எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

அந்த குரலை கேட்டதுமே மூன்று பேரும் உடனடியாய் திரும்பி, வீட்டுக்குள் பார்வையை வீசினார்கள். அங்கே கான்ஸ்டபிள் கனகராஜன் நின்றுகொண்டிருந்தார். இவர்கள் திரும்பிப் பார்த்ததும்,

“ஸாருக்கு தெரிஞ்ச பையன்தான்.. உள்ள அனுப்பு..!!” என்றார்.

அசோக் இப்போது தனசேகரனை ஏறிட்டு ஏளனமாய் ஒரு பார்வையை வீசினான். அதற்கு மேலும் அவருடைய அனுமதி தேவையில்லை என்பதை உணர்ந்தவன், அவரது பதிலுக்காக காத்திராமல் அவரை கடந்து சென்றான். வீட்டுக்குள் நுழைந்தவன், அங்கு நின்றிருந்த கனகராஜனுடன் சேர்ந்துகொண்டான். அவர் திரும்பி உள்ளறைக்கு நடக்க, அசோக் அவரை பின்தொடர்ந்தான்.

“என்னய்யா.. ஃபோன் நம்பரை வச்சு, அந்த பொண்ணு அட்ரஸ கண்டுபுடிச்சிட்டீங்களா..??” கனகராஜனின் குரலில் ஒருவித எள்ளல் தொனித்தது.

“அ..அதைப்பத்தி பேசுறதுக்குத்தான்.. ஸார் வர சொல்லிருக்காரு..!!” அசோக் அடக்கத்துடனே அவருக்கு பதில் சொன்னான்.

“ஹ்ம்ம்..!! உன்னை சொல்றதா.. இல்ல.. உனக்கு ஒத்து ஊதுற அவரை சொல்றதான்னு தெரியல..!! அந்தப்பொண்ணு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கியே.. உன் லவ்வு மேட்டர்லாம்.. உன்னை பெத்து வளத்தவங்களுக்கு தெரியுமா..??”

“ம்ம்.. தெரியும்..!! அவங்களுக்கும் தெரியும்.. அவங்களை பெத்து வளத்தவங்களுக்கும் தெரியும்..!! ஏன் கேக்குறீங்க..??”

அசோக் அவ்வாறு இயல்பாக கேட்க.. இப்போது கனகராஜனின் முகத்தில் ஒரு பெருத்த ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது..!! காதல் என்ற பெயரில்.. வீட்டை ஏமாற்றுகிற விடலைப்பையன் என்பது.. அசோக்கைப் பற்றிய அவரது அனுமானமாக இருந்திருக்கும் போலிருக்கிறது..!!

“ஒ..ஒன்னுல்ல.. சு..சும்மா கேட்டேன்..!!” என்று தடுமாற்றமாய் சமாளித்தார்.

வெளிப்புற கட்டமைப்பை போல.. அந்த வீட்டின் உட்புற வடிவமைப்பும்.. அழகும் ஆடம்பரமும் மிகுந்ததாகவே இருந்தது..!! வெல்வெட் துணியாலான தரைவிரிப்புகள்.. தேக்கு மரத்தாலான அறைகலண்கள்.. இத்தாலித்தோல் போர்த்திய சாய்விருக்கைகள்.. கண்ணாடி ஸ்படிகம் பொதிந்த சாண்ட்லியர் விளக்குகள்..!! ஏலத்தில் வாங்கப்பட்ட எழில்மிகு அரியவகை ஓவியங்கள்.. உட்புற சுவர்களை அலங்கரிக்க உபயோகமாகியிருந்தன..!! அறைக்குள் இருந்த அத்தனை பொருட்களுமே.. அந்த வீட்டு உரிமையாளனின் செல்வச்செழிப்பை செப்பின.. பணச்செறிவை பறைசாற்றின..!!

ஆனால்.. வெளிப்புறத்தைப்போல வீட்டுக்குள் அதிக ஆள் நடமாட்டம் இருக்கவில்லை..!! ஹாலில் மட்டும்.. கன்னத்தில் கைவைத்தவாறு வீட்டு வேலைக்காரியும்.. கைகளை கட்டியவாறு கார் ட்ரைவரும் நின்றிருந்தனர்..!! ஹாலை கடந்து சென்ற கனகராஜன்.. வலது புறம் இருந்த அந்த அறையை அடைந்ததும் திரும்பினார்.. திரும்பியவர் வாசலிலேயே தயங்கி நின்றுகொண்டார்..!! அவருக்கு பின்பக்கமாக வந்து சேர்ந்த அசோக்.. ஆர்வமான ஒரு பார்வையை அந்த அறைக்குள் வீசினான்.. உள்ளே கண்ட காட்சியில் உடனே அதிர்ந்துபோய்.. மூச்சை சற்றே இழுத்து பிடித்துக் கொண்டான்..!!