மதன மோக ரூப சுந்தரி – 3 14

“வாவ்…!!!” என்றான் திடீரென.

“என்னத்தான்..??” வாயில் போட்ட பழத்துடன் கேட்டாள் ஆதிரா.

“அ..அங்க பாரேன்..!!”

“என்ன..??”

“பட்டர்ஃப்ளை ஆதிரா..!!”

அவன் கைநீட்டிய திசையில் அந்த பட்டாம்பூச்சி காட்சியளித்தது.. அதன் சிறகில் அப்படியொரு அழகுக்கலவையான பலவண்ண பூச்சுக்கள்.. இப்போது ஒரு செடியில் சென்றமர்ந்து மெலிதாக சிறகசைத்துக் கொண்டிருந்தது..!!

“எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!” சொல்லும்போதே சிபியிடம் அப்படி ஒரு உற்சாகம்.

“ம்ம்.. ஆமாத்தான்..!!” கணவனின் உற்சாகம் ஆதிராவையும் தொற்றிக் கொண்டது.

“ச்ச.. அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!”

“ம்ம்.. நல்ல ஆசைதான்.. ஹாஹா..!!”

“ஹேய்.. இரேன்.. நான் போய் கேமரா எடுத்துட்டு வந்துடுறேன்.. எனக்கு இதை ஃபோட்டோ எடுத்தே ஆகணும்..!!”

ஆதிராவின் பதிலை எதிர்பாராமலே காரை நோக்கி ஓடினான் சிபி.. உதட்டில் ஒரு புன்னகையுடன் அவனது முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா..!! ‘அப்படி என்னதான் இருக்கிறது இந்த பட்டாம்பூச்சியிடம்.. எப்போது எங்கே பார்த்தாலும் இப்படி குழந்தையாகி விடுகிறானே..?’ என்று நினைத்துக் கொண்டாள்..!! அதேநேரம்.. கணவனுடைய மென்மையான ரசனையும், மிருதுவான இயல்பும்.. அவளுக்கு ஒரு சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது..!!

“ச்சத்த்..!!”

திடீரென அருகே அந்த சப்தம் கேட்க.. ஆதிரா சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினாள்..!! அப்புறம் தனது புடவைத் தலைப்பை பார்த்ததும்தான் விஷயம் புரிந்தது அவளுக்கு.. ஏதோ ஒரு பறவையின் எச்சம்..!!

“ஐயே..!!”

என்று முகத்தை சுளித்தாள்..!! தலையை அண்ணாந்து பார்த்தாள்.. மேலே இரண்டு செங்கால் நாரைகள் சிறகடித்து பறந்துகொண்டிருந்தன..!! ஓரிரு வினாடிகள் அவஸ்தையாக நெளிந்தாள்..!! கணவனைப் பார்த்தாள்.. அவன் காருக்குள் புகுந்திருந்தான்.. கையை பார்த்தாள்.. கிண்ணம் காலியாகிற நிலையில் இருந்தது..!! நடந்து சென்று அந்த கிண்ணத்தை குப்பைக்கூடையில் எறிந்தாள்.. புடவைத்தலைப்பை தனித்துப் பிடித்தவாறே ஆற்றுப்பக்கமாக நகர்ந்தாள்..!!

“ஹேய்.. என்னாச்சு..??” எதிரே வந்த சிபி ஆதிராவை கேட்டான்.

“நாரை பொடவைல எச்சம் போட்ருச்சு அத்தான்..!!”

“ஹாஹா.. ஓகே ஓகே.. போய் வாஷ் பண்ணு போ..!!”