எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“ஒருவேளை.. ஒருவேளை..”

நினைத்துப் பார்க்கும்போதே அவளுக்கு குலைநடுங்கிப் போனது..!! தைல சீசாவை அலமாரியிலேயே போட்டுவிட்டு.. சரக்கென திரும்பி ஓடினாள்.. படிக்கட்டை அடைந்தவள் விழுந்தடித்துக்கொண்டு தடதடவென மேலேறினாள்..!! அவளுடைய முகத்தில் அப்படி ஒரு பதற்றம்.. உடலில் அப்படி ஒரு நடுக்கம்.. மகனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாதே என்று அப்படி ஒரு பயம்..!!

“இந்த மீரா சரியான லூஸு மம்மி..!!”

“ஹாஹா.. ஏன்டா அப்படி சொல்ற..??”

“பின்ன என்ன மம்மி.. அடிக்கடி ஏதாவது லூஸுத்தனமா உளர்றா..!! இன்னைக்கு அவ கண்டுபிடிப்பை பாரேன்..!!”

“என்ன..??”

“சூசயிட் பண்ணிக்கிறதுக்கு தூக்க மாத்திரைதான் பெஸ்ட் ஆப்ஷனாம்..!! மத்ததெல்லாம் பெயின்ஃபுல்லாம்..!!”

“ஹாஹா.. கரெக்டாத்தான சொல்லிருக்குறா என் மருமக..!!”

எப்போதோ மகனிடம் பேசி சிரித்தது இப்போது பாரதியின் நினைவில் வர.. அவளுடைய இதயம் கிடந்தது குமுறியது.. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்து நின்றது..!! அழுது வடிகிற கண்களை துடைக்ககூட தோன்றாமல்.. பரபரப்பாய் படிக்கட்டு ஏறினாள்.. அசோக்கின் அறைக்கு விரைந்தாள்..!! ‘கடவுளே.. எம்புள்ளைக்கு எதுவும் ஆகக்கூடாது..’ என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்துக்கொண்டாள்..!!

ம்ம்ம்… அன்பினை ஒரு வேதியியல் வினையூக்கியுடன் ஒப்பிடலாம்.. அது மனித மனதில் ரசாயன மாற்றத்தை விளைவிக்க வல்லது.. அந்த மாற்றம் நேர்மறையானதாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.. எதிர்மறையான மாற்றமாகக்கூட இருக்கலாம்..!!

‘கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..’ என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??

அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??

காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??

அசோக்கையும் அவன் மனநிலையையும் யாருமே துல்லியமாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்..!! அவன் மீராவின் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான காதலாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்கிற அச்சுறுத்தலாலும்.. மனதளவில் தளர்ந்து போயிருந்தான்.. புத்தியளவில் குழம்பி போயிருந்தான்..!! நம்பிக்கையான வார்த்தைகளையே அவன் மனம் நாடியது.. தெளிவான வழிகாட்டலே அவன் புத்திக்கு தேவையாயிருந்தது..!! ஆனால்.. அவனுக்கு கிடைத்தது என்ன..??

ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. அசோக்கின் நண்பர்களும் சரி.. அவனது குடும்பத்தாரும் சரி.. அவனிடம் அன்பு கொண்டிருந்தார்களே ஒழிய.. அவனது அவசியத்தை அறிந்துகொண்டார்கள் இல்லை..!! அவன் மீதிருந்த அன்பின் காரணமாக.. அவனது நிலையை பார்க்க சகியாமல்.. அவநம்பிக்கையான வார்த்தைகளை சிந்திவிட்டனர்..!! அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை புரியவில்லை.. அவநம்பிக்கையை ஊட்டுகிற அன்பு எப்போதுமே.. மனித மனதில் மறுதலையான மாற்றத்தையே தோற்றுவிக்க கூடும்..!! அசோக்கின் மனதிலும் அத்தகைய மாற்றமே..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.