“ம்ம்ம் … அப்பா வீட்டுக்கு வந்துட்டார் சுகன்யா … இப்ப நல்லாயிருக்கார் …ரெகுலர் மெடிசின் … நடைப்பயிற்சி .. உப்பு கம்மியா சாப்பிடணும் … டாக்டர்ஸ் இதெல்லாம் சொல்லியிருக்காங்க. இப்ப மெதுவா நடக்க ஆரம்பிச்சுட்டார்.
“
“சுந்தரி அத்தை எல்லாம் சொன்னாங்க … தைரியமா இருடி சுகன்யா … எல்லாம் நல்லபடியா நடக்கும் … இப்பத்தான் எல்லாம் அவங்க வீட்டுக்கும் தெரிஞ்சுப் போச்சு … அவங்க வீட்டுல எல்லோருக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. உங்க வீட்டுல அத்தையும், மாமாவும் உனக்கு சப்போர்ட் பண்றாங்க; இரண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க. அப்புறம் என்னடி தைரியமா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க; இப்ப நீ ஒருத்தி இங்க இருக்கே; கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேரா இங்க இருக்கப் போறீங்க அவ்வளவு தான். உனக்குன்னு ஒரு புள்ளை பொறந்தா தன்னால அந்த மல்லிகா இங்க ஓடி வராங்க” வேணி சிரித்தாள்.
“இல்லை வேணி, நான் அவங்க அம்மா மனசு நோகமாத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இருக்கேன் … பாக்கலாம்.”
“ஓ.கே. ஆல் த பெஸ்ட் … காலையில பாக்கலாம் … எனக்கும் டயர்டா இருக்கு … சாப்பிட்டு தூங்கணும் … வரேன் அத்தே … துள்ளி எழுந்த வேணியுடன், சுகன்யாவும் வெளியில் வந்தாள்.
“வேணி, இந்த ஜீன்ஸ்ல நீ இருக்கறதை, உங்காள் பார்த்தாரா …”
“ஏன் …”
“சும்மா சொல்லக்கூடாதுடி … இந்த காட்டன் ஜீன்ஸ், குர்த்தாவிலே சூப்பரா சினேகா மாதிரி இருக்கேடி நீ … ஃபிட்டிங் உனக்கு பர்ஃபெக்ட்டா இருக்கு … நீ தூங்கணுங்கறே … பத்து நாளா வேற நீ இங்கே இல்ல … அவரு எங்க உன்னைத் தூங்க விடப்போறாரு … அதைச்சொன்னேன்… ஆல் த பெஸ்ட் அண்ட் குட் ட்ரீம்ஸ்” சுகன்யா அவள் காதில் கிசுகிசுத்தாள்.
“என்ன பண்றதுடி; பஸ்ல வந்தது உடம்பு ரொம்ப அலுப்பா இருக்குடி … விட்டா இங்கேயே இப்படியே தூங்கிடுவேன்; ஆனா இந்த மனசு இருக்கே, அது பைத்தியம் புடிச்சு அலையுது என் புருஷனோட நெருக்கத்துக்காக; என் வீட்டுல நாலு நாள் நிம்மதியா இந்த நெனப்பு இல்லாம இருந்தேன்; அதுக்கு மேல என்னால முடியலடி; அவனும் பாவம் … ஏங்கிப் போயிருக்கான்ம்பா … எல்லாத்துக்கும் மேல அவனை கட்டிபுடிக்கலன்னா என்னாலயும் இன்னைக்கு நிம்மதியா தூங்க முடியாது; அதனாலதான் நான் உங்கிட்ட கூட சரியா பேசாம கீழே ஒடறேன்” கண்ணை சிமிட்டிக்கொண்டே கீழே ஒடினாள் வேணி.
“கண்ணு சுகா, யார் கிட்ட வந்ததுலேருந்து போன்ல பேசிகிட்டு இருக்கேம்மா, வந்து ஒரு வாய் சாப்பிடும்மா; காலையிலேருந்து சாப்பிடாமா கூட அலைஞ்சுட்டு வந்திருக்கே” சுந்தரி தட்டில் சாதத்தை போட்டுவிட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.
“இதோ வந்துட்டேம்மா … கோபலன் சார் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேம்மா … நீ படுத்துக்கோ … சாப்பிட்டுட்டு எல்லாத்தையும் நான் ஒழிச்சி போட்டுடறேன்.”
“அம்மா, வாழைக்காய் பொறியல் நல்லா இருந்ததும்மா … மாமா போறதுக்கு முன்னாடி சாப்பிட்டாரா?” லைட்டை அணைத்துவிட்டு அம்மாவின் பக்கத்தில் கட்டிலில் படுத்தாள் சுகன்யா.
“ஆமாண்டி … நீ வர்றதுக்கு முன்னேயே அவன் அவசர அவசரமா ரெண்டு வாய் அள்ளிப் போட்டுகிட்டான்” சுந்தரி எழுந்து கவிழ்ந்து படுத்திருந்த தன் பெண்ணின் முடியை அவிழ்த்து அவள் முதுகின் ஈரத்தை மெல்லிய டவலால் துடைத்தாள்.
“எம்மா … நான் ஒண்ணு கேட்டா கோச்சிக்க மாட்டியே? சுகன்யா திரும்பிப் படுத்து தன் தாயின் முகத்தைப் பார்த்தாள்.
“என்ன பீடீகையெல்லாம் பெரிசாயிருக்குது”
“ம்ம்ம் … நான் கேக்கறதை நீ எப்படி எடுத்திப்பியோன்னு இருக்குதும்மா” சுந்தரி சற்று ஆச்சரியமானாள். எப்போதும் பட படவென்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசும் மகள் இன்னைக்கு எங்கிட்ட பேச ஏன் தயங்கறா?
“சொல்லுடி என்ன விஷயம்?”
“என் அப்ப்பா எங்க இருக்காருன்னு உனக்கு தெரியுமாம்மா? தயக்கத்துடன் வந்தன வார்த்தைகள். சுந்தரியும் ஒரு நொடி அதிர்ந்துதான் போனாள். தன் பெண்ணிடமிருந்து எள்ளளவும் இந்த கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அந்த விடிவிளக்கு வெளிச்சத்திலும் அவள் முகத்திலிருந்து தெரிந்தது.
“அந்தாள் பேச்சை யாராவது எடுத்தாக்கூட எண்ணையில விழுந்த வடை மாவு மாதிரி பொசுங்குவே, இப்ப இந்த கேள்விக்கு என்ன அவசியம்ன்னு எனக்கு புரியலை.”
“ உன் மனசை நான் புண்படுத்தியிருந்தா … சாரிம்ம்மா … சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.” சொல்லிவிட்டு சரெலென திரும்பி படுத்துக்கொண்டாள் சுகன்யா. சுந்தரியின் மனம் ஒரு நிமிடம் அதிர்ந்தது, தன் பெண் அழுகிறாளா?
“சுகா … சுகா என்னடி ஆச்சு; இப்ப ஏன் அழுவறே? இப்படி திரும்பு என் பக்கம்.” சுந்தரி அவள் தோளைப்பிடித்து தன் புறம் திருப்பினாள். சுகன்யா விம்மிக்கொண்டே எழுந்து, உட்க்கார்ந்திருந்த தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டவள், தன் முகத்தை அவள் மார்பில் புதைத்துக்கொண்டாள். அவள் முதுகு குலுங்கியது. பாவம் இந்த பொண்ணு; மனசுல எதை வெச்சுக்கிட்டு இப்படி புழுங்கிப் போறா? அழட்டும்; அவள் அழுது முடிச்சா அவ மனசுல இருக்கற பாரம் குறையும் என மவுனமாக இருந்த சுந்தரியின் முகம் உணர்ச்சிகளின்றி இருந்தது. சுகன்யாவுக்கு அப்ப வயசு என்ன? ஏழா இல்ல எட்டா? தன் கணவன் குமார் வீட்டை விட்டுப் போன பதினைஞ்சு வருசத்துக்குப்பறம்,
“அப்பா எங்கம்மா?” என் பொண்ணு என்னைக் கேக்கிறா? அவன் மேல இவளுக்கு தீடீர்ன்னு என்ன பாசம் பொங்குது? அவனா போனானா? நான் தானே அவன் தொல்லைத் தாங்கமா, வீட்டை விட்டு அடிச்சு விரட்டினேன்? அதனாலதான் இவ இந்த அளவுக்கு வாழ்க்கையில உருப்புட்டு இருக்கா; இல்லன்னா அவன் இவளையே வித்து குடிச்சிட்டிருப்பான்?”