எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

‘இது எப்படி சாத்தியமானது..?? இவனால் எப்படி என் முன்னே மீண்டும் தோன்றிட முடிந்தது..?? ஊரும் பெயரும் உறவும் செயலுமென.. இவனிடம் நான் உரைத்தவை எவையிலும் உண்மை துளியும் இல்லையே..?? அநாதை விடுதியில் காகிதத்தை கிழித்த அந்த நொடியிலேயே.. இவன் என்னை அணுகுவதற்கு இருந்த இறுதி இணைப்பையும் துண்டித்து விட்டதாகத்தானே எண்ணினேன்..?? அப்படி இருந்தும் எப்படி இவனால் எனக்கு எதிரே வந்து நின்றிட முடிந்தது..?? முதலில்.. இது கனவில்லையே..?? கானல் நீர் போலொரு தோற்றப்போலி இல்லையே..?? கண்ணாடியில் சற்றுமுன் நின்றிட்டது போல.. கண்ணெதிரே இப்போதும் தோன்றிட்டானோ..?? தோற்றப்போலியே என்றிட்டாலும்.. உடன் தோழனும் எப்படி தோன்றிடுவான்..?? என் சித்தம் கொண்ட பித்தத்திற்கும்.. சாலமனுக்கும்தான் என்ன சம்பந்தம்..??’

“எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்..!!”

எப்போதோ அசோக்கிடம் சொன்னது.. மீராவின் மூளையில் இப்போது பளிச்சிட்டது..!! எதிரே வந்து அவன் தோன்றிட, என்ன காரணம் என்பது.. இப்போது அவளுக்கு புரிந்து போனது..!! உடனே.. ‘ப்ச்’ என்றொரு சலிப்பு அவளிடமிருந்து வெளிப்பட்டது..!! ‘Oh, Goddd’ என்றவாறு நெற்றியை பற்றி பிசைந்தாள்.. ஏன் அவ்வாறு உளறிக்கொட்டினோம் என்று இப்போது வருந்தினாள்..!! அடுத்த நொடியே அவளது இன்னொரு மனது சுறுசுறுப்பானது..

‘அப்படி இருந்தாலுமே.. இந்த மாதிரியான நெகிழ்தகடு.. இந்த சென்னை முழுதும்.. குறைந்தது இருபது இடங்களிலாவது இடம்பெற்றிருக்க வேண்டுமே..?? ஒவ்வொரு இடத்திலுமே.. இந்த நெகிழ்தகட்டினை சுற்றி.. குறைந்தது ஆயிரம் சாளரங்களாவது அமையப் பெற்றிருக்க வேண்டுமே..?? அப்புறமும் எப்படி..?? அப்படியானால்.. அப்படியானால்.. அத்தனை வீடுகளிலும் ஏறியிறங்கி.. என்னை தேடியலையப் போகிறானா..?? அப்படி அலைந்தாலுமே.. நான் அகப்படுவேன் என்பதும் அத்தனை உறுதியில்லையே..??’

என்பது மாதிரி அந்த மனது யோசிக்க யோசிக்க.. ‘Oh, Nooo’ என்றொரு திகைப்பும், பிரமிப்பும் அவளிடம்..!!

‘எத்தனை கடினமான தேடுதல் இது..?? எவ்வளவு முட்டாள்த்தனமான முயற்சி இது..?? என்னவொரு கண்மூடித்தனமான காதல் இவனது..??”

இப்போது மீராவுக்கு அசோக்கின் மீது ஒருவித கனிவும், கவலையும் வந்து இரட்டையாய் பிறந்தன..!! தூரத்தில் நின்றிருந்த அசோக்.. இவள் நின்றிருந்த ஜன்னல் பக்கமாய் கைகாட்டி சாலமனிடம் ஏதோ சொல்ல.. இவள் இங்கிருந்தே.. கண்களில் ஒருவித மிரட்சியும்.. மனதில் ஒருவித தவிப்புமாய் அவனை பார்த்தாள்..!! சுள்ளென்று அடிக்கிற நண்பகல் வெயிலுக்கு.. நெற்றியில் கொப்பளித்த வியர்வைக் ஊற்றினை.. அசோக் தனது கட்டைவிரலால் வழித்து உதற.. அதைப் பார்க்க நேர்ந்த மீராவின் மெல்லிதயத்தை.. காதலன் மீதான பரிதாபம் வந்து இப்போது கவ்விக்கொண்டது..!! அவள் கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க.. உதடுகள் தவிப்புடன் மெலிதாக தடதடக்க.. அப்படியே தளர்ந்துபோய்.. அருகில் கிடந்த அந்த வெண்ணிற நாற்காலியின் மீது.. ‘சொத்’தென்று அமர்ந்தாள்..!! ஒருகையால் வாயைப் பொத்திக்கொண்டு.. தூரத்தில் தெரிந்த அசோக்கையே பரிதாபமாக பார்த்தாள்..!!

‘ஏனடா இப்படி செய்கிறாய் என் செல்லமே..?? ஏன் இப்படி என்னை குற்ற உணர்ச்சியில் குறுகிப் போக வைக்கிறாய்..?? என்னிடம் என்ன உள்ளதென்று இப்படி என்னை தேடியலைகிறாய்..?? அப்படி என்ன உனக்கு என்மீது அந்த… மடத்தனமான காதல்..?? எதுவுமே செய்ததில்லையே.. இந்தப்பாவி எதுவுமே செய்ததில்லையே.. உன்னுடன் பழகிய அந்த நாட்களில், உன் மனதில் காதலை வளர்க்கும் விதமாய்.. இந்தப்பாவி எதுவுமே செய்ததில்லையே..?? உன்னை அடித்திருக்கிறேன்.. அலைக்கழித்திருக்கிறேன்.. அசிங்கப்படுத்தி பார்த்திருக்கிறேன்.. அவமானமூட்டி ரசித்திருக்கிறேன்..!! அதைத்தவிர.. அன்புள்ளதொரு காதலியாய்.. என்றுமே நான் நடந்து கொண்டதில்லையேடா அறிவற்றவனே..?? அப்புறமும் ஏன்..??’

மீராவுடைய ஒருமனது அந்தமாதிரி ஆதங்கத்துடன் தத்தளித்துக் கொண்டிருக்க.. அவளுடைய இன்னொரு மனது..

‘அசோக்.. என் அசோக்.. என் காதலன்..!! என் மீது எவ்வளவு பைத்தியமாய் இருக்கிறான் பார்.. என் மீது அவனிக்கிருக்கிற அன்பின் ஆழத்தை பார்.. கருணை இல்லாமல் நான் அவனை தவிக்கவிட்டு வந்தபோதிலும்.. காதல் குறையாமல் அவன் என்னை தேடியலைகிற கோலத்தை பார்..!! அசோக்.. என் அசோக்.. என் அருமைக்காதலன்..!!”

என்று அந்த ஆதங்கத்தையும் மீறி பெருமைப்பட்டுக் கொண்டது..!!

‘என் காதலை இவனுக்கு உரைத்ததுதான் தவறாய் போனதோ.. அதனால்த்தான் இவனிடம் இத்தனை தீவிரமோ..?? மனதினை திறந்து காட்டாமலேயே மறைந்து போயிருக்க வேண்டுமோ..??’ – குழப்பமாய் கேள்வி கேட்டது ஒரு மனது.

‘இல்லையில்லை.. எந்த சூழ்நிலையிலும் இவன் இதைத்தான் செய்திருக்கப் போகிறான்.. அவனது காதல் அந்த மாதிரி..!! உனது காதலை அவனுக்கு உரைத்ததிலெல்லாம் ஒன்றும் தவறில்லை.. அவனுக்கு உன்மீதான காதலில்தான் கொஞ்சமும் தளர்வில்லை போலிருக்கிறது..!!’ – தெளிவாக பதில் சொன்னது இன்னொரு மனது.

அசோக் இப்போது அந்த கட்டிடத்தில் இருந்து இறங்க ஆரம்பித்திருந்தான்.. அவன் பின்னே சாலமனும்..!! கட்டிடத்தின் பக்கவாட்டில்.. குறுக்கும் நெடுக்குமாய் ஒட்டிக்கொண்டிருந்த படிக்கட்டுகளில்.. நிதானமாக இறங்கிக்கொண்டிருக்கிற அசோக்கை.. மீராவால் இப்போது இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது..!! அவளுடைய மனதிலும் இப்போது மெலிதான ஒரு பதற்றம்..!!

‘என்ன செய்யப் போகிறான் இப்போது..?? இங்கிருக்கிற ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்ட போகிறானா..?? கதவைத்தட்டி எனது முகம் தட்டுப்படுகிறதா என்று தவிப்புடன் தேடப் போகிறானா..?? இந்த வீட்டு கதவையும் வந்து தட்டுவானோ..?? அப்படி தட்டினால் நான் என்ன செய்யட்டும்..?? வீட்டுக்குள் இருந்துகொண்டே கதவை திறக்காமல் அவனை திரும்பி போக செய்வதா.. அல்லது.. அவன் வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி முற்றிலும் அவனை தவிர்த்து விடுவதா..?? என்ன செய்யலாம்.. எதுவும் புரியவில்லையே..??’