பிக்கை.. எல்லாமே என்னால நாசமா போச்சுல..??”

“ஐயோ.. அப்படி இல்லடா..!!” பாரதி மகனை அணைத்துக்கொண்டாள்.

“அப்படித்தான்..!! நான்தான் தோத்துட்டேன்ல..?? போச்சு.. எல்லாம் போச்சு..!!”

அசோக் புலம்ப ஆரம்பித்தான்.. ‘இல்லடா.. இல்லடா..’ என்றவாறு, பொங்கி வருகிற அழுகையுடன் அவனை ஆறுதல் படுத்த முயன்றாள் பாரதி..!!

வீடு வந்து சேர்ந்தது.. தாத்தாவும், பாட்டியும் பாவமாக பார்த்துக்கொண்டிருக்க.. அவனை அழைத்து சென்று அவனுடைய அறையில் படுக்க வைத்தனர்..!! அவன் தூங்கிப் போகும் வரையில், பாரதி அவனருகே அமர்ந்து, அவனுக்கு தலைகோதி விட்டுக்கொண்டிருந்தாள்..!! பிறகு கீழே வந்து.. அசோக்கின் எதிர்காலம் பற்றியும்.. அவனிடம் அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைககளை பற்றியும்.. மற்றவர்களிடம் பேசினாள்..!! அசோக் கிடைத்துவிட்ட செய்தியை.. சங்கீதா கிஷோருக்கு முன்பே தெரிவித்துவிட்டிருந்தாள்..!! அனைவரும் தூங்க செல்ல நள்ளிரவு ஒருமணிக்கு மேல் ஆகிவிட்டது..!!

அடுத்த நாள் காலை ஏழு மணி..

வீடு மட்டுமல்ல.. வெளியுலகமும் மிக அமைதியாக இருந்தது..!! எங்கேயோ ‘கா.. கா.. கா..’ என்று கரைகிற காக்கையின் சப்தம் மட்டும் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது..!! பாரதி சமையலறையில் இருந்தாள்.. முந்தினநாள் இரவு நெடுநேரம் விழித்திருந்ததால், வீட்டில் அனைவரும் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தனர்..!! பாரதியுமே.. உறக்கம் இழந்த, அழுது அழுது சோர்ந்து போயிருந்த விழுகளுடன்.. வேலை செய்துகொண்டிருந்தாள்.. பாத்திரங்களை கழுவி அடுக்குகிற வேலை..!! அப்போதுதான்..

“பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!” உள்ளறையில் இருந்து தாத்தாவின் குரல் சற்றே ஈனஸ்வரத்தில் ஒலித்தது.

“என்ன மாமா..??” பாரதியின் பதில் அவருடைய காதில் விழவில்லை போலிருக்கிறது.

“பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!! செத்த இங்க வாயேன்..!!” என்று மீண்டும் அழைத்தார்.

“இருங்க மாமா.. இதோ வந்துட்டேன்..!!”

பெருமூச்சொன்றை எறிந்த பாரதி.. செய்துகொண்டிருந்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு.. சமையலறையில் இருந்து வெளியேறினாள்..!! நடந்து சென்று நாராயணசாமியின் அறையை நெருங்கியவள்.. கதவை உட்பக்கமாய் தள்ளி..

“என்ன மாமா..??” என்றாள்.

“காலாங்காத்தாலேயெ காலு ரெண்டும் கொடைச்சல் குடுக்குதுமா.. எந்திரிக்கவே முடியல.. அந்த தைலத்தை கொஞ்சம் எடுத்து தாரியா..??”

“ம்ம்.. சரி மாமா..!!”

சொல்லிவிட்டு பாரதி முன்னறைக்கு வந்தாள்..!! டைனிங் ரூமுக்குள்ளேயே.. ரெஃப்ரிஜரேட்டரை ஒட்டியிருக்கும் அந்த அலமாரியில்தான்.. மருந்துப்பொருட்களை அவர்கள் அடைத்து வைத்திருப்பது..!! அந்த அலமாரியை நோக்கித்தான் பாரதி இப்போது சென்றாள்..!! அலமாரி திறந்து.. தாத்தா கேட்ட அந்த தைல சீசாவை எடுத்துக்கொண்டாள்..!! அலமாரியை மூட சென்றபோதுதான்.. எதேச்சையாக அதை கவனித்தாள்..!!

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் மணிபாரதி தனது எழுத்துல வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார்.. இரவெல்லாம் கண்விழித்து கதை எழுதியாகவேண்டிய கட்டாயம்..!! அது அவருடைய உடல்நிலையை பாதித்தது.. இன்சோம்னியா எனப்படுகிற தூக்கமின்மை வியாதியை கொடுத்தது..!! அடிக்கடி அந்த வியாதியால் அவர் அவதிப்படுகிறபோது.. உறக்கத்தை வலுக்கட்டாயமாக வரவழைப்பதற்காக.. தூக்க மாத்திரைகளை அவர் உட்கொள்வது வழக்கம்..!! அந்த தூக்க மாத்திரைகள் அடைத்து வைத்திருக்கும் டப்பாவை.. இப்போது அலமாரியில் காணவில்லை..!!!!

அதை கவனித்ததுமே பாரதிக்கு திக்கென்று இருந்தது..!! அவ்வளவு நேரம் களைப்பாக இருந்த அவளுடைய மூளை.. இப்போது சுறுசுறுப்பாக எதையோ யோசிக்க ஆரம்பிக்க.. சுருக்கென்று அவளுடைய புத்தியில் அந்த எண்ணம் தைத்தது..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.