மதன மோக ரூப சுந்தரி – 3 14

கிச்சன் விளைக்கை அணைத்துவிட்டு வெளியே வந்தபோதுதான்..

“தட்.. தட்.. தட்.. தட்..!!!”

என்று இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்த அந்த சப்தத்தை கவனித்தாள்.. எங்கிருந்து சப்தம் வருகிறதென திரும்பி பார்த்தாள்..!!

“தட்.. தட்.. தட்.. தட்..!!!”

வெளியில் வீசிய காற்றின் வேகத்தில்.. ஜன்னல் கதவுதான் அந்த மாதிரி அடித்துக் கொண்டு கிடந்தது.. அதனுடன் வெண்ணிற ஜன்னல் திரைச்சீலை வேறு உயரே எழும்பி பறந்து கொண்டிருந்தது.. ‘ஷ்ஷ்ஷ்ஷ்’ என்று காற்றின் சீற்றமான சப்தம்..!! ஒருகணம் யோசித்த ஆதிரா.. பிறகு அந்த ஜன்னலை நோக்கி நடந்தாள்..!! ஜன்னல் கதவைப்பற்றி, மூடுவதற்காக நகர்த்தியபோதுதான்.. தூரத்தில் அந்தக்காட்சி எதேச்சையாக அவளுடைய பார்வையில் விழுந்தது..!!

இருள் சூழ்ந்திருந்த காட்டுப்பகுதி.. மெல்லிய வெளிச்சத்துடன் புகைமாதிரி பனிமூட்டம்.. அகலமான மரத்தின் அடிப்பரப்பில் பாறை.. அந்த பாறையில் சிவப்பு அங்கி போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்த அந்த உருவம்.. அந்த உருவத்தை சுற்றி அமர்ந்திருந்த பறவைகள், காட்டு விலங்குகள்.. அந்த உருவம் ஏதோ உரையாற்றுவது போலவும், பறவைகளும் விலங்குகளும் அதை கவனமாக கேட்டுக் கொள்வது போலவும்.. பார்த்தாலே சில்லிட்டுப் போகிற மாதிரியான ஒரு காட்சி..!!

அதைக்கண்டதுமே ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. அவளுடய நாடி நரம்பெல்லாம் குப்பென்று ஒரு பய சிலிர்ப்பு..!!

“ஆஆஆஆஆஆ..!!”

அவளுடைய கட்டுப்பாடின்றி, அந்த வீடே அதிரும் அளவிற்கு கத்திவிட்டாள்.. பதறுகிற இருதயத்துடன் படிக்கட்டை நோக்கி திடுதிடுவென ஓடினாள்..!! ஆதிராவின் சப்தத்தில், மேலே சிபி பதறிப்போய் எழுந்தான்.. எழுந்த வேகத்தில் கதவு திறந்து வெளியே ஓடினான்..!!

“ஆதிராஆஆ..!!” என்று கத்திக்கொண்டே படிக்கட்டில் தடதடவென இறங்கினான்.

“அத்தான்..!!” அலறியடித்து ஓடிவந்த ஆதிரா சிபியை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

“ஆ..ஆதிரா.. ஆதிரா.. எ..என்னாச்சுமா..??”

“அ..அத்தான்.. அத்தான்..!!” ஆதிரா வார்த்தை வராமல் திணறினாள்.

“சொல்லுடா.. என்னாச்சு..??”

“அ..அங்க.. அங்க..”

“எ..என்ன அங்க..??”

“அ..அங்க.. அந்த உருவம்.. கு..குறிஞ்சி..!!”

“குறிஞ்சியா..?? எங்க..??”

“அ..அங்க.. ஜ..ஜன்னல்.. ஜன்னல்ல..!!”

இப்போது சிபியின் முகத்தில் ஒருவித இறுக்கமும், தீவிரமும்..!! ஆதிராவை அணைத்தவாறே அழைத்துக்கொண்டு அந்த ஜன்னலை நெருங்கினான்..!! ஆதிரா பயந்து நடுநடுங்கிப்போய் இன்னும் அவனது மார்புக்குள்ளேயே முகம் புதைத்திருந்தாள்.. சிபி மட்டும் ஜன்னல் கதவை தள்ளி வெளியே பார்வையை வீசினான்..!!

இப்போது பாறையில் அந்த உருவத்தை காணவில்லை.. சுற்றிநின்ற பறவை, விலங்குகளையும் காணவில்லை.. அமைதியாக, இருட்டாக வெறிச்சோடிப்போய் இருந்தது அந்த இடம்..!!

“எ..எங்க ஆதிரா..??”

“அ..அங்க.. அந்தப் பாறைல..!!”

“பாறைல எதுவும் இல்லயேடா..!!”

சிபி அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும்தான்.. ஆதிரா அவனுடைய மார்பிலிருந்து எழுந்தாள்..!! அவளுடைய முகம் வியர்த்துப்போய் பயம் அப்பிக்கொண்டு காட்சியளித்தது..!! இன்னும் மிரட்சி குறையாத கண்களுடனே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. அங்கே இப்போது அந்த உருவத்தை காணவில்லை என்றதும்.. அவளிடம் ஒரு திகைப்பு.. மூளைக்குள் ஒரு குழப்பம்..!!