சரி நான் பார்த்துக்கிறேன்.என் கூட வந்த ஆளு வர்றான்.அந்த கோட்டை பற்றி எதுவும் அவனிடம் உளறி வைக்காதே.அவன் ஏற்கனவே சரியான பயந்தாங்கொள்ளி.முதலில் எங்களை நல்ல ஓட்டல் கூட்டிட்டு போ.refresh ஆன பிறகு அங்கே போகலாம்.
சரி மேடம்.
எரிமலை வந்த உடன் “போலாமா எரிமலை?”என ஆராதனா கேட்க,அவனும் அல்வா மேல் இருக்கும் ஆசையில் ஆர்வமாக “ரெடி” என்று சொன்னான்.
சிங்கம்புணரி கிராமம் செல்லும் வழியில் இருபக்கமும் இயற்கை அற்புதமாக இருந்தது.வெள்ளி சரிகை போன்ற நீரோடைகளும்,பச்சை பசேல் என்ற புல்வெளிகளும் கண்ணை கவர்ந்தன.
“ஆரும்மா,இருட்டு கடை அல்வா நெல்லையப்பர் கோவில் வாசலில் தானே இருக்கு,ஆனால் நீ வேற எங்கேயோ போய்ட்டு இருக்கே?”எரிமலை கேட்டான்.
அது ஒன்னும் இல்லை எரிமலை,அங்கே இருப்பது வெறும் கடை தான்.தயாரிப்பது எல்லாம்,மேலே தாமிரபரணி ஆறு உற்பத்தி ஆகும் இடத்தில் தான்.அங்கே தான் போய்ட்டு இருக்கோம்.
சிங்கம்புனரி கிராமம் வந்து சேர,மதியம் 3 மணி ஆகி விட்டது.
எரிமலை நீ இங்கேயே இரு.நான் ஊரில் போய் கொஞ்சம் விசாரித்து விட்டு வருகிறேன்..
ஆராதனா ஊரில் சென்று விசாரிக்க,எல்லோரும் அந்த மாயமலை பேரை கேட்டாலே பயந்து நடுங்கினர்.
அதில் ஒரு பெரியவர் மட்டும் தைரியமாக அங்கு பார்த்ததை கூற தொடங்கினார்.
அங்கு நிறைய பேய்கள் நடமாடுகின்றது தாயி.அவைகள் பல நூற்றாண்டுகளாக முக்தி அடையாமல் தவித்து வருகின்றன.அதில் தலைமை பேயான காத்தவராயன் ,மதிவதனியின் மறு பிறப்புக்காக காத்து இருக்கான்.தினமும் அந்த பேய்கள் இரவில் ஊளை இடும் சத்தம் அடிவாரம் வரை கேட்கிறது எனவும் கூறினார்.
“ஐயா,நீங்க அங்கே போய் இருக்கீங்களா.”என ஆராதனா கேட்டாள்.
ஒரு நாற்பது வருஷம் முன்னாடி,நான் மலையில் ஆடு மேய்ப்பேன் தாயி.அப்போ என்னோட ஒரு ஆடு மட்டும் அந்த கோட்டைக்குள் போய்டுச்சு.அதை எப்படியாவது வெளியே கொண்டு வர போனேன்.உள்ளே போனால் ஆடு மட்டும் துண்டு துண்டாக சிதறி கிடந்தது.உடனே ஓடி வந்துட்டேன்.அப்புறமா அந்த பக்கம் போறதே இல்ல.
“உங்களை தவிர,வேறு யாராவது அங்கே போய் இருக்காங்களா ஐயா.”
வெள்ளைக்காரன் காலத்தில் அந்த கோட்டைக்கு போவதற்கு ஆற்றின் மேல் ஒரு பாலம் போட்டாங்க தாயி.அங்கே ஒரு வெள்ளைக்கார குடும்பம் தங்கி இருந்தாங்க,ஆனா தங்கிய இரண்டே நாளில் அவங்க குடும்பத்தில் அமானுஷ்யமான முறையில் 4 பேர் அங்கே செத்து போய் இருக்காங்க.எத்தனை எத்தனையோ மந்திரவாதிகள் வந்து பூஜை பண்ணியும் ஒன்னும் நடக்கல.உடனே அந்த வெள்ளைக்காரங்க காலி பண்ணி ஓடிய பிறகு யாரும் அந்த பக்கம் தலை வைத்து கூட படுப்பது இல்லை.
ஆராதனாவிற்கு ஆர்வம் அதிகமாகி விட்டது.என்ன தான் அங்கே இருக்கிறது என்று வெளியுலகத்திற்கு காட்டுவது என முடிவெடித்து கொண்டாள்.
காரில் ஏறி கொண்டாள். மாயமலை நோக்கி காரை செலுத்தினாள்.
ஆரும்மா, எங்கே அந்த டிரைவர்.?எரிமலை கேட்க
ஆராதனா பதிலுக்கு “அவனோட சொந்தக்காரங்க இங்கே இருக்காங்க,அவன் பார்க்க போய் இருக்கான்.அதற்குள் நாம் மேலே போய் தகவல் சேகரித்து வந்து விடலாம்.
போகும் வழியில் ஒரு புலி பாறையின் மேல் படுத்து இருப்பதை எரிமலைக்கு காண்பிக்க அவன் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
மேலே ஏற ஏற செல் ஃபோன் சிக்னல் விட்டு போனது.
“ஏன் ஆரும்மா,இந்த மலை மேலேயா அல்வா தயாரிக்கறாங்க”
“பின்னே ஆறு மலை மேல தானே உற்பத்தி ஆகும்,அந்த தண்ணீர் எடுத்து தான் அல்வா தயார் செய்யறாங்க.”
மாயமலை இனிதே வரவேற்கிறது என்ற வளைவு வரவேற்றது.பாலத்தை கடந்து உள்ளே கோட்டை வாசலில் காரை நிறுத்தினாள் ஆராதனா.
மணி நான்கு ஆகி விட்டு இருந்தது.எப்படியாவது இருட்டுவதற்குள் விவரங்களை சேகரித்து கொண்டு வெளியே வந்து விட வேண்டும் என நினைத்தாள்.
