எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

ஒருபக்கம் அவளுடைய மனம் அவ்வாறு பதறிக்கொண்டிருந்தாலும்.. அதே மனதின் இன்னொரு பக்கத்தில் ஒரு பரிதாபகரமான ஏக்கம்..!! அசோக்கை பிரிந்த இந்த நான்கைந்து நாட்களில்.. அவளுடைய மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கிற ஒரு ஏக்கம்தான் அது.. இப்போது அவனை நேரிலேயே காண நேர்ந்ததும்.. அந்த ஏக்கத்தின் அளவு எக்கச்சக்கமாக ஏறிப்போயிருந்தது..!!

‘ஏன்..?? ஏன் இந்த தவிப்பு..?? எதற்காக இந்த துயரம்..?? அப்படி என்ன உனக்கு ஒரு பிடிவாதம்..?? பிறந்தது முதலாய் இருண்டு போயிருந்த உன் வாழ்க்கையை.. பிரகாசமாக மாற்றக்கூடிய பகலவன் ஒருவன்.. படிக்கட்டில் இறங்கி வருகிறான் பார்..!! உன்னை விட்டு விலகேன் என்று.. உன் வீட்டு வாசலிலேயே வந்து நிற்க போகிறான் பார்..!! உனது பிடிவாதம் அகற்று.. ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொள்.. அணைத்துக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அழு.. கண்ணீருடனே உன் கதையை அவனுக்கு உரைத்திடு.. ‘இதற்காகத்தான் ஓடி ஒளிந்தாயா பைத்தியம்?’ என்றவன் புன்னகைக்கையில்.. அவனுடைய முகத்தில் ஆயிரம் முத்தங்கள் வைத்திடு..!! போ.. அவனுடன் இணைந்து விடு.. நீயும் வேதனையில் உழன்று, அவனையும் வெறுமனே அலைக்கழிக்காதே..!!’

மீராவுடைய ஒருமனது.. அந்தமாதிரி காதலனுடன் கலந்துவிடலாமா என ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டிருக்கிற வேளையிலே.. அவளுடைய இன்னொரு மனது படக்கென்று விழித்துக்கொண்டது.. கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி, அடிக்கடி அவளை திட்டி தீர்க்கிற அந்த மனது..!!

‘அடச்சீய்.. வெட்கங்கெட்டவளே..!! புத்தி போகிறது பார்..!! அணைத்துக்கொள்ளப் போகிறாளாம்.. அழுதுபுலம்ப போகிறாளாம்.. அறிவில்லை உனக்கு..?? அவனுடைய அன்பு ஆழமானதுதான்.. ஆழமான அந்த அன்பினால்த்தான் உனக்காய் இப்படி அலைந்து திரிகிறான்.. ஆனால்.. அந்த அன்பிற்கு உரியவளாக உனக்கென்ன அருகதை இருக்கிறது..?? நீ கற்பிழந்த கதையைச் சொல்லியா அவனிடம் இருந்து காதலைப் பெற்றாய்..?? அவனிடம் நீ சொன்னதெல்லாம்.. வாய் நிறைய புழுகும்.. வண்டி வண்டியாய் பொய்களும்தானே..?? அவன் உன்னை கண்மூடித்தனமாய் காதலிக்கிறான் என்றதும்.. அவனது மாசற்ற அந்த காதலை.. உன் வசதிக்கேற்ப உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா..?? ச்சீச்சீய்..!! எந்த மாதிரியானதொரு சந்தர்ப்பவாதியடி நீ..?? வேதனை தாளவில்லையென வெட்கம் துறந்திட துணிந்தாயோ..?? மகிழ்வான வாழ்வுக்கென மனசாட்சி கொன்றிட நினைத்தாயோ..??’ – அந்த மனது அவ்வாறு சாட்டை சுழற்ற..

‘இல்லை.. நான் அப்படிப்பட்டவள் இல்லை..!!’ – அடுத்த மனது அஞ்சி நடுங்கியது..!!

‘சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதலில் இதற்கு பதில் சொல்.. உனது காதலை அவனுடைய கண்ணைப் பார்த்து சொல்லியே தீருவேன் என்று அடம்பிடித்தாயே.. அதேபோல் உனது கற்பை தொலைத்த கதையையும் அதே கண்களை பார்த்து உரைத்திடும் தைரியம் இருக்கிறதா உன்னிடம்..?? எப்படி சொல்வாய்.. எங்கிருந்து ஆரம்பிப்பாய்.. எதையெல்லாம் சொல்லிவிடுவதாக எண்ணம் உனக்கு..?? உனது கதையைக் கேட்டு.. அவனது கண்களில் அனிச்சையாய் ஒரு கலக்கம் ஏற்பட்டாலும்.. அதைத் தாங்கிக்கொள்கிற திறனிருக்கிறதா உன்னிடம்..??’

‘இல்லை.. சத்தியமாக இல்லை..!!’

‘அப்புறம் எப்படி சொல்லப் போகிறாயாம்..??’

‘முடியாது.. என்னால் முடியவே முடியாது..!!’

எதிர்பாராத சூழ்நிலை.. எண்ணங்களில் ஏற்பட்ட பிறழ்வு..!! மீராவுடைய மனம்.. அதிர்ச்சி, குழப்பம், பிரமிப்பு, பெருமிதம், காதல், ஏக்கம், கழிவிரக்கம் என.. விதவிதமான முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொண்டு.. மீராவை நிலைகுலைந்து போக செய்தன..!! தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்.. குழப்பமான எண்ணங்களை அடக்கி.. ஒரு தெளிவான முடிவெடுக்க முயற்சி செய்தாள்..!!

‘இல்லை.. அவன் என்னை பார்க்க கூடாது.. அவன் என்னை பார்க்கிறானோ இல்லையோ.. நான் இனி அவனை பார்க்கவே கூடாது.. என் மனதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. ‘அணைத்துக்கொண்டு அழு போ’ என்று என்னையே முடுக்கி விடுகிறது.. அவனை எதிரே பார்த்தால் என் வைராக்கியம் உடைபடப்போவது உறுதி..!! அது நடக்கக்கூடாது.. அவன் வரும்போது நான் இங்கிருக்க கூடாது.. அவன் வந்து எழுப்பப்போகிற அழைப்புமணி ஓசை என் காதில் விழவே கூடாது..!!’

“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…”