அசுரன் Part 4 67

நிலவொளி அரண்மனை முற்றத்தின் வழியே கீற்றுகளாக விழ,ஒரளவு வெளிச்சம் தெரிந்தது.

அங்கே மனித உருவில் சிலை ஒன்று,உட்கார்ந்து இருப்பது போல் இருந்தது.எரிமலை அதன் மடியில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்து கண்மூடி இளைப்பாறினான்.

“ஆகா கல் சிலை என்றாலும் இதன் மடி நல்லா மெத்து மெத்தென்று இருக்குதே என்று தலை சாய”அப்பொழுது சிலையின் கைகள் தானாக உயர்ந்து அவன் நெஞ்சை தடவியது.

“அப்படி தான், சுகமா இருக்குது”என்று எரிமலை சற்று ஆசுவாசமாக சடாரென அவன் மூளையில் பல்பு எரிந்தது.

யார் நம் நெஞ்சை தடவி கொண்டு இருப்பது என கண் விழித்து பார்க்க,சிலையின் கை தன் நெஞ்சில் இருப்பதை பார்த்து அலறி அடித்து மாடிக்கு ஓட்டம் பிடித்தான்.

மாடியில் தொங்கவிட்டு இருந்த திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து கொண்டான்.ஆனால் திரைச்சீலை தானாக நகர மீண்டும் இழுத்து மூடினான்.ஆனால் திரைச்சீலை மீண்டும் நகர, பயந்து இன்னொரு அறைக்கு ஓட்டம் பிடித்தான்.

அந்த அறையில் ஒரு பெரிய புகைப்படத்தில் அழகான பெண் ஓவியமாக இருப்பதை பார்த்து ” யார் இந்த அழகான பெண்”என்று கேட்டான்.

“அவ பேர் மதிவதனி”என்ற குரல் வந்தது.

“என்ன இங்கே ஓவியம் எல்லாம் பேசுது”என எரிமலை பேசியது அவனுக்கே கேட்க வில்லை.

“ஓவியம் எல்லாம் பேசல,நான் தான் பேசினேன் எரிமலை” என்று அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

உடனே “பே…..”என்று எரிமலை அலறினான்.

“கத்தாதே, கத்தாதே நான் தான் ஆராதனா..” என்று கூற எரிமலைக்கு போன உயிர் திரும்ப வந்தது.

“அடிப்பாவி,என்னை இங்கே கொண்டு வந்து அநியாயமாக கோர்த்து விட்டுட்டேயே.இங்கே சிலை எல்லாம் உயிரோடு இருக்குது.துணி ஸ்கிரீன் தானா விலகுது.என்னை கொண்டு போய் ஒழுங்கா வீட்டில் விடு” என அழுதான்.

“ஏய் அழாதடா,இங்கே பேய்கள் இருக்குது”

“என்னது பேய்களா?ஒரு பேய் என்றாலே உச்சா…..போய் விடுவேன்.ஆனா நீ பேய்கள் என்று சொல்ற,மொத்தம் எத்தனை பேய்கள் இருக்கு?”எரிமலை பயந்து கொண்டே கேட்டான்

ஆராதனா அதற்கு “அது ஒரு ஏழு,எட்டு பேய்கள் இருக்கு என்று நினைக்கிறேன் எரிமலை,எல்லாம் பல நூற்றாண்டு பேய்கள்.முக்தி அடையாமல் சுத்திட்டு இருக்கு.”

ஆமா இது உனக்கு எப்படி தெரியும்?எரிமலை கேட்க,

“அது, இந்த ஓலைச்சுவடியில் எழுதி இருக்குதுடா மரமண்டை”என ஆராதனா ஒரு ஓலைசுவடி கட்டை காட்டினாள்.

“அய்யோ ஏழெட்டு பேய்களா,அவ்வளவு தான்..அதுங்க வந்து நம்மை கடித்து குதறி,நாமளும் ஆவியாகி இங்கேயே சுற்ற வேண்டியது தான்”என எரிமலை பதறினான்.

சத்தம் போடாதடா, ஆமா உன் உடம்பு ஏன் இப்படி தொப்பலாக நனைஞ்சு இருக்கு.

“அடிப்போடி,பயத்தில் உச்சாவே வந்துருச்சு”

“ச்சீ,அது தான் யூரின் ஸ்மெல் ஹெவியா வருதா..!நீ கொஞ்சம் தள்ளியே வா.”

“முதலில் வெளியே போகும் வழியை பாரு.”

ஆராதனா,எரிமலை வெளியேற வழியை தேடி கொண்டு இருக்கும் பொழுது,காற்று தீடீரென பலமாக வீச தொடங்கியது.ஜன்னல்கள் படபடவென அடிக்க தொடங்கியது.வெளியே ஓநாய்களும்,நரிகளும் ஊளை இட தொடங்கின.இருவருக்குமே பயத்தில் கை கால் நடுங்க தொடங்கியது.

ஒவ்வொரு ஜன்னல் வழியே,புகையாக பேய்கள் வர இருவரும் ஓட தொடங்கினர்.ஒவ்வொரு அறையாக பேய்கள் அவர்களை துரத்தி கொண்டு வந்தது.மூச்சிரைக்க இருவரும் தடுமாறி விழுந்தனர்.பேய்கள் அவர்களை நெருங்க தொடங்கியது.பயத்தில் இருவர் உடலும் நடுங்க தொடங்கியது.ஆராதனா தரையில் கைகளால் துழாவ அவள் கையில் ஒரு குடுவை சிக்கியது.

அந்த குடுவையை முகத்திற்கு நேராக வைத்து ஆராதனா நீட்ட,வீசிய காற்று நின்றது.படபடவென அடித்த ஜன்னல்கள் நின்றன.ஓநாய்,நரி சத்தம் நின்றது.பேய்கள் தீடீரென மறைந்தன.