எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

சங்கீதாவின் பேச்சைக்கேட்டு ஃபுட்கோர்ட் வந்த அசோக்கின் பெற்றோர்.. அவர்களுடைய வாழ்நாளின் மிக மோசமான காட்சியை அன்று காண நேர்ந்தது..!! ஃபுட்கோர்ட்டுக்கு வெளியே.. கொட்டுகிற மழையில்.. அவர்களுடைய மகன் யாரோ நான்கு பேருடன்.. ஒரு ரவுடி ரேஞ்சுக்கு அடிதடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்..!! போதையின் பிடியில் சிக்கியிருந்த அவனது உடலும் மூளையும் அவனுடன் ஒத்துழைக்காமல் போக.. மற்ற நான்குபேராலும் அவனை எளிதில் சுற்றிவளைத்து அடித்து வீழ்த்த முடிந்தது..!!

“ஐயோ.. விடுங்கப்பா.. எம்புள்ளையை விட்ருங்க..!!” மணிபாரதி ஓடிச்சென்று அவர்களை தடுக்க, அவரை மதியாமல் தள்ளிவிட்டு,

“குடிச்சுட்டு வந்து சலம்பல் பண்ணா.. சும்மா விட சொல்றியா..??” என்றவாறே அசோக்கை அடித்து உதைப்பதை தொடர்ந்தனர்.

பாரதியும் சங்கீதாவும் கூட அலறியடித்து ஓடிச்சென்று அவர்களை தடுக்க முயன்றார்கள்..

“வேணாம்பா.. விட்ருங்கப்பா..” கெஞ்சினாள் பாரதி.

“அண்ணாஆஆ..!!” அலறினாள் சங்கீதா.

அவர்களுடைய முயற்சி வெற்றிபெற சிறிது நேரம் பிடித்தது..!! இறுதியாக.. நான்கு பேரும் சேர்ந்து அசோக்கை தூக்கி வீச.. நடுரோட்டில் சென்று மல்லாந்து விழுந்தான் அசோக்.. அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் கொட்டியது..!! அந்த ரத்தம்.. சடசடவென முகத்தில் அடித்து தெறிக்கிற மழைநீருடன் கலந்து.. கன்னம் வழியாக ஓடியது..!!

“அசோக்க்க்..!!!” கதறியவாறே ஓடிவந்த பாரதி.. மகனை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டாள்..!!

மூன்று பெரும் கைத்தாங்கலாக அழைத்து சென்று அசோக்கை காரில் ஏற்றினார்கள்.. கார் கிளம்பியது.. காரின் வைப்பர்கள் தங்களது ‘தடக் தடக்’ ஓசையை தொடர்ந்தன..!! மணிபாரதி காரை மிதமான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தார்.. அவருக்கு அருகே அமர்ந்திருந்த சங்கீதா, அடிக்கடி திரும்பி பின்சீட்டை பார்த்துக்கொண்டாள்..!! பின்சீட்டில் பாரதியும்.. அவள் மார்பில் அசோக்கும்..!! பாரதி தன் ஈரமான புடவைத்தலைப்பால்.. தனது கண்களில் வழிந்த நீரை துடைக்காமல்.. மகனின் நெற்றியில் வழிந்த உதிரத்தை துடைத்தெடுத்தாள்..!!

“ரொம்ப வலிக்குதாயா..??” கனிவாக கேட்டாள்.

“ஹ்ஹ.. இது என்ன மம்மி வலி..?? அவ என்னை விட்டுட்டு போயிட்டான்னு தெரிஞ்சப்போ வலிச்சதே ஒரு வலி.. அதுக்குலாம் முன்னாடி இது ஒன்னும் இல்ல மம்மி..!!” அசோக் சொல்ல பாரதிக்கு அழுகை வெடித்து கிளம்பியது.

“ஐயோ.. எம்புள்ளை..!!!” என்று அவனை மார்போடு இறுக்கிக் கொண்டாள்.

“நீ சொன்னமாதிரிதான் எல்லாம் செஞ்சேன் மம்மி.. நல்லபுள்ளையா நடந்துக்கிட்டேன்..!! ரொம்ப அன்பானவன்னு அவளுக்கு புரியவச்சேன்.. கண்கலங்காம அவளை பாத்துப்பேன்னு கான்ஃபிடன்ஸ் குடுத்தேன்..!! அப்புறமும் ஏன் மம்மி என்னை விட்டுட்டு போயிட்டா..??”

அசோக்கின் ஏக்கம் பாரதியின் இதயத்தை பிசைவதாக இருந்தது..!! மகனுக்கு காதலென்ற மகிழ்ச்சியை கொடுக்க முயன்று.. இப்போது அவனையே இழந்துவிடுவோமோ என்பது மாதிரியான பயம்.. அவளது இதயத்தை வந்து கவ்விக்கொண்டது..!! அந்த பயம்.. மகன் மீதிருந்த அளவுகடந்த அன்பு.. அவனுடைய பரிதாபநிலையை பார்க்க சகியாமை.. அடுத்தவர்கள் செய்த தவறையே அவளையும் செய்ய தூண்டின..!!

“வேணாய்யா.. அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்துடு..!! இந்தப்பாழாப்போன காதலே உனக்கு வேணாம்..!! எனக்கு எம்புள்ளை வேணும்.. எம்புள்ளை மட்டும் எனக்கு போதும்..!!” சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவ்வளவுதான்..!! அசோக் அப்படியே நொறுங்கிப் போனான்.. அம்மாவின் வாயிலிருந்தே அந்தமாதிரி வார்த்தைகளை கேட்போமென்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்த்திரவில்லை..!! விக்கித்துப் போனவனாய் பாரதியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்..!!

“ஆமாண்ணா.. அம்மா சொல்றதுதான் கரெக்ட்..!! அண்ணியை…” என்று ஆரம்பித்த சங்கீதா சற்றே நிறுத்தி,

“அ..அந்தப்பொண்ணை மறந்துடுண்ணா..!!” என்று முடித்தாள்.

தங்கையை ஏறிட்டு ஒருசிலவினாடிகள் வெறுமையாக பார்த்த அசோக்.. பிறகு அப்பாவிடம் திரும்பினான்..!!

“நீங்க எதுவும் சொல்லலையா டாடி..??” என்று கேட்டான்.

“எ..என்ன சொல்ல..??” மணிபாரதி காரை ஓட்டிக்கொண்டே தளர்வான குரலில் கேட்டார்.

“ஏதாவது சொல்லுங்க டாடி..!! அவ ஒரு ஃப்ராடு.. அவளை மறந்துடு.. வேற யாரையாவது கட்டிக்கோ.. சந்தோ…ஷமா இருக்கலாம்.. ஆகாசத்தை கிழிக்கலாம்.. மலையை புடுங்கலாம்..!! ஏதாவது சொல்லுங்க டாடி..!!”

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.