எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

“ஹேய்.. அந்த விழுப்புரம் பார்ட்டி சொன்னேன்ல.. அவங்க அடுத்த வாரம் வீட்டை பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்க..!!”

“ஓ..!!”

“வீடு புடிச்சிருந்தா.. உடனே ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்க..!!”

“ம்ம்..!!”

“ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதுன்னா.. நீ உடனே வீட்டை காலி பண்ற மாதிரி இருக்கும்..!!”

மனோகர் அந்த மாதிரி கூலாக சொல்ல, மீரா இப்போது முகத்தை சரக்கென திருப்பி அவனை முறைத்தாள். சற்றே வெப்பம் தகிக்கிற குரலில் சொன்னாள்.

“உடனேலாம் என்னால முடியாது.. ஒருமாசமாவது எனக்கு டைம் வேணும்..!!”

அவளுடைய முகத்தில் தெரிந்த ஆவேசத்தில் மனோகர் சற்றே மிரண்டு போனான் என்றுதான் சொல்லவேண்டும். ஒரிருவினாடிகள் திகைத்தவன், உடனடியாக தனது குரலையும் முகத்தையும் குழைவாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“ஓகே ஓகே.. ரிலாக்ஸ்..!! ஒரு மாசந்தான.. இட்ஸ் ஓகே.. டேக் யுவர் டைம்..!!”

மதுசூதனன் நீலப்ரபாவுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறார்.. மீராவுடைய வாழ்வே துயரமாகிப் போக முக்கிய காரணமாயிருந்திருக்கிறார்.. அதேநேரம்.. அவர் ஒருசில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்..!! பல வருடங்களுக்கு முன்பே இந்த சிந்தாதிரிப்பேட்டை வீட்டை நீலப்ரபாவின் பெயரில் எழுதி வைத்திருந்தார்.. அதேமாதிரி.. அவர் பக்கவாதம் வந்து படுத்துக்கிடந்த காலத்திலும் கூட.. மாதச்செலவுக்கான பணம் நீலப்ரபாவுக்கு சென்று சேர்ந்துவிடுமாறு பார்த்துக்கொண்டார்..!! சுருக்கமாக சொன்னால்.. வாழ்க்கையை கெடுத்திருந்தாலும் வசதியை கொடுத்திருந்தார்..!!

அவருடைய மரணத்திற்கு பிறகு.. மாமனாரின் சொத்துக்களை கண்காணிக்க ஆரம்பித்த மனோகருக்கு.. இந்த சிந்தாதிரிப்பேட்டை வீடு கண்ணை உறுத்த ஆரம்பித்தது..!! அந்த வீட்டின் மார்க்கெட் மதிப்பு வேறு.. அவனுடைய மனதை உறுத்தியது..!! கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, ஆசை நாயகிக்கும் அவள் வாரிசுக்குமா என.. ஆரம்பத்ததில் இருந்தே அவனுக்குள் ஒரு எண்ணம்.. எப்படியாவது அந்த சொத்தை அபகரித்து விடவேண்டும் என்பது மாதிரியான ஒரு திருட்டு எண்ணம்..!! நீலப்ரபாவும் திடீரென தவறிவிட.. மீரா தனியாளாகிப் போய்விட.. அவனது திருட்டு எண்ணம் திண்ணமாகிப் போயிற்று..!!

ஏதேதோ தகிடுதத்தம் செய்து.. பொய்யாக ஒரு போலிப்பத்திரம் தயாரித்தான்..!! கைவிளங்காத மாமனார் எழுதிய கடைசி உயில் இதுதான் என சத்தியம் செய்தான்.. தொழிலில் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, அந்த வீட்டை விற்றால்தான் சரிப்படும் என்று சப்பைக்கட்டு கட்டினான்..!!

புவனா நல்லவள்தான்.. ஆனால் அப்பாவி.. புருஷனை எதிர்த்து செயல்படுகிற துணிவில்லாதவள்..!! அதேபோல.. மீராவுக்கும் அப்பாவின் சொத்து மீது சிறிதும் அக்கறை கிடையாது.. உரிமை பேசி விவாதம் செய்யவெல்லாம் அவள் விரும்பவில்லை..!! எல்லாவற்றையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட மனோகர்.. அந்த வீட்டை அவனது பிடிமானத்துக்குள் கொண்டுவந்துவிட்டான்..!! இப்போது.. பேச்சை மாற்றும் விதமாக மீராவிடம் சொன்னான்..!!

“ஆங்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!”

“என்ன..??”

“அடுத்த வாரம் அவங்க வீட்டை பாக்க வர்றப்போ.. நீ வீட்ல இருக்க வேணாம்.. கொஞ்ச நேரம் எங்கயாவது வெளில போய் சுத்திட்டு வா..!! எதுக்கு சொல்றேன்னு புரியுதா..??”

“……………………”

மனோகர் சொல்ல வருவது புரிந்து மீரா அவனையே முறைத்துக்கொண்டிருக்க, அவன் அவளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.

“அவங்கபாட்டுக்கு வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. உன்னைப்பத்தி ஏதாவது கேட்பாங்க.. யாரு,என்ன,ஏதுன்னு..!! என்னாலயும் ரொம்ப நேரம் எதுவும் சொல்லாம கண்ட்ரோல் பண்ணிட்டு முடியாது.. ஏதாவது வாயை விட்ருவேன்..!! That won’t be nice.. ok..?? I just want to avoid that..!!”

“ம்ம்.. புரியுது..!!”

மீரா இறுக்கமான குரலில் அமைதியாக சொல்ல.. இப்போது மனோகரின் முகத்தில் ஒருவித ஏமாற்றம்..!! அவன் ஏதோ எதிர்பார்த்திருந்தது போலவும்.. அதற்கு எதிர்ப்பதமான ரியாக்ஷனை மீரா வெளிப்படுத்தியது போலவும்.. அவனது முகபாவனை இருந்தது..!! ஒரு சில வினாடிகள் மீராவின் முகத்தையே கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தவன்.. பிறகு திடீரென மென்மையான குரலில் கேட்டான்..!!

“இந்த வீடு உனக்கு ரொம்ப பிடிக்குமா..??”