மதன மோக ரூப சுந்தரி – 3 14

அத்தியாயம் 10

கோயிலின் வாயிலில் இருந்து நீண்டிருந்த வீதியில்.. ஆண்களும் பெண்களும், பெரியவர்களும் சிறியவர்களுமாக திரள்திரளாய் கூட்டம்.. ஆதிராவும் அந்தக் கூட்டத்துக்குள் ஒருஆளாய் நின்றிருந்தாள்.!! இரவு நேரம் அது.. குழல் விளக்குகளும் சீரியல் விளக்குகளும்தான் அந்த இடத்தை வெளிச்சமாக வைத்திருந்தன..!! திடும்திடுமென முழங்கிய மேளச்சத்தம் காதைக் கிழித்தது.. கிறுகிறுவென சுற்றிய ராட்டினங்கள் கண்ணைக் கவர்ந்தன..!!

காவி வேஷ்டியும், காலில் சலங்கையும், கையில் பறையுமாக இருந்த சில இளைஞர்கள்.. நான்குக்கு நான்கு என்று வரிசையமைத்து கூடிக்கொண்டு.. கையிலிருந்த பறையை குச்சியால் ‘டமார் டமார்’ என்று ஒத்திசைவுடன் தட்டியவாறே.. காற்சலங்கைகள் ‘ஜல் ஜல்’ என்று ஒலியெழுப்புமாறு.. வீதியில் நளினமாக ஆடிவந்தனர்..!!

அவர்களுக்கு பின்னே.. காலையில் முயல் வேட்டைக்காக காட்டுக்குள் சென்றிருந்த வாலிபர்களும் சிறுவர்களும்.. இப்போது வெற்றிப் பூரிப்புடன் கம்பீரமாக நடந்துவந்தனர்..!! நடந்து வந்தவர்களின் ஒருகையில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற ஆயுதம்.. வேல்க்கம்பு, குத்தீட்டி, இரும்புக்கழி..!! அவர்களது இன்னொருபக்க தோளில் நீளமான ஒரு கொம்பு.. அந்த கொம்பில் அவர்கள் வேட்டையாடிய முயல்கள் உயிரற்று தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தன..!!

ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு.. திடீரென தங்கையின் ஞாபகம் வந்தது.. தலையை திருப்பி பக்கவாட்டில் பார்த்தாள்.. அருகில் தாமிரா இல்லாமல் போனதும் ஆதிராவிடம் ஒரு சிறுபதற்றம்..!! தலையை அப்படியும் இப்படியுமாய் சுழற்றி.. பார்வையாலேயே தாமிராவை தேடினாள்..!! சற்று தொலைவில்.. கூட்டத்தை விலக்கியவாறு சென்றுகொண்டிருந்த தாமிரா.. இப்போது ஆதிராவின் பார்வையில் பட்டாள்..!!

“தாமிராஆஆ..!!”

ஆதிரா இங்கிருந்து கத்தியது தாமிராவின் காதில் விழவில்லை.. மேலும் மேலும் முன்னேறி, கூட்டத்தில் இருந்து விடுபட்டாள்..!! ஏதோ ஒரு வசியத்துக்கு கட்டுப்பட்டவள் மாதிரி.. எந்திரம் போல கோயிலின் பின்புற இருட்டுக்குள் நடந்தாள்..!! இப்போது ஆதிரா அவளுடைய இடத்திலிருந்து கிளம்பினாள்.. நெருக்கியடித்து நின்ற கூட்டத்துக்குள் முண்டியடித்து, தங்கை சென்ற திசையிலேயே நகர்ந்தாள்..!! ‘ஊஊஊஊஊ’ என்று பெண்கள் குழவையிடும் சப்தம் ஒருபுறம் கேட்டுக்கொண்டிருக்க.. ஆதிரா கஷ்டப்பட்டு கும்பலை விலக்கி வெளியே வந்தாள்..!!

“தாமிராஆஆ..!!”

என்று கத்திக்கொண்டே தங்கை சென்ற பக்கமாக நடந்தாள்..!! கோயிலின் பின்பக்க பிரதேசம் இருண்டு போயிருந்தது.. நிலவின் மசமசப்பான வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது..!! நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த மரங்கள் எல்லாம்.. கருப்பு பிம்பங்களாகவே காட்சியளித்தன..!! ஆதிரா இருட்டுக்குள் தடுமாற்றமாய் நடந்தவாறே.. தங்கையை பெயர்சொல்லி அழைத்தவாறே சுற்றும் முற்றும் தேடினாள்..!!

“தாமிராஆஆ.. தாமிராஆஆ..!!”

தாமிரா எங்கே சென்றாள் என்றே தெரியவில்லை.. அதற்குள் மாயமாக மறைந்து போயிருந்தாள்..!! தங்கையை காணாத ஆதிராவுக்கு நெஞ்சு பதறியது.. அவசரம் தொற்றிக்கொண்டவளாய் அங்குமிங்கும் ஓடினாள்.. மரங்களுக்கு இடையில் புகுந்து பதைபதைப்புடன் தங்கையை தேடினாள்..!! சிறிதுநேர தேடுதலுக்கு பிறகு.. ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த தாமிரா பார்வையில் தென்பட்டாள்.. கருப்புஉடை அணிந்திருந்த அவளது முகம் மட்டும் அப்படியே வெளிறிப் போயிருந்தது..!! தங்கையை கண்டுவிட்ட மகிழ்ச்சியில்..

“தாமிராஆஆ..!!”